விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் எத்தனம்

குழந்தை மலர்களை அன்பு செலுத்தி அரவணைக்க வேண்டிய கரங்ளுக்கு இப்படி ஒரு ஆய்வு எழுத வேண்டிய நிலைமை உருவானது ஏன்?
இன்றைய உலகில் 246 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொத்தடிமைகளாக, பாலியல் பண்டங்களாக வன்முறைகள் மிக்க நெருக்குதல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருப்பதாக யுனிசெப் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சிகளை ஏற்படுத்துகிறன. ஜீரணிக்க முடியாத கசப்பான, மிலேச்சத்தனமான உண்மையிது.
பனித்துளி பட்டாலே உதிர்ந்து போகும் ரோஜாயிதழ் இரசாயனத்துளி பட்டால் உருகிக் கருகிப்போகுமே என்பதற்கு இணங்கத்தான் அறிந்தோ அறியாமலேயோ வன்முறைகளுக்குட்படும் சிறுவர்களும் குறுகிய காலத்துக்குள் உருகிக் கருகிப்போவது துர்ப்பாக்கியம் மிக்கதோர் பரிதாபம்.
ஆற்றோரம், வயலோரம் , வைக்கோல் குமியலோரம் கொஞ்சி விளையாட வேண்டிய பிஞ்சுமனச் சிறார்கள், பால்மணம் மாறும் முன்பே பாலியலுக்குள் பாழ்படுத்தப்படுவது எழுத்தில் வடிக்க முடியாததோர் அசிங்கம்.
அதேநேரம் , உலகளாவிய ரீதியில் மேற்படி சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஊடகங்கள் எடுத்துவரும் பிரயத்தனம் மிக முக்கியமானதொன்று.
இந்நிலையில், சிறுவர் மீதான வன்முறைகள் உக்கிரம் பெற்றிருக்கும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் உட்பட்ட தெற்காசிய நாடுகளில் விழிப்புணர்வுக்கான ஊடகங்களின் எத்தனம் சாத்தியமா? அந்த இலக்கு எதை நோக்கி, எந்த வடிவில் அமையப் பெற்றிருக்கிறது. என்பது தொடர்பிலேயே இந்த மினி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சிறுவர் வன்முறைகள்

யுனிசெப் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடைசியாக மேற்கொண்ட ஆய்வுகளின் படி உலகில் 246 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இவர்கள் 05 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பது நெஞ்சை உறைய வைக்கிறது.
சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் அண்மைக்காலத்தில் வெளியிட்ட தகவல்களின் படி சிறுவர் மீதான வன்முறைகள் மற்றும் நெருக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவுக்கு மட்டும் ஒவ்வொரு வாரமும் ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட:டு வருகின்றன.
2002 ஆம் ஆண்டு மட்டும் 4.5 மில்லியன் சிறுவர்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைய அவர்களில் 67 வீதமானவர்கள் செய்த முறைப்பாடுகளை விசாரித்ததின் பேரில் உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் மீது பிரதான நான்கு அம்சங்களின் அடிப்படையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாக அறிந்து கொள்ள முடிகின்றது. அதன்படி,
அ. உதாசீனமும் ஓரவஞ்சனையும்
ஆ. உடல்ரீதியான வன்முறைகள்
இ. பாலியல் வன்முறைகள்
ஈ. உணர்ச்சி மீதான வன்முறைகள்
என்கிற பிரிவுகளின் கீழேயே சிறுவர்கள் அதிகம் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
காலம் காலமாக ஐந்து வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களே மேற்சொன்ன நான்கு அம்சங்களின் அடிப்படையில் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலைமை மாறிப்போய் இன்று 0-17 வயது எல்லைக்குள் சிறுவர்கள் வன்முறைகளுக்குள் பாழ்படுத்தப்படும் கொடுமை உலகளாவிய ரீதியில், குறிப்பாக தெற்காசிய நாடுகளில் வலுப்பெற்றிருக்கிறது.
உலகில் வன்முறைகளுக்கு ஆட்படுத்தப்படும் முழு மொத்த சிறுவர் தொகையில் சரிபாதி வீதமானோர்- ஏறக்குறைய 130 மில்லியன் சிறுவர்கள் ஆசிய மற்றும் பசுபிக் வலய நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இனங் காணப்பட்டிருக்கிறார்கள்.
வறுமையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், ஜாதி, இன, மத, குல, கோத்திர ரீதியிலான பிரித்துப்பார்க்கும் போக்கு, ஸ்திரமற்ற அரசுகளும் அவற்றின் கொள்கைகளும் சரிவராத திட்டமிடல்களும், நீதித்துறைச் செயற்பாடுகளின் காத்திரமின்மை, அசமந்தப் போக்குகளும் மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலைமைகளுமே ஆசிய- பசுபிக் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் சிறுவர் மீதான பல்வேறுபட்ட வன்முறைகளும் அதிகரித்திருப்பதற்கு காரணங்கள் எனலாம்.
சிறுவர்கள் மீதான உதாசீனமும் ஓரவஞ்சனையும்
சிறுவர்களுக்கான அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதும், அவர்களது தேவைகள் நிராகரிக்கப்படுவதும், பெற்றோர்களும், சமூகங்களும், அரசாங்கங்களும் அவர்களைப் புறக்கணித்து வீடுவதுமே சிறுவர்கள் மீதான உதாசீனமும் ஓரவஞ்சனைப் போக்கும் இன்று மிலேச்சத் தனமான போக்கில் அதிகரித்திருப்பதற்கு வலுவான காரணங்களாக இருக்கின்றன.
45 இலட்சம் சிறுவர்கள் செய்த முறைப்பாட்டை ஆராய்ந்ததில் 896000 சிறுவர்கள் மேற்படி புறக்கணிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டிருப்பதாகவே தெரியவந்துள்ளது. உலகில் நாளொன்றுக்கு சராசரியாக 2450 சிறுவர்கள் பல்வேறு காரணிகளால் புறக்கணிக்கப்பட்டும் ஓரவஞ்சனைக்கு உட்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள்.
