Sunday, October 3, 2021

தேர்தல்கால நிலாக்களும் கோவேறு கழுதைகளும்


வீன குடியரசில், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உலகம் தழுவிய ஒரு முறையாக தேர்தல் கடைப்பிடிக்கப்படுகிறது.

தேர்தல்கள் என்பவை 17வது நூற்றாண்டு தொடங்கி நவீன பிரதிநிதித்துவக் குடியாட்சியில் வழக்கமான ஒரு செயல்பாடாகத்தான் இருந்து வந்துள்ளன.

தேர்தல் என்பது, ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை எனும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையாகும்.

இந்த ஒழுங்கு முறைமையின் நற்பண்புகள் நாறிப்போயுள்ள நிலைமையையே இன்று நம் நாட்டில் அதிகம் அவதானிக்க முடிகிறது.

ஜனநாயகம் மறுதலிக்கப்பட்டு இன்று பணநாயகம் வீற்றிருக்கும் விரிப்பில்தான் அதிகம் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

இனவாதம், கூட்டணி,பேரம் என சுயநல அமிலத்தில் அமிழ்ந்து கிடக்கும் தேர்தல் களத்தில்.... கடவுள், அம்மா,அப்பாக்களையும் மிகைத்து அதிகம் இன்று அரசியல் மந்திகளைத்தான் சிலர் கும்பிடவும், வழிபடவும் செய்கிறார்கள் என்பது துயரத்தின் உச்சம்.

திஸ்ஸ அத்தநாயக்காக்கள் மீளவும் ஐ.தே.கவில் இணைந்து கொண்டிருப்பது அருவெறுக்கத்தக்க அரசியலின் இன்னுமோர் துளி விஷம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித், கோத்தா, அநுர....யாரை யார் வெல்லுவாரோ?

எவர் வென்றாலும் அழுத்திச் சொல்லுமளவில் எதுவும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்பதே நிஜம்.

முறையான தேர்தல் அமைப்புக்கள் இல்லாத இடத்தில் அவற்றை அறிமுகப்படுத்துவது அல்லது அவை இருக்கும் இடத்தில் அவற்றின் நியாய முறை அல்லது பயனை மேம்படுத்துவது சிரமமாகும்.

இந்நிலையில், வாக்காளப் பெருமக்கள் யாராயினும் நா காப்பதே சிறந்ததாகப் படுகிறது.

வாக்காளர்களை கோவேறு கழுதைகளாக நினைக்கும் அரசியல்வாதிகளின் மனப்போக்கில் மாற்றங்கள் நிகழாதவரைக்கும்.... நாம் முதுகில் சுமக்க நேரிடுவது இயலாமை, ஏமாற்றம், காழ்ப்புணர்ச்சிகளின் எச்சங்களாகத்தானிருக்கும்.
03 October 2019

- ரிஸ்கி ஷெரீப்
03 October 2019

Thursday, September 30, 2021

வெள்ளிவிழா.....



 நன்றி : விடிவெள்ளி வாரயிதழ் ( 2019 செப்டம்பர்)

Monday, September 20, 2021

இருட்டடிப்புச் செய்யப்படும் இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு


 - ஒரு கண்ணோட்டம்!

மர்ஹூம் எம். ஐ. எம் நளீம் ஹாஜியார் நினைவு தினத்தில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் ஆற்றிய உரையைத் தழுவி இக்கட்டுரை எழுதப்படுகிறது.


- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

riskyshareef@gmail.com


எம். எம். ஸுஹைர் ஓர் சிறு அறிமுகம் ;

கொழும்பு, மாளிகாவத்தை மஜ்லிஸ் இஸ்லாமி இளைஞர் அமைப்பின் ஸ்தாபக பொதுச் செயலாளர் (1965- 73), புதுமைக் குரல் மாதாந்த சஞ்சிகையின் இயக்குநர், பாமிஸ் அமைப்பின் தலைவர், பத்திரிகையாளர், உச்ச நீதிமன்ற சட்டத்தரணி, அரச சிரேஷ்ட சட்டத்தரணி, ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர், ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் (2004/2006), ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் (2006/2012), சூறா சபையின் நிகழ்கால உப தலைவர், இலங்கை முஸ்லிம் சமூகத்துக்காக காத்திரமான பங்களிப்பை நல்கிய சிறந்த புத்திஜீவி, கல்வியாளர், சமூக சேவையாளர் என பல முகங்களைக் கொண்டவர் எம்.எம். ஸுஹைர். (தலைமையுரையில் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி)

லங்கை வாழ் முஸ்லிம்களிடத்தில், தனக்கெனவோர் தனியான அதேநேரம் என்றென்றும் அழியாத இடம்பிடித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் மதிப்புக்குரிய மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள்.