அண்மைக்காலத் தரவுகளின் படி ஓரவஞ்சனை மற்றும் புறக்கணிப்புப் போக்கினால் ஒரு நாளைக்கு சராசரியாக 4 சிறுவர்கள் மரணத்தைத் தழுவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கேயும் அப்பாவிச் சிறுவர்கள் அதிகம் உடல் ரீதியாக, மருத்துவ ரீதியாக, கல்வி ரீதியாக, உணர்ச்சி மீதும், உள ரீதியாகவுமே அதிகம் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
உடல் ரீதியான உதாசீனம்.:
பல்வேறு காரணங்களினால் சராசரி சிறுவன் ஒருவனுக்கான உணவும், உறைவிடமும் மறுக்கப்படுவதே உடல் ரீதியான வன்முறைக்கு அடிப்படையாகின்றது.
அன்பும் அரவணைப்பும் மிக்க ஆரோக்கியமான வாழ்விடச் சூழல் மற்றும் சக்தி மிக்க சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படும் சிறுவர்களே அதிகம் வீதியோரச் சிறுவர்கள் என்கிற ஸ்தானத்தில் வன்முறைகளுக்கு ஆட்படுகின்றனர்.
நாளாந்தம் வன்முறைகள் பிரயோகிக்கப்படும் சிறுவர் தொகையில் 20 வீதமானோர் மேற்படி உடல் ரீதியான வன்முறைகளுக்கே ஆட்படுகின்றனர். மட்டுமின்றி, இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வன்முறைகளுக்குள்ளாகும் மூன்று சிறுவர்களுக்கு இருவர் மேற்படி உடல்ரீதியான வன்முறைகளுக்கே உள்ளாகியுள்ளனர்.
மருத்துவ ரீதியிலான புறக்கணிப்பு:
சிறுவர்களுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் உளவியல் சிகிச்சைகள் புறக்கணிப்படுவதும், மேற்படி மருதுதுவத் தேவைகளிலிருந்து அவர்கள் அறிந்தோ அறியாமலோ து}க்கி எறியப்படுவதும் அதிகம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பிரயோகிக்கப்படும் சிறுவர்கள் மீதான வன்முறைகளாக இருக்கின்றன.
2002ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி சிறுவர் வன்முறைகளில் ஈடுபடுத்தப்பட்டும் , மருத்துவம் புறக்கணிக்கப்பட்டும் நாளொன்றுக்கு 1400 சிறுவர்கள் பரிதாபகரமாக மரணத்தைத் தழுவியுள்ளனர். இவர்களில் 41 வீதமான சிறுவர்கள் ஒரு வயதுக்கு குறைந்தவர்களாகவும், 76 வீதமானோர் 04 வயதுக்குக் குறைந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
இவற்றில் அதிகமான சிறுவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது நாம் எல்லோரும் உயிரில் நடுங்கக்கூடிய பரிதாபம் மட்டுமன்றி கொடூரமும் கூட.
கல்வி ரீதியலான புறக்கணிப்பு:
சிறுவர்களுக்கான அறிவூட்டல் செயற்பாடுகள் புறக்கணிக்கப்படுவதும், வலது குறைந்த சிறுவர்களுக்கான விசேட கல்வி நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுவதும்கூட இன்றைய சிறுவர் மீதான வன்முறைகளுக்கு இன்னுமோர் பிரதான அடிப்படைக் காரணமாக இனங்காணப்பட்டுள்ளது.
வன்முறைகளுக்கு சுலபமாக இலக்கு வைக்கப்படும் வீதியோரச் சிறுவர்கள், அனாதைச் சிறுவர்கள் மற்றும் சேரிப்புறங்களில் வாழும் சிறுவர்களே அதிகம் அதிகம் கல்வி ஊட்டல் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிப்படுகிறார்கள். சிறுவர் மீதான பாலியல் உட்பட்ட சகல விதமான வன்முறைகள் மற்றும் சிறுவர் தொழிலாளர் அதிகரிப்பு வீதத்தைக் கட்டுப்படு;த்த வேண்டுமாயின் அவர்க்ள் மீதான கல்வி சார் புறக்கணிப்பை முற்றுமுழுதாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
உணர்ச்சி மீதான உதாசீனம்:
சிறுவர்களின் உளரீதியிலான தேவைகள் வழங்கப்படாமை அல்லது அதன் மீது கவனம் செலுத்தாமை மற்றும் மது, போதை உபயோகம் தொடர்பில் அவர்களைத் து}ண்டுவுதும் வலியுறுத்துவதும் அல்லது அவ்வாறான பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கும் சிறுவர்களைத் தடுக்காமை ஆகியனவும் சிறுவர் வன்முறைகளின் ஒரு வடிவமே.
தவிரவும் , சிறுவர்களின் இயல்புக்கும் இயற்கைக்கும் முரணாக முறைகேடான முறையில் அவர்களை விமர்சிப்பது, அவர்களுக்கான தேவைகள், விருப்பு வெறுப்புக்களை மறுப்பது ஏன் தடுப்பதும் கூட அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளாகும்.
சிறுவர் வன்முறைகளில் பாதிக்கப்படுபவர்களில் 07 வீதமானவர்கள் இந்த உணர்ச்சி மீதான வன்முறைப் பட்டியலிலேயே உள்வாங்கப்பட்டுள்ளனர்
சிறுவர் தொழிலாளர்கள்
சிறுவர்கள் மீதான ஓரவஞ்சனை மற்றும் புறக்கணிப்பின் மேற்சொன்ன சகல வடிவங்களுமே சிறுவர்களைத் தொழிலாளர்களாகவும், மறைமுக கொத்தடிமைகளாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றன.
இவற்றில், வயிற்றுப் பசியும், வாழ்வதற்கு ஏதோ ஒரு குடிசை என்கிற தேவைகளே அதிகம் சிறுவர் தொழிலாளர்களை உருவாக்கி விட்டிருப்பாக தரவுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் 250 மில்லியனை அண்மிக்கும் சிறுவர்கள் தமது 05-12 வயது எல்லைக்குள் தம்மை ஏதோ ஒரு தொழிலில் ஈடுபடுத்திக்கொண்டிருந்த நிலைமை மாறி, தற்போது 0-15 வயதுக்கு இடைப்பட்ட வயதுக்குட்பட்ட சிறுவர்களே தொழிலாளர்களாக மாறியிருக்கும் நிலைமை கண்டறியப்பட்டுள்ளது.
மற்றும், மில்லியன் கணக்கான சிறுமிகள் உள்ளுர், வெளிநாடுகளில் சட்டத்திற்கு புறம்பான விதத்தில் பணிப்பெண்களாகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தெற்காசிய நாடுகளிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளவர்களில் அனேகர் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகள். போலிக் கடவுச்சீட்டு மூலம் தரகர்களின் தந்திர உபாயத்தில் இவர்கள் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்,சர்வதேச விமான நிலையங்களின் சோதனைகள் தாண்டி இவர்கள் அனுப்பப்பட்டதில் பல இடங்களிலும் இலஞ்சம் விளையாடியிருக்கிறது.
வயது எல்லை 05 -17க்கு இடைப்பட்ட 218 மில்லியன் சிறுவர் தொழிலாளர்களுக்கிடையிலான கணக்கெடுப்பின் பிரகாரம் ஆசிய மற்றும் பசுபிக் வலய நாடுகளே அதிகமான சிறுவர் தொழிலாளர்களைக் கொண்டிருக்கின்றன.
இங்கு 127.3 மில்லியன் சிறுவர்கள் முறைகேடான முறையில் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். முழு மொத்த சிறுவர் தொழிலாளர் எண்ணிக்கையில் இது 53 வீதமாகும்.
இதற்கடுத்த, சிறுவர்களை வேலைக்கமர்த்தியிருக்கும் இரண்டாவது ஸ்தானத்தில் உப சகாரா ஆபிரிக்க நாடுகள் இனங்காணப்பட்டுள்ளன. 48 மில்லியன் சிறுவர்கள் இங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சிறுவர் முழுமொத்த தொழிலாளர்களில் இது 29 வீதமாகும்.
இதேநேரம் , 16 வீதமான சிறுவர் தொழிலாளர்கள் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் தொகை 17.4 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளில் 15 வீதமான சிறுவர் தொழிலாளர்கள் ஏதேதோ தொழிற்றுறைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இங்கு 1.2 மில்லியன் சிறுவர்கள் அவர்களே பின்விளைவுகள் மற்றும் பாரது}ரம் அறியாத வகையில் குற்றச் செயல் சார்பு தொழில்களில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம், 1.8 மில்லியன் சிறுவர்கள் பாலியல் தொழிலாளர்களாகவும், 0.3 மில்லியன் சிறுவர்கள் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத நடவடிக்கைகளிலும், 0.6 மில்லியன் சிறுவர்கள் வெவ்வேறான இன்னும் பல தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
உலகின் மொத்த சிறுவர் தொழிலாளர்களில் 70 வீதமானோர் விவசாயத் துறைகளிலேயே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர் விபசாரமும் பாலியல் வன்முறைகளும்
1980களில் 14-16 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளே விபசாரம் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்துனர். அதன் பின்பு இந்த வயது வரம்பு 10-14 ஆகக் குறைந்தது. சமீபத்தில் எடு;க்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்கூட பாலியல் தொழிலிலும் பலாத்காரத்திலும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்கிற அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் விசேட ஆணைக்குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் சிறுவர் தொழிலாளர் முழுமொத்தத் தொகையில் 53 வீதமானோர் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அறியப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 06 கோடி குழந்தைத் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக ஆக்கியுள்ள இந்தியாவில் அரைவாசிக்கும் மேற்பட்ட கொத்தடிமைக் குழந்தைகள் சிறுவர் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் தரகர்களிடம் விற்கப்படுவதாகவும், அவர்கள் சிறு வயதிலேயே எயிட்ஸ் போன்ற கொடூரமான உயிர்க் கொல்லி நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் போதை மற்றும் குற்ற அலுவல்கள் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை, நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் சிறுவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தவிரவும், மேற்படி நாடுகளின் கல்வி அறிவு குன்றிய கிராமங்களில் தந்தையே தனது சிறுவயது மகளை தனது காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டதாகவும், அண்ணனே தங்கையை பாலியல் வடிகாலாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.
மட்டுமின்றி, மேற்சொன்ன தெற்காசிய நாடுகளில் கால்பதிக்கும் மேற்கத்தேய நாடுகளின் அரச சார்பற்ற நிறுவனங்கள், தூதரகங்களுக்கு பணிக்கென்று வரும் மேற்கத்தேயர்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் ஆகியோர் அப்பாவிச் சிறுவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் போக்கும் இப்போது அதிகரித்துக் காணப்படுகின்றது.
முறைகேடான இந்த பாலியல் கலாசரம் தெற்கு- தென்கிழக்கு நாடுகளிலும், மூன்றாம் தர மண்டல நாடுகளிலும் சர்வ சாதாரணமாகப் பரவி புரையோடிப் போயிருப்பதே இன்று தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள சிறுவர் தொழிலாளர்களில் 35 வீதமானவர்கள் 12-17 வயதுக்குட்பட்ட பாலியல் தொழிலாளர்களாகவே இருக்குமிடத்து, மெக்ஷிகோ சமூக சேவை நிறுவனம் ஒன்று எடுத்த கணக்கெடுப்பின் படி அங்கு 16 ஆயிரம் சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு டாலர்களை அபகரிக்கத் துடிக்கும் ஈவிரக்கமற்ற தரகர்களே அதிகம் கிராமப்புறங்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளை மட்டுமன்றி பாடசாலைச் சிறுவர்வளையும் கடத்தி வந்து பாலியல் தொழிலுக்குள் தள்ளிவிடுகின்றனர்.