என்றும், நன்றியோடு நினைவு கூரப்படக்கூடிய நல் நெஞ்சுக்குச் சொந்தக்காரர். .

இஸ்லாமியக் கல்விப் புரட்சிக்கு வித்திட்டு, மறுமலர்ச்சியை ஏற்படுத்திய தந்தை. இஸ்லாமிய வரலாற்றுத் தொகுப்புக்கு அழியா வரம் பெற்றுத் தந்து, தேசிய பங்களிப்பில் தனது தடத்தையும், முத்திரையையும் பதித்த அபூர்வமான அற்புத மனிதர்.

ஜாமியா நளீமிய்யா, இக்ரஹ் கல்விக்கூடங்களை அழியாச் சொத்தாக இலங்கை முஸ்லிம்களுக்காக ஸ்தாபித்து விட்டுச்சென்ற இந்த மகோன்னத புருஷர், மர்ஹூம் சித்தி லெப்பை காலம் முதல் இன்றுவரை இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கும் பலரில் முதன்மையானவர் என்பது மிகைப்படுத்தப்பட்டதொன்றல்ல.

இப்படி, இலங்கை முஸ்லிம்களுக்கான உதாரண புருஷராக வாழ்ந்து மறைந்தும், சகல மனசுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் மர்ஹூம் நளீம் ஹாஜியார்.

கடந்த காலமொன்றில்
இறந்து போனதாகச் சொல்கிறார்கள்….

நிகழ்காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும்
கல்வித் தந்தையை.


எதிர்காலத்திலும் வாழும் வரம்பெற்ற
அவரை எப்படிச் சொல்ல முடியும்?
வெறுமனே இறந்துபோன மனிதரென்று?

ஒரு உதாரண புருஷர் என்கிற அங்கீகார அடையாளமே இதுதானே.

2005 செப்டம்பர் 28ஆம் திகதி, கொழும்பு, ரண்முத்து ஹோட்டலில் வாழ்வோரை வாழ்த்தும் கூட்டமொன்றுக்கு, ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. வாழ்த்தப்படயிருந்தவரில் முதன்மையான அந்தஸ்த்துக்குரியவராக இருந்தவர் நளீம் ஹாஜியார்.

அன்றைய பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வாதான் பிரதான பேச்சாளர். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபாவும், நானும் சிறப்பதிதிகள்.

ஆனால், அதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே காற்று அழுதழுது எடுத்து வருகிறது அந்தச் சோகச் செய்தியை. இலங்கை வாழ் முஸ்லிம்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திய அந்தச் செய்தி, நளீம் ஹாஜியார் வபாத் என்பதுதான்.

ஜனாஸா முன் நின்று கதறியழும் பழக்கமோ, வழக்கமோ முஸ்லிம்களிடம் இல்லை. இருந்திருந்தால்… ஜனாஸா நல்லடக்கத்துக்காக ஒன்று திரண்டிருந்த முஸ்லிம்கள் அல்லோலகல்லோலப்பட்டிருப்பர்.. அந்தளவில், அவரிழப்பைச் சொல்வதற்கான வார்த்தை வலுவற்றதாக இருக்கின்றமை என்பது யதார்த்தம்.

பேருவளை, சீனங்கோட்டையில் நளீம் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, ஏலவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபடி, ரண்முத்து ஹோட்டலின் வாழ்த்துக் கூட்டம் அவருக்கான அனுதாபக் கூட்டமாக தன்னை அலங்கரித்துக் கொள்கிறது.

நளீம் ஹாஜியார், சாதாரண குடும்பமொன்றில் பிறந்து, இரத்தினக்கல் பட்டை தீட்டுபவராக தனது தொழிலை ஆரம்பித்தவர். பின்னாளில் பிரதான வரிசை இரத்தினக்கல் வர்த்தகராக உயர்ந்து, அத்துறையில் சிகரத்தைத் தொடுமளவில் அவருக்கு இறைவனின் அருள் கிட்டியிருக்கிறது.

பணமும், வசதியும், சுகபோகங்களும், செளகரியங்களும் எத்தனை வந்தபோதும் அன்றும் சாதாரண மட்டத்திலான வாழ்க்கை வாழ்ந்தவர் நளீம் ஹாஜியார்.

அவர் உழைத்த பணத்தையும், செல்வத்தையும் எப்போதுமே வெளிநாடுகளிலேயோ இல்லை சுவிஸ் வங்கியிலேயோ முடக்கியது கிடையாது. அவுஸ்திரேலியாவில் பங்களாக்களை வாங்கிப் போட்டது கிடையாது. ஹாங்காங் மற்றும் பாங்கொக்களில் வீணடித்தது கிடையாது.