மட்டுமன்றி சோப்பு, சீப்பு போன்ற சில்லரைத் தனமான வெளிநாட்டுப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு ஒருவிதமான மோகத்தில் வெளிநாட்டவர்களின் காம இச்சைகளுக்குப் பலியாகும் சிறுவர்களும் இருக்கத்தான செய்கிறார்கள்.
இலங்கை, இந்தியா, மாலைதீவு போன்ற சில நாடுகளின் கடற்கரைகளில் வெளிநாட்டவர்களுக்கு உடம்பு விற்பனை செய்வதற்கென்றே சில கடற்கரையோரச் சிறுவர்கள் எபபோதும் ஆயத்தமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மிகுந்த அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் இந்தியாவின் கோவா கடற்கரை மற்றும் கோவாவின் சுற்றுலாத் தொழில்களால் 13 லட்சம் கோவா மக்களில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கினருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலைவாய்ப்புக் கிடைக்கின்றது.
சுற்றுலாதான் கோவா மக்களுக்கு சோறு போடுவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாத் துறையை அங்கு மேலும் விஸ்தரிக்க நினைக்கும் அரசாங்கம், அங்கு செக்ஸ் டூரிசம் நடப்பதையும், சிறுவர்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதையும் கண்டுகொள்ளாமல்தான் இருக்கிறது.
கோவாவின் பிரபல பத்திரிகைகள் கோவா கடற்கரையை ஓரினச் சேர்க்கை மையம் என்று கூறி காரசாரமாக கட்டுரைகள் எழுதியும் கூட, சிறுவர் விபசாரத்திற்கு கோவா தோதான இடம் என்று இன்ரர்போல் கூறியும் கூட கோவா மாநில அரசு அன்னியச் செலாவணி குறையக் கூடாது என்பதற்காக இந்த விடயத்தைக் கண்டுகொள்வதில்லை.
திறந்த வெளியில் அரங்கேறும் மேற்படி சிறுவர் விபசார - வியாபாரக் குற்றங்களுக்குப்புறம்பாக, இரகசியமாக நான்கு சுவர்களுக்குள் நெருக்குதல்களுக்குள்ளாகும் சிறுவர் சிறுமிகள் பாலியல் ரீதியாக அதிகம் சித்திரவதைகளுக்குள்ளாகின்றனர்.
தமது தொழில் நிறுவனத்ததிற்கு அல்லது வீட்டு வேலைகளுக்கு அமர்த்தும் குழந்தைத் தொழிலாளர்களை முதலாளிமார் அல்லது சக வயது வந்த தொழிலாளர்கள் ரூ இன் வன் களாக தொழிலுக்கென்றும் பாலியல் தேவைக்கென்றும் பயன்படுத்திக் கொள்ளும் கொடுமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.
இந்நிலையில், தம்மீதான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் அல்லது காமக் கொடூரர்களின் இச்சைக்கு அடிபணிய மறுக்கும் சிறுவர்கள் படுகொலை செய்யப்படுவதோடு, பாலியல் வன்முறை உக்கிரத்தில் சித்திரவதைகளுக்கும் காயங்களுக்கும் உள்ளாகும் மற்றும் உயிரிழக்கும் சூனிய சூழ்நிலைகளுக்குள்ளும் அப்பாவிச் சிறுவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதும் கசப்பானதோர் உண்மையே.
இதனடிப்படையில், 2002இல் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 3 அல்லது 4 சிறுவர்கள் பாலியல் வன்முறைகளின் ஊடாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். கேட்க நாதியில்லை என்பது கூட மேற்படி சிறுவர்கள் கொலை செய்யப்படும் போக்கு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் எனலாம்.
திருமணப் போர்வையில் பாலியல் பலாத்காரம்
போதைப்பொருள் கடத்தல், ஆயுதக்கடத்தலுக்கு அடுத்தபடியாக பெண்குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருவதோடு இது ஒரு சமுதாயக் கேடாகவும் தொடர்கிறது.
இந்த சமுதாயக் கேட்டின் இன்னுமொரு படிமுறை யதார்த்தம்தான் சிறுவர்கள் மீது திருமணப போர்வையில் பிரயோகிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களாகும்.
70 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 20 வயதுக்குள் திருமண பந்தத்தில் இணையும் 65 வீதமான சிறுமிகளில் சரிபாதி வீதமானோர் ஏதோ ஒரு வகையில் பலாத்காரத்திற்கும் வன்முறைகளுக்கும் அறிந்தோ அறியாமலோ உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தெற்காசிய நாடுகளில் 30 மில்லியன் சிறுவர் சிறுமிகள் 18 வயதுக்குள்ளேயே திருமண உறவில் இணைந்திருப்பதாகவும், இவர்களிலும் அதிகமான தரப்பினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாலியல் வன்முறைகளுக்கு ஆட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கிராமப்புறச் சூழநிலைகளில் வாழும் அல்லது அனாதைச் சிறுமிகளே தெற்காசிய நாடுகளில் அதிகம் பலாத்காரப் பிரயோகப் பின்னணியில் திருமணம் செய்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
20 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் தமது தந்தை வயதை ஒத்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் அவலமும் இங்குதான் நடைபெறுகின்றது.
சிறுவர்கள் அறியாத ஆபத்துக்கள்
பாலியல் வன்முறைப்பிரயோகங்களினால் தனக்கு நேர்ந்தது வன்முறை என்று தெரிந்து கொள்வதற்கு முன்னரே, தான் அறியாத எயிட்ஸ் போன்ற கொடூர நோய்களினால் குழந்தைகள் இறக்க நேரிடுவதுதான் கொடுமை.
சர்வதேச ரீதியாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் மற்றும் புற காரணிகளால் தாக்கப்படும் குழந்தைகளில் சுமார் 13.4 மில்லியன் குழந்தைகள் கொடிய எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதாக யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கின்றது.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கூட எயிட்ஸ் நோயினால் பாதிககப்பட்டிருப்பது மிக்க அதிர்ச்சி தரக்கூடிய தகவல்.