இறைவன் கூரையைப் பிய்த்துக் கொண்டு வழங்கிய செல்வமாக, இவரிடத்தில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட…..நாட்டுக்கும், சட்டத்துக்கும் புறம்பாக இவர் வெளிநாடுகளில் எங்கேயாவது பணத்தைப் பதுக்கி வைத்திருப்பாரோ என்கிற சந்தேகம் அரசாங்கத்துக்கும் அப்போது முளைவிட ஆரம்பித்திருந்தது.

விளைவு, 1974ல் அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுனில் சில்வா தலைமையில் இவருக்கு எதிராக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது. மட்டுமன்றி, ரகசியப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கொழும்புக்கு அழைத்து வந்து தொடர்ந்து 47 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கிறார்கள். இரவு பகலான விசாரணை.

முடிவில், எவருமே இவர்மீது குற்றம் காண இயலாத நிலையில், நாட்டுக்குத் துரோகம் செய்தார் என்று எவருமே அரசாங்கம் உட்பட விரல் நீட்டமுடியாத அளவில், வழக்குகள் ஏதுமின்றி நிரபராதியாக வெளியே வருகிறார் நளீம் ஹாஜியார். அவரது நேர்மைமீது தேசத் துரோக முத்திரை குத்த விளைந்த அரசுக்கே இச்சம்பவம் ஒரு தலைகுனிவுதான்.

அதன்பிறகு, இலங்கை முஸ்லிம்களின் கல்வி எழுச்சியை அடிப்படையாக வைத்து ஜாமியா நளீமிய்யா பல்கலைக்கழகம், இக்ரஹ் தொலில்நுட்பக கல்லூரிகளை இவர் அமைத்தது மட்டுமன்றி, தனது மறுமலர்ச்சி இயக்கத்தின் ஊடாக, இலங்கை முஸ்லிம்களின் சமூக எழுச்சி கருதி, தேசியப் பங்களிப்பில் முஸ்லிம்களின் நிலைமை தொடர்பிலான ஆவணங்களையும், பொக்கிஷங்களையும் பாதுகாக்கும் மற்றும் திரட்டும் பணியில் இவர் தன்னை வெகு சிரத்தையோடு ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

1984ல் இது தொடர்பில் மாபெரும் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம்கள் தேசிய ரீதியாக இந்நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பு இருட்டடிப்புச் செய்யப்பட்டு, வரலாற்று ஆதாரங்களும், ஆவணங்களும் அழிக்கப்பட்டு வரும் இந் நிகழ்காலச் சூழ்நிலையில் மற்றும் இனவாதம் புரையோடிப் போயிருக்கும் இக்காலகட்டத்தில், இன்றும் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் ரகசியமானதும் மறைக்கப்பட்டதுமான சரித்திரத்தை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்த ஆவணப் பொக்கிஷங்கள் ஆவனப்படுத்தப்படுவதற்கு காரணகர்த்தாவாக நளீம் ஹாஜியார் திகழ்ந்தார் என்பது எவராலும், எப்போதும் மறுதலிக்க முடியாதது.

ஆசியா மற்றும் இலங்கையை 500 வருடங்களுக்கு மேல் ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர்களும், போர்த்துக்கேயர்களும், ஒல்லாந்தர்களும் இங்கிருந்த வளங்களைச் சுரண்டிச் சென்றமை என்பது வரலாறு.

லண்டன், லிஸ்பன் மற்றும் அம்ஸ்டடாம் நகரின் கட்டடங்களில்கூட ஆசிய நாட்டு வளங்கள் சூறையாடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருப்பதை இன்றும் அவதானிக்கலாம்.

இந்நிலையில், 1300 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்நாட்டைச் சுரண்டவோ, சூறையாடவோ இல்லை. இந்நாட்டு வளங்களை முஸ்லிம்கள் எங்கும் எடுத்துச் சென்றதுமில்லை. இலங்கை தேசத்துக்கு நிரந்தரமாக நின்று சேவையாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர்கள்தான் இலங்கை முஸ்லிம்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களால், அதுவும் மாற்றுமத ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டதொன்று,

அப்படிப்பட்ட தெளிவான சரித்திரம் இலங்கை முஸ்லிம்களுடையது. இதற்கு சிறந்த உதாரண புருஷர்தான் மர்ஹூம் நளீம் ஹாஜியார்.

இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் கிளையொன்று இந்தியாவில் நிறுவப்பட்டிருப்பதாக, கடந்த செப்டம்பர் 06ஆம் திகதி யூதர்களின் பின்னணியில் இயங்கும் ஏ.எப்.பி செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் சீ.என்.என், (இதுவும் யூத நிறுவனமே) அமெரிக்காவில் வைத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அண்மையில் வினவியபோது, நரேந்திர மோடி அக்கருத்தை முற்றாக மறுத்தார்.

இது வெறும் கற்பனை. இந்திய முஸ்லிம்கள் இந்தியாவில் பிறந்து, இந்தியாவுக்காக வாழ்ந்து, இந்தியாவுக்காகவே மரணிப்பவர்கள் என்று நரேந்திர மோடி இந்திய முஸ்லிம்கள் தொடர்பில் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த வலுக்கட்டாய செய்தி உருவாக்கத்தின் பின்னணியில் இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான சதி வலையைப் பின்ன முயன்றது அமெரிக்கா என்று பின்னாளில் தெரியவந்தது

அமெரிக்கா – இந்தியாவுக்கிடையில் நிலவிய கடந்த 10 வருடகால பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தமொன்று காலாவதியாகும் நிலையில், அதை மீளப் புதிப்பிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருந்தது.

இது தொடர்பில், கடந்த செப்டம்பர் 23, 24, 25ஆம் திகதிகளில் அமெரிக்கா – இந்தியாவுக்கு இடையில் நிவ்யோர்க்கில் ஒரு கலந்தாலோசனை மாநாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி, பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேலும் 10 வருடங்களுக்கு புதுப்பிக்க நினைத்திருக்கும் அமெரிக்கா, இதன் மூலம் இந்திய கூட்டுறவோடு, மிக வீரியம்மிக்க 33 வகையான ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலையொன்றை இந்தியாவில் நிறுவ முனைப்புக் காட்டுகிறது.

இதில் தலா ஒரு உற்பத்திக்கு அமெரிக்கா முதலீடு செய்யப்போகும் தொகை 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

இதற்காக, இந்தியாவின் 150 மில்லியன் முஸ்லிம்களைப் பலிக்கடாக்களாக்கி, அவர்கள் தீவிரவாதிகள் என்று, ஒரு கற்பனைச் சித்திரத்தை வடிவமைத்து தனது இலக்கை அடைந்து கொள்ள அமெரிக்கா முயற்சித்திருக்கிறது.

எண்ணெய்க்காக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் யுத்தங்களை உருவாக்கி விட்டுக் குளிர் கய்ந்த்தது போன்ற அமெரிக்காவின் இன்னோர் தந்திரோபாயமே இது.

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய பரிதாப நிலைமையும் இதுதான். சில வெளிநாட்டுச் சக்திகளின் பின்னணியில் பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் இன்று இங்கேயும் இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள முயற்சிக்கிறது.

பொதுபலசேனா, சுகததாச உள்ளரங்கில் கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மியன்மாரின் தீவிரவாதத் துறவி அசின் விராது இதற்கு சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.

5000 பெளத்த துறவிகள் அளவில் பங்கேற்ற இந்த மாநாட்டில், பொதுபலசேனா பேச்சாளர் பேராசிரியர் சமில லியனகே ஆற்றிய உரையில் முஸ்லிம்களின் தேசியத்துக்கான பங்கும் உழைப்பும் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது.

1551ல் கோட்டையை ஆண்டு கொண்டிருந்த டொன் ஜுவான் தர்மபால, இலங்கையை அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த போர்த்துக்கேயர்களின் தூண்டுதலில், ( போர்த்துக்கேயர்கள் இலங்கைக்கு வந்த 46ஆவது வருடம்) டொன் ஜுவான் கத்தோலிக்க மதத்தினைத் தழுவினார்.), அப்போதைய சீதாவக்கயை ஆட்சி செய்து கொண்டிருந்த மாயாதுன்னவை விரட்டியடிப்பதற்காகச் சென்ற வரலாற்றை சம்பூரணப்படுத்திக் கூறவில்லை.

வழிதவறிய ஒரு சிங்களப் படையினரே மாயாதுன்னவை விரட்டியடிக்கச் சென்றதாகவும், அதற்கு அப்பால் வரலாற்றின் உண்மைத் தன்மையை விளங்கப்படுத்த முயலாமல் அத்துடன் அவர் தனது உரையையும் நிறைவு செய்துகொண்டிருந்தார்.

இலங்கையில் இருந்து போர்த்துக்கேயர்களை விரட்டியடிக்க நெடுகாலம் போராடிய, மற்றும் முஸ்லிம்களின் பெருத்த ஆதரவோடு தேசத்தைக் காக்க உழைத்த தேசிய வீரர் மாயாதுன்னவின் உண்மை முகத்தையும், முஸ்லிம்களின் மாபெரும் பங்களிப்பையும் சித்தரிக்காமல் மலுங்கடித்திருக்கிறார் சமில லியனகே.