ஹைதராபாத்திலுள்ள மறுவாழ்வு மையம் ஒன்றில் இருந்த மரூ என்கிற சிறுமி சமீபத்தில் இறந்து போனாள். இந்த இறப்புக்குக் காரணம் எயிட்ஸ். எயிட்ஸ் என்கிற இந்த உயிர்க் கொல்லி நோயினால் பாலியல் கொடுமைகள் மறையும் என்ற எண்ணத்திற்கு மாறாக உலகில் மனித வக்கிரங்கள் எவ்வாறெல்லாம் புதிய வடிவில் அதற்கான தீர்வுகளைக் காண முற்படுகின்றது என்பதை கருத்தில் கொள்ள நேர்ந்தால் வருத்தத்தை மீறிய சலிப்புணர்வே மிஞ்சுகிறது.
பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பல சிறுவர் சிறுமிகள் ஊமைகளாகவும் மனநலம் பாதிக்கப்பட்டும் உடம்பில் பல்வேறு காயங்களுக்குள்ளாகியும் உள்ளனர். அவர்களுடைய வயதுக்கான கல்வி, விளையாட்டு, சந்தோசம், பாதுகாப்பு, அரவணைப்பு போன்ற எதுவுமே அவர்களுக்குக் கிடைப்பதில்லை. மாறாக எயிட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பிடியில் அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
மரு என்கிற சிறுமியைப் போன்று எத்தனை சிறுவர்கள் தமக்கு என்ன நேர்ந்தது என்ற புரிதல் இல்லாமலே இறக்க நேரிடும் அபாயத்தில், வெளியில் தெரிந்து விடுவது ஒன்றிரண்டு விடயங்கள் மட்டுமே. வெளிச்சத்திற்கு வராத இது போன்ற எத்தனை சிறுவர்களின் வாழ்க்கை பலியிடப்பட்டுள்ளதோ? இதற்கெல்லாம் இந்த சமூகம் எதைப் பரிசாகத் தரப்போகின்றது?
நொய்டாவில் பல பெண் குழந்தைகள் ஒரு காமக் கொடூரனால் சமாதியாக்கப்பட்ட கொடூர சம்பவம் முழு உலகத்தையும் திகிலோடு திரும்பிப் பார்க்க வைத்த அதிர்ச்சி மிக்க விடயம்.
இன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஸ்கொட்லாந்து நாட்டின் டன்பிளேன் எனும் சிற்றூரில் நடந்த சம்பவத்தை இன்று நினைக்கையிலும் உடம்பு சில்லிடுகிறது.
டன்பிளேன் என்கிற சிற்றூரில் இயங்கும் ஒரு பாடசாலையில் பச்சிளம் சிறார்கள் 16 பேர் 43 வயதுடைய தோமஸ் எமில்டன் என்கிற வேலை பறிபோன ஆசிரியன் ஒருவனால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இது அப்போது உலகையே கலக்கியதோர் கொடுமையான கொலை முயற்சி எனவும் வர்ணிக்கப்பட்டது.
இதற்குக் காரணம் என்னவென்று பொலிஸார் ஆராய்ந்தபோது தோமஸ் எமில்டன் என்கிற கொலைகாரன் பாலியல் ரீதியாக மனோநிலை பாதிக்கப்பட்டு இருந்தது மட்டுமல்லாமல் சிறுவர் விபசாரததில் அதிகம் ஈடுபட்டு, அதையே தனது வெறியாகவும் கொண்டவனாக இருந்திருக்கிறான்.
இதனாலேயே காம வேட்கை கட்டுக்கடங்காமல்போய் தனது இச்சைகளுக்கு அடிபணிய மறுத்த அந்த பச்சிளம் சிறார்களை ஒரு காலைப் பொழுதில் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தன்னைத் தானே சுட்டு;க்கொண்டு இறந்து போனான்.
அந்தப் 16 குழந்தைகளும் எதுவித பாவங்களுமே செய்திராத நிலையில் அவர்களை நோக்கிப் பாய்ந்த தோட்டாக்களுக்கும், கசிந்த குருதிக்கும், பிரிந்த உயிருக்கும் யார் பொறுப்புதாரிகள்? அந்தக் குழந்தைகளின் பெற்றோர் இந்தச் சம்பவத்தினால் பல நாட்கள் பித்துப்பிடித்த நிலையில் இருந்ததை படிக்க நேர்ந்தபோதும்கூட வெறும் ஒரு நிமிட மௌன அஞ்சலியை மட்டும்தான் நம்மால் செய்ய முடிந்திருக்கிறது.
சிறுவர்கள் மீது திணிக்கப்படும் பயங்கரவாதம்
சிறுவர்கள் மீதான பல்வேறுபட்ட வன்முறைகளுக்குப் புறம்பாக அண்மைக் காலங்களில் வீறு கொண்டு எழுந்திருக்கும் புதுவிதமான வன்முறைகளில் ஒன்றுதான் ''பயங்கரவாதம்”.
சூடான், லிபியா, சிரியா, லியோன், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் மட:டுமல்லாமல் சிறுவர்களை பயங்கரவாதக் குழுக்களில் சேர்ப்பதும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளிப்பதும் இந்தியாவிலும் பரவி வந்திருப்பதோடு, அதிகரித்தும் வருகின்றது.
தற்போது உலகம் முழுவதும் 30 நாடுகளில் 300000 த்துக்கும் அதிகமான சிறுவர்கள் இவ்வாறு ஆயுதம் ஏந்தும் பயங்கரவாத அமைப்புக்களில் இணைந்து செயற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த பத்து வருடங்களில் மட்டும் இரண்டு மில்லியன் சிறுவர்கள் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளாக யுத்தக் களங்களிலும் பிற இடங்கள் மற்றும் வன்முறைச் சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
6 மில்லியனுக்கு அதிகமான சிறுவர்கள் காயங்களுககுள்ளாகியிருக்கிறார்கள், பிரதி வருடம் தோறும் 8-10 ஆயிரத்துக்கிடைப்பட்ட சிறுவர்கள் கண்ணிவெடிகளில் சிக்கி பரிதாபகரமாக பலியாவதாகவும் சவதேச சிறுவர் நலன் பேணும் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதை விடுத்து யுத்தம் மற்றும் வேறு பிற காரணங்கள் பலவற்றால் இன்றைய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் 120-150 மில்லியன் சிறுவர்கள் ஊனமுற்றிருப்பதாகவும் , அவர்களில் வெறுமனே 3 வீதமானவர்கள் மட்டுமே பாடசாலை செல்லும் சிறுவர்களாக இருப்பதாகவும் தெரியவந்திருப்பதில், சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படும் பயங்கரவாத மற்றும் வன்முறைகளின் உக்கிரப் போக்கை எளிதாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் சிறுவர்களை தமது படைகளில் இணைப்பதாக அன்றாடம் சர்வதேச மட்டத்தில் சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களும் எழுந்திருந்ததையும் அவதானிக்கலாம்.