டொன் ஜுவான் தர்மபால போர்த்துக்கேயருக்கு விலை போனதையோ, அல்லது வழிதவறிய சிங்களப்படை தாக்கியழிக்கப் புறப்பட்டது தேசத்தைக் காக்கப் போராடியதோர் உண்மையான வீர மன்னன் மாயாதுன்னை என்பதையோ, அல்லது மிகுந்த தேசப்பற்றுடன் நாட்டை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கு மாயாதுன்னையுடன் இணைந்து போராடிய அன்றைய முஸ்லிம்களின் காத்திரமான பங்களிப்பு பற்றியோ சமில லியனகே கடைசிவரைக்கும் சொல்லவேயில்லை.

பொதுபலசேனா மேடைகளில் முஸ்லிம்கள் சார்பு யதார்த்தங்களும் உண்மைகளும் அண்மைக்காலங்களில் இப்படித்தான் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.

போர்த்துக்கேயர்களை இலங்கையை விட்டு விரட்டுவதற்காக, இலங்கை முஸ்லிம்களின் உதவியோடு மாயாதுன்னை அபோதைய கேரள சமோரிஸ் கலிகத் அரசரின் உதவியை நாடியதையோ, இல்லை அவர் மூன்று முஸ்லிம் தளபதிகளின் கீழ் ஒரு ஆயுதப்படையை (இராணுவம் என்று சொல்லுமளவில் பலம் பெற்றதல்ல) இலங்கைக்கு அனுப்பி வைத்ததையோ சமில லியனகே தனது உரையில் குறிப்பிடவில்லை. மட்டுமன்றி அதிக வரலாற்றுப் புத்தகங்களிலும் இதுபற்றி எழுதப்படவில்லை.

ஆயினும், அண்மையில் இயற்கையெய்திய வரலாற்றுப் பேராசிரியர் மட்டுமன்றி பெளத்த மதத்தைச் சார்ந்தவரான லோர்னா தேவராஜா இதுபற்றி தனது ஆய்வுப் புத்தகத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை வரலாற்றில் மாயாதுன்னை முஸ்லிம்களோடு தேசத்துக்காகப் போராடியவர் என்பதும், டொன் ஜுவான் தர்மபால சிங்களப் படையுடன் ஒன்று சேர்ந்து மாயாதுன்னவை அழிக்கப் புறப்பட்டவர் என்பது பல இடங்களில் இன்று மறுக்கப்பட்டாலும், முஸ்லிம்கள் மாயாதுன்னையுடன் இந்த தேசத்துக்காக உழைத்தவர்கள் என்பதும், முஸ்லிம் சமூகம் தேசப்பற்றுமிக்க சமூகம் என்பதும் நிரூபிக்கப்பட்டதொன்று.

இலங்கை சரித்திரத்தை உற்று அவதானிக்கும்போது, இந்நாட்டில் முஸ்லிம்கள் தேசப்பற்றுமிக்க கண்ணியவான்களாக வாழ்ந்திருப்பதை அவதானிக்க முடியும்.

ஜாமியா நளீமிய்யாவில் 1984ல் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்ற 05 நாள் ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் இது தொடர்பில் 1986ல் கலாநிதி சுக்ரியினால் தொகுத்து வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல் என்பனவும்,

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.சீ.எஸ் ஹமீட்டின் அயராத முயற்சியின் விளைவாக, 1994ல் பேராசிரியர் லோர்னா தேவராஜா எழுதி வெளியிட்ட இலங்கை முஸ்லிம்களும் 1000 வருட இன ஒற்றுமையும் என்ற புத்தகமும்,

கலாநிதி எஸ்.எச்.எம்.ஜெமீல் எழுதிய இலங்கை பாராளுமன்றில் முஸ்லிம்கள் என்ற நூல் மற்றும் லத்தீப் பாரூக் போன்றவர்களால் வெளியிடப்பட்டுவரும் ஆய்வுகள் இவற்றை மேலும் வலுப்படுத்துகின்றன.

தேசிய சரித்திரத்தில் பங்காற்றிய முஸ்லிம்கள் பற்றி மேலும் ஆராய விரும்புபவர்களுக்கு இவை சிறந்த உசாத்துணை நூல்களாக அமையும் என்பது திண்ணம்.

இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன ரீதியான சவால்களுக்கு பதில் கொடுக்ககூடிய ஆதாரங்களை மேற்படி புத்தகங்கள் உள்ளடக்கியுள்ளன. முஸ்லிம் சமூகம் இலங்கையை சூறையாட வந்தவர்கள் அல்ல: முஸ்லிம் சமூகம் கெளரவமான சமூகம் என்பதை இந்த ஆவனங்கள் மேலும் நிரூபிக்கின்றன.

மர்ஹூம் நளீம் ஹாஜியார் வெகு தூரநோக்குடன் சிந்தித்துச் செயற்பட்டதாலேயே அவரால் இப்பொக்கிஷங்களைப் பாதுகாக்க முடிந்தது.

ஜாதிக ஹெல உறுமயின் பேச்சாளர்கள், முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்து வெறும் 05 நூற்றாண்டுகள் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் செயலாளர் கே.ஜே.விஜேதாச முஸ்லிம்கள் இந்நாட்டில் குடியேறி 07 நூற்றாண்டுகள் என்று அண்மைய ஞாயிறு பத்திரிகையொன்றில் எழுதியிருந்தார். உண்மை என்ன?

பிரபல சரித்திரப் பேராசிரியர் சில்வா கிரிபம்புவ, முஸ்லிம்கள் 600 நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்நாட்டுக்கு வந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைய சூனியமான அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்கள் பெருத்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பள்ளிவாயல்கள் உடைபடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. ஆக, முஸ்லிம்கள் இன்று பெரும்பான்மையினருடன் மிக அந்நியோன்னியமாகப் பழகி, அவர்களுக்கு தெளிவையும், உண்மையையும் ஊட்ட வேண்டியவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

13ஆம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டு இராணுவத்தில் அதிகம் உள்வாங்கப்பட்டிருந்ததாகவும், தற்போதைய இராணுவத்தில் முஸ்லிம்கள் குறிப்பிடக்கூடிய அளவு உள்வாங்கப்படவில்லை என்றும் குறை சொல்லப்படுகிறது.

இப்படி…. இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ராஜதந்திர விடயதானங்கள் மற்றும் உறவுகள், ஏற்றுமதி, இறக்குமதி, உள்ளூர் உற்பத்தித் துறைகளிலெல்லாம் ஆரம்ப காலம் முதல் முஸ்லிம்களும், மேமன் சமூகமும் அதிகம் ஈடுபட்டிருந்ததாக பேராசிரியர் லோர்னா தேவராஜா குறிப்பிட்டுள்ளார்.

12ஆம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து 07 நெசவுத் தொழிலாளர்களை அழைத்து வந்து, இலங்கை தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்ததாகவும், அவர்களின் சந்ததியினர் இன்றும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் லோர்னா தேவராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று விவசாயத் துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய தேசிய பங்களிப்பு குறித்தும் பல ஆதாரங்கள் உள்ளன.

ஐந்தாம் நூற்றாண்டில் மன்னன் தாதுசேனவினால் கட்டப்பட்ட யோத வாவி, (முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு வந்து 300 வருடங்களுக்குப் பிறகும் நல்ல நிலைமயில் இருந்ததாகவும், முஸ்லிம்களே வெகு சிரத்தையோடு அதைப் பேணிப் பாதுகாத்ததாகவும் இலங்கையின் மூன்றாவது நீதியரசர் சேர்.அலெக்‌ஷாண்டர் ஜொன்ஸ்டன் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (இது 1200 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வு).

நான் ஈரான் நாட்டின் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய கடந்த 2008ல், பின் தங்கிய இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பிரதேச விவசாய நலன் கருதி, 450 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 25000 ஏக்கருக்கு நீர்ப்பாசனம் மற்றும் 110 மெ.மின்சாரத்தை ஈரானிடமிருந்து பெற்றுக் கொடுத்ததையும் இங்கு நினைவூட்டுவதில் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். அன்று மட்டுமன்றி இன்றும் இலங்கை முஸ்லிம்கள் தேசிய ரீதியாக தமது பங்களிப்புக்களை ஆற்றியே வருகின்றனர் என்பதை ஞாபகப்படுத்தவே இதை இங்கு குறிப்பிடுகின்றேன்.

மட்டுமன்றி, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு உட்பட்ட பல முஸ்லிம் நாடுகள் இலங்கையின் வளர்ச்சியும் நலனும் கருதி இன்றும் உதவிகள் செய்து வருகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இதேபோன்று, இலங்கையின் சட்ட மற்றும் சட்டவாக்கத்துறையிலும் முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புக்கு இலங்கையின் முதலாவது உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.ரீ.அக்பர் ஒரு உதாரண புருஷராகத் திகழ்கிறார்.

இலங்கையின் குற்றவியல் சட்டம் உட்பட்ட அரச ஊழியர் ஓய்வூதிய சட்டத்தைத் தயாரித்த நீதியரசர் அக்பர், இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம் எங்கே அமைக்கப்பட வேண்டும் என்கிறதோர் பிரச்சினை முளைவிட்ட சமயம், அதற்கென அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைமை வகித்து, பேராதெனியவில் முதல் பல்கலைக்கழகம் (பேராதனைப் பல்கலைக்கழகம்) அமைக்க அரும் பாடுபட்டவர். இன்றும் பேராதனைப் பல்கலையில் அமையப்பெற்றிருக்கும் அக்பர் மண்டபம் அவர் பெயரை ஞாபகப்படுத்துகிறது.