அண்மையில், இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கிளிநொச்சி- செஞ்சோலையில் ஒரு முகாமிலிருந்த 60 சிறுமிகள் இலங்கை அரசின் வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகிப் பலியான கொடூரம் உலகமே அறிந்தது.
தமது பாடசாலைச் சிறுவர்களை இலங்கை அரசு கொன்றுவிட்டதாக விடுதலைப்புலிகளும், அவர்கள் பாடசாலைச் சிறுவர்கள் அல்ல. யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவர் படை அணியினர் என்று இலங்கை அரசாங்கமும் சர்வதேசத்திற்கு மாறி மாறி விளக்கங்கள் கொடுத்திருந்தனர்.
எவை எவ்வாறெனினும், குண்டு வீச்சில் மடிந்தது சிறுவர்கள் எனும்போது நெஞ்சு கலங்கத்தான் செய்கிறது.
இந்தியாவின் சட்டீஸ்கர், ஜார்க்கன்ட், ஆந்திரா, காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து, அஸாம் போன்ற மாநிலங்களின் ஒதுக்குப் புறக் கிராமங்களின் நிலையைப் பார்க்கும்போது பாதுகாப்புப் படையை எதிர்த்துப் போராடும் அளவில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சிறுவர்கள் சர்வசாதாரணமாகவே துப்பாக்கி ஏந்தி நடமாடுவதை அவதானிக்கலாம்.
மாநில அரசுகளும் அது போன்ற கிராமங்களைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கி வைத்துள்ளன. இந்தியாவில் இவர்கள் பற்றிய சரியான கணக்கெடுப்பு இல்லை. இவர்கள் அடக்கு முறை அட்டூழியங்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்திலும், அவற்றில் நேரில் ஈடுபடும் சந்தர்ப்பத்திலும் தள்ளப்படுகின்றனர்.
பயங்கரவாத வன்முறைகளுக்கான காரணங்களும் தீர்வுகளும்
சிறுவர்கள் மீதான பயங்கரவாத வன்முறைகளுக்கான காரணங்களில் முதன்மைப்படுவது, வறுமைதான். சிறுவர்களை வன்முறைக் கும்பல்களிடம் அழைத்துச் செல்வதும் இந்த ஏழ்மைதான்.
தமது குடும்பம் மட்டும் வறுமையில் தத்தளிக்க, செல்வத்தில் மிதப்பவர்களின் மீது சிறுவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
அவர்களை பழி தீர்ப்பதன் மூலம் ஆறுதல் அடையலாம் என்கிற வெறியையும் ஏற்படுத்துகிறது. இதை பயங்கரவாத கும்பல்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி சிறுவர்களை மூளைச் சலவை செய்கின்றன.
அப்படிபட்ட பயங்கரவாதக் கும்பல்களிடம் சென்ற சிறுவனைக் காரணம் கேட்டால், 8ஆம் வகுப்பு பள்ளிக் கட்டணத்திற்கும் , புத்தகம் வாங்குவதற்கும் பணம் இல்லை என்றே பதில் வருகின்றது
பணத்தினை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்றகிற வெறியில் சிறுவர்கள் பின் விளைவுகள் மற்றும் நன்மை தீமைகளினை மறந்து விடுகின்றனர் .
பயங்கரவாதக் கும்பல்கள் பணம் பறிப்பதை நேரில் பார்க்கும் மேற்படி சிறுவர்கள், தங்களுக்கும் வாய்பளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்அவர்ர்களிடம் இருந்து இவர்களுக்கு கிடைக்கும் பண உதவியால் ,இவர்களின் குடும்பத்தினரும் ஓர் அளவு வசதியாக வாழ முடிகின்றது. இதன் பிரகாரம் தங்கள் வீரம் துப்பாக்கிகளில் உள்ளது என்று அதன் மீது சிறுவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படுகின்றது.
இவர்களால் பாதிக்கப்படுவோர்,பொலிஸ் பாதுகாப்பும், அரசாங்கத்தின் இழப்பீடும் கிடைக்காத நிலையில், தங்களை பாதுகாத்துக் கொள்ள அடியாட்களை நியமிக்கிறார்கள். பயங்கரவாத குழுவினருக்கு எதிரிகளாகவும் மாறுகின்றனர் . இந்த அடியாட்களிலும் பலர் சிறுவர்களாக இருந்துவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு. கல்வி அறிவற்ற மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதே இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு காரணம்.
கிராமங்களை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை வசதிகளை ஏற்படுத்துவது, கிராம நலன் பேணும் அமைப்புக்களை ஏற்படுத்துவது, உட்கிராமங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச மதிய உணவு போன்றவற்றால் இவர்களை சீர்படுத்த முடியும்.
பாதுகாப்புப் படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தும் போதோ அல்லது என்கவுண்டர்கள் நடத்தும் போதோ பிடிபடும் சிறுவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் பொலிசார் கைகளைப் பிசைகின்றனர்.
அவர்களை அவர்களது பெற்றோர்களிடம் திரும்ப ஒப்படைத்தாலும், அவர்கள் மீண்டும் பயங்கரவாத கும்பல்களிடம் போய் சேரமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆகவே அரசாங்கம் இந்த சிறுவர்களின் மறுவாழ்வுக்கு வகை செய்யும் விதத்தில் சீர் திருத்தப் பள்ளிகள் உட்பட்ட காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மது, போதை, மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை சாலப் பொருத்தமாகும் .
பாலியல் வன்முறைகளுக்கான காரணங்களும் தீர்வுகளும்
கடத்தலின் மூலமாக சிறுவர் சிறுமியர் பாலியல் வண்முறைகளுக்கு உள்ளாகும் விதத்தில் விபசாரத்தில் ஈடுப்படுத்தப்படுவது ஒரு ரகம் என்றாலும், பல குடும்பங்கள் குடும்ப சூழல் காரணமாகவே பெற்றவர்கள் மற்றும் உறவினர்களால் விற்கப்படுகிறார்கள் என்பது நடைமுறையில் உள்ளது.
வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி அறிவு இல்லாமையே இதற்கும் காரணங்களாக அமைகின்றன. கட்டுப்பாடு இல்லாமல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும்கூட இதற்கான ஒரு பிரதான காரணம் எனலாம்.
சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே பெற்றவர்களே குழந்தைகளை விற்கும் அவல நிலை மாறும். இதற்கு அவர்களை மட்டுமே நாம் காரண கர்த்தாக்களாக்க முடியாது. மக்களுக்கு மேற்கூறிய அடிப்படை வசதிகள் மற்றும் உரிமைகளை வழங்கத் தவறும் அரசாங்கங்களையும் நாம் குறை கூற வேண்டியுள்ளது.
மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளில் மனித சக்தியை பயன்படுத்தி பல ஆக்கபூர்வ திட்டங்களை அரசு கொண்டுவருவது இந்த அவல சூழ்நிலையை மாற்ற உதவும்.
நோய்டாவில் பல பெண் குழந்தைகள் ஒரு காமக்கொடூரனால் சமாதியாக்கப்பட்ட கொடூர சம்பவம் உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இங்கு , அதற்கான தீர்வு உடனடியாக வழங்கப்படாதது இதுபோன்ற பல குற்றங்கள் இன்னும் இன்னும் நடைபெறுவதைத் தூண்டுவதாக உள்ளது. வழக்கு விசாரணைகள் இன்னும் நடைபெறுகின்றன. அது நிறைவு பெற்று தீர்ப்பு பிறப்பிக்கப்படுவதற்குள் மக்கள் அந்த சம்பவத்தினை, அதன் தாக்கத்தினை மறந்துவிடுவார்கள்.
அதற்குள் இதுபோன்ற பல குற்றச் செயல்கள் அரங்கேறியும் முடிந்து இருக்கும்..
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் குற்றவாளிகளாகக் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் , 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கின்றது. ரயில்வே நிலையங்கள் உட்பட்ட பொது இடங்களில் அறிவித்தல்களை ஒட்டியுள்ளதையும் காணக்கிடைக்கும் அதேநேரம், ரயில்கள் முதல் சென்னை மாநகராட்சி எல்லை தாண்டி தமிழ் நாடு முழுக்கவும் கட்டடப்பணிகள் உட்பட்ட பல சிரம வேலைகளில் சிறுவர்கள் அமர்த்தப்பட்டிருப்பதையும் இலகுவாகக் காண முடிகின்றமை மிகப் பெரிய துர்ப்பாக்கியமே.
ஆக, இந்த நிலைமை மாற வேண்டுமாயின், சிறுவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளிலும் மிக சிரத்தை காட்ட வேண்டிய அரசாங்கம் அதற்குச் சரிவீதத்தில் சிறுவர் வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களையும் கடுமையாக்க வேண்டும். அமுல்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் எத்தனம்
உலகளாவிய ரீதியிலும் சரி, தெற்காசிய நாடுகள் என்கிறதோர் குறுகிய எல்லைக்குள்ளும் சரி இன்று ஊடகங்களின் எண்ணிக்கை மிகுந்திருந்தாலும், சிறுவர் வன்முறைகளுககாக அவை குரல் கொடுக்கின்ற விதமும் போக்கும் எதிர்பார்த்த அளவு மனநிறைவை அளிப்பதாக இல்லை.
ஊழலும், தவறான வழிமுறைகளும் கொண்ட ஊடகம் மனிதர்களுடன் உறவாட வேண்டியிருப்பதும் சிறுவர் வன்முறை விவகாரத்தில் நழுவும் போக்கைக் காட்டுவதில் இன்னொரு சிக்கலான தருணமிது.
ஊடகங்களின் உறவு என்பது நமது சமூகத்தின் பல அங்கங்களில் நாம் கொள்ளும் உறவாகும். நீதித் துறை, கல்வித் துறை, அரசியல் துறை, மருத்துவத் துறைகளை விடவும் இந்த ஊடகத் துறை வலிமை மிக்க சமூகத்தின் அவசியமான பிரிவுகளில் ஒன்று. நான்காவது ராச்சியம். எனினும், அப்படிப்பட்ட''மூன்றாவது கண்”ணான ஊடகம் தெற்காசிய நாடுகளில் அரசியல்வாதிகள், பெரும் வர்த்தகப் புள்ளிகள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களின் நேரடி மற்றும் மறைமுக ஏக போக உரிமையில் மாட்டிக்கொண்டு தவிப்பதால், சமூகத்துக்கு அவசியமான எந்த ஒரு விடயத்தைக் கையாள்வதிலும் கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீன் என்கிற போக்கிலேயே அவை செயற்படுவதாக இருக்கின்றன.
அரசியல், சினிமா, கேளிக்கை வினோத நிகழ்ச்சிகளை வெளியிடுவதில் மேற்படி ஊடகங்கள் காட்டும் ஆர்வம், சிறுவர் வன்முறைகள் போன்ற மிக முக்கிய சமூகப்பிரச்சினைகளை தோல் உரித்துக் காட்டுவதில் ஏனோ தானோவென்று ஒரு "ஜஸ்ற் லைக் தட்” போக்கையே கடைப்பிடித்துள்ளன.