இதேபோன்றுதான், பாப்புச்சி மரிக்காரும் இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிகு கட்டடங்களை அமைத்து தேசியத்துக்கு பங்களிப்புச் செய்திருக்கிறார். கொழும்பு அருங்காட்சியகம், பொது தபாலகம், காலிமுகத்திடலின் ‘கோல்ஃபேஷ் ஹோட்டல்’, விக்டோரியா என்பன இவரது கட்டடக்கலைப் பங்களிப்புக்கான சாட்சியங்கள்.

கட்டடக் கலையில் முஸ்லிம்கள்தான் முன்னணியில் இருந்தார்கள் என்பதற்கு எவரும் மறுதலிக்க முடியாத அளவில் நிரம்ப ஆதாரங்கள் உள்ளன. இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவின் புதிடில்லி முதல் சென்னை வரைக்குமான அழகான, கம்பீரமான கட்டடங்களை அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான்.

அத்துடன், 20ஆம் நூற்றாண்டில் இலங்கை தேசியத்துக்கான அறிஞர்களின் பங்களிப்பு தொடர்பில் ஒராபி பாஷா, நீதியரசர் எம்.ரீ.அக்பர். அறிஞர் சித்தி லெவ்வை, ஏ.எம்.ஏ.அசீஸ் ஆகியோரை ஈண்டு குறிப்பிடலாம்.

இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடர்பில் பேசும்போது, கலாநிதி ரீ.பீ.ஜாயா, சேர்.ராசிக் பரீத், டாக்டர் எம்.சீ.எம்.கலீல், கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், ஏ.சீ.எஸ்.ஹமீத் ஆகியோரை முன்னிலைப்படுத்தலாம்

இலங்கை தேசியத்துக்கான முஸ்லிம் தனவந்தர்களின் பங்களிப்பு எனும்போது, அப்துர் ரகுமான், பாப்புச்சி மரிக்கார், அப்துல் கபூர், மாக்கான் மாக்கார், நளீம் ஹாஜியார் மற்றும் மேமன் சமூகம் உட்பட்ட பலரை முதன்மைப்படுத்திக் குறிப்பிடலாம்.

ஆக, இலங்கையின் தேசியத்துக்கு பல்துறைகளிலும் முஸ்லிம்கள் பெயர் குறிப்பிடக்கூடிய அளவில், கெளரவமாகவும், கண்ணியமாகவும் தமது பங்களிப்புக்களை ஆற்றியிருப்பது நிரூபிக்கப்பட்ட விடயம்.

பொதுபலசேனாக்களும், சிங்கள அடிப்படைவாத மற்றும் பேரினவாத அமைப்புக்களும் குற்றம் சுமத்தும் அளவில்,இலங்கை முஸ்லிம்கள் எப்போதும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவில் நடந்து கொண்டவர்களுமல்லர்.

1962ல் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கத்தோலிக்கப் பின்னணி சதி முயற்சியின்போதும் சரி, 1972 தென்னிலங்கை சிங்கள இளைஞர் புரட்சியின்போதும்சரி, 1989 தென்னிலங்கை சிங்கள பயங்கரவாத அட்டகாசத்தின்போதும் சரி,1976 துவக்கம் 2009 காலப்பகுதி வரைக்குமான தமிழீழ விடுதலைப் புலிகளின் நாட்டைப் பிரிக்கும் போராட்டத்தின்போதும் சரி முஸ்லிம்கள் இந்நாட்டின் ஜனாநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் நடந்து கொண்டதில்லை என்பதே யதார்த்தமாகும். ((நிறைவு)
Thinakkural Weekly and Vidivelli Weekly  



அடம்பிடிக்கும் ஜனாதிபதியும் தடுமாறும் பங்காளிகளும்


 மஹிந்த வெற்றிப்பெற வேண்டுமானால் சிங்கள பௌத்த வாக்காளர்களான 74 வீத வாக்காளர்களில் (80 இலட்சம் வாக்காளர்கள்) இருந்து 55 இலட்சம் வாக்குகளை அவர் பெறவேண்டும். எனினும் பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படுவதால் இது சாத்தியமானதல்ல என்று கருதப்படுகிறது

- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

ஊவா தேர்தலில் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற நிலைப்பாட்டில், யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே தீருவேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.

ஆளும் ஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளையும் பலவந்தமாக ஊடறுத்து நிலவும் கடும் பிடிவாதம் இது.

இப்போதைக்கு ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம். பொதுத் தேர்தலை நடத்தி மக்களின் நாடி பிடித்துப் பார்ப்போம் என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான அதேநேரம், ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எத்தனை சொல்லிப் பார்த்தும்….பலனளிக்கவில்லை.