சிறுவர் தொழிலாளர்கள், சிறுவர் கடத்தல் விவகாம், சிறுவர்களை பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தல் , சிறுவர்களைப் படைகளில் சேர்த்தல் போன்ற சிறுவர் மீதான வன்முறை மிக்க சகல விவகாரங்களின் பின்னணியில், ஏதோ ஒரு வகையில் ஊடகத்துக்கு அவசியப்படும் ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெரும் புள்ளிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செயற்பட்டுக் கொண்டிருப்பதும் இந்த நழுவல் போக்குக்குக் காரணம் எனலாம்.
இங்கு, வாக்கு வங்கிகள் சிதறக்கூடாது என்கிற அரசியல்வாதிகள், கட்சிகளின் தந்திரங்கள்கூட மேற்படி பிரச்சினையை அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சந்தி சிரிக்கவும், மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இருக்கும் படியும் பார்த்துக் கொள்கின்றன. இந்நிலையில் அதிகபட்சமான அரச, தனியார் ஊடகங்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒரு பரபரப்புக்கு மத்தியில் சிறுவர் வன்முறை தொடர்பில் ஒரு சொற்சித்திரமோ , செய்தியோ வெளியிடும் போக்கைக் கடைப்பிடிக்கின்றதே தவிர, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அல்லது பிரச்சினைகளைக் களைய வேண்டும் என்கிற மக்களின் முழுதுமான திருப்தி கருதி இயங்குவதாக இல்லை.
தெற்காசிய நாடுகளில் சிறுவர் மீதான வன்முறைகளுக்கு காரணமாகும் மேலிடத்துப் பெரும் புள்ளிகள் ஊடகங்கள் மீது பிரயோகிக்கும் பலவந்தமும், அச்சுறுத்தல்களும் கூட பிரச்சினைகளைத் தடுப்பதற்கான மேற்படி ஊடக எத்தனத்தை செயலிழக்கச் செய்துவிடும் போக்கில் உள்ளது.
ஹைதராபாத்திலுள்ள மறுவாழ்வு மையத்தில் இருந்த 10 வயது மரு என்கிற சிறுமி எயிட்ஸ் பீடித்து இறந்து போன சம்பவம் சர்ச்சையைக் கிழப்பாமல் அடங்கி ஓய்ந்து போனதற்கும், ஊடகங்கள் அந்த விவகாரத்தை ஊதிப் பெரிது படுத்தாமல் விட்டதற்கும் காரணம் குறித்த மறுவாழ்வு மையத்தின் பெயருக்கு களங்கம் வரக்கூடாது என்பது மட்டுமல்ல. அந்தக் குழந்தையின் இந்த அவல நிலைக்குக் காரணமான சில புள்ளிகளின் நயவஞ்சகப் போக்காகவும் இருக்கலாம் என்றே உணரப்பட்டு;ள்ளது. இது ஒரே ஒரு உதாரணம் மட்டுமே.
சிறுவர் மீதான வன்முறைகளைக் களைவதில் புலனாய்வுச் செய்தித் துறை மிகவும் பிரதானதொரு இடத்தில் நிற்கிறது. இது தொடர்பில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் யுத்த சூழ்நிலையின் கள நிலவரம் அறியும் ஆபத்தின் அடுத்த கட்டத்தில் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.
தெற்காசிய நாடுகளில் மேற்படி விவகாரம் தொடர்பிலான புலனாய்வுச் செய்தித்துறையில இந்தியாவே முதன்மைப்படும் போக்கில் இருந்தாலும்கூட, இந்தப் பணி சரியான இலக்கை நோக்கி சரிவர இன்னும் நகரவில்லை எனலாம்.
இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூட்டான், மாலைதீவு போன்ற நாடுகளில் இந்தப் புலனாய்வுச் செய்தி சேகரிக்கும் பணி ஒரு இறுக்கமான சூழ்நிலையில் ஆரோக்கியமற்று இருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
சிறுவர் வன்முறைகளைக் களைவதிலும், மக்களிடத்தில் அது தொடர்பில் விழிப்புணவை ஏற்படுத்துவதிலும் தெற்காசிய மாற்று ஊடகங்களின் போக்கும், செயற்பாடுகளும் மெச்சத் தக்கவையாக இருந்தாலும் கூட, மாற்று ஊடகங்களின் வெறுமனே மட்டுப்படுத்தப்பட்ட பிரதிகள் மக்களைச் சென்றடையும் போக்கு ஆரோக்கியமானதாக இல்லை. பாமர மக்கள் மாற்று ஊடகங்களில் வசீகரிக்கப்படும் போக்கும் மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.
அடுத்து, இணையம் என்கிற நவீன ஊடகம் சிறுவர் வன்முறைகளைக் களைவதில் அல்லது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சகல விதமான தரவுகளையும் வழங்கி இன்று முதன்மைப்படுகின்ற போதும், அது சேரிப்புறங்களை, கிராமங்களை மற்றும் பாமர மக்களைச் சென்றடைகின்றதா என்பதில் யோசிக்க வேண்டிய பல சிக்கல்கள் பொதிந்திருப்பதை அவதானிக்கலாம்.
தெற்காசிய நாடுகளின் தொண்டு நிறுவன ஊடகங்களை அவதானிக்கும்போது கூட, அவையும் அதிகம் விலைபோகும் மற்றும் வேலியே பயிரை மேயும் ஒரு வடிவில் இயங்கிக் கொண்டிருக்கும் வெட்கக் கேடான நிலைமையே உள்ளது எனலாம்.
துண்டுப் பிரசுரங்களாக இருக்கட்டும், தொலைக்காட்சிகளாக இருக்கட்டும் ஊடகங்கள் உண்மையையும் நேர்மையையும் நடுநிலைமைப் போக்கையும் விட்டுக் கொடுக்காமல் இயங்கும் பட்சத்தில் மட்டுமே மக்களை விழிப்புணர்வு ஊட்டி, சிறுவர் வன்முறைகளைத் தடுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.
[முற்றும்]
ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை.
டிசம்பர் 2007









No comments:
Post a Comment