எதிர்வரும் ஜனவரியில் தனது வெற்றியை நோக்கிய விவாதத்தை நேரெதிர் முனையில் நிறுத்துவதே இம்முறை இவர் தரப்பின் நோக்கமாகத் தெரிகிறது.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதோடு மட்டுமன்றி, அதில் மூன்றாவது முறையாகவும் களமிறங்கி ஜெயித்துக் காட்டுவேன் என்கிற அதீத நம்பிக்கையிலும், வீறாப்பிலும் விடாப்பிடியாக காய்களை நகர்த்தி வருகிறார் மஹிந்த ராஜபக்‌ஷ.

பொது மக்களிடத்தில் மனக்குழப்பத்தை ஏற்படுத்தி, இனவாத மற்றும் அடிப்படைவாத அடிப்படையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலை வென்று ஆட்சியை தம் வசப்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதியுட்பட்ட ராஜபக்‌ஷ சகோதரர்கள் என்ன விலை கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் என்றும் ஊகிக்க முடிகிறது.

இதேநேரம், ஊவா தேர்தலின் பின்னடைவு தந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான வழிவகைகளை அறியாமல் ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அல்லாடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மட்டுமன்றி, கடந்த தேர்தல் காலங்களை விடவும் இம்முறை ஆளுங்கட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருக்கும் ஐ.தே.க.உட்பட்ட எதிர்க்கட்சிகளின் வீரியமும், உற்சாகமும் மட்டுமன்றி, ஆளுந்தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 29 பேரளவில் கட்சி தாவும் வாய்ப்புள்ளதாக வரும் செய்திகள் மஹிந்த தரப்பினரை அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது.

மஹிந்த தரப்பினர் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து நாட்டின் அரசியல் அமைப்பு, சட்டம், சம்பிரதாயங்கள், நீதித்துறை என அனைத்தையும் புறந்தள்ளி விட்டு சர்வாதிகார வெறியில் நாட்டை ஆட்சி செய்து வருவதாக ஜே.வி.பி தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருவது ஒருபுறமிருக்க,

ராஜபக்‌ஷ குடும்பம் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே, 2015 நவம்பர் மாதத்துக்கு முன்பு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதும், அதில் சட்டத்துக்கு முரணான முறையில் மூன்றாவது முறையாக மஹிந்த போட்டியிட விழைவதுமாகும் என்கிற கருத்து ஜாதிக ஹெல உறுமய உட்பட்ட ஆளும் தரப்பின் சிறு பங்காளிக் கட்சிகளையும் இம்முறை கொஞ்சம் உசுப்பிப் பார்க்கவும் செய்திருக்கிறது.

எதிர்வரும் ஜனவரியில் அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சட்டரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ எந்த அதிகாரமும் இல்லை என்பதை அரசியல் கட்சிகள் உட்பட பொதுமக்களும் புரிந்து கொண்டிருக்கும் நிலையில், அது ஆளுந்தரப்புக்கு பாதகமான விளைவுகளைத் தரும் என்று உணர்ந்திருக்கும் அரசின் பங்காளிக் கட்சிகளும், அதிருப்தியுற்றிருக்கும் முக்கிய உறுப்பினர்களும் என்ன செய்வது? யாரை ஆதரிப்பது என்கிற பீதியில் அல்லாடுவதையும் அவதானிக்க முடிகிறது.

எதிரணி ஜே.வி.பி. எத்தனை விமர்சனங்களை முன் வைத்தும் அசராத மஹிந்தவுக்கு எதிரான முதல் உள் வீட்டுக் கல் இம்முறை ஜாதிக ஹெல உறுமயிடமிருந்தே வீசப்பட்டிருப்பதும் யாரும் எதிர்பார்த்திராத விசேட அம்சமாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை வேண்டி 07 அம்ச திருத்த யோசனைகளை இம்முறை முன் வைத்திருக்கும் ஜாதிக ஹெல உறுமய, ஜனாதிபதி இவற்றை நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து விலகி அவரைத் தோற்கடிப்போம் என பகிரங்கமாக சவால் விட்டிருப்பது எப்போதும் நிகழாததோர் திருப்பு முனைதான்.

இம்முறை, தமிழ், முஸ்லிம் வாக்குகள் தமக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்திருக்கும் மஹிந்த, பெரும்பான்மை சிங்களவர்களது வாக்குகளைச் சேகரிக்க ஹெல உறுமயவை ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணியிருந்த வேளையிலேயே ரத்ன தேரர் உட்பட்ட ஹெல உறுமயினர் அவருக்கு இவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்.

இது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஹெல உறுமயவுடனான சந்திப்பின்போது மஹிந்த கடும் சினத்தோடு, அவர்களது யோசனைகளை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

மஹிந்த தம்மை நிராகரிக்கும் பட்சத்திலும் தாம் ரணிலை ஆதரிக்கப் போவதில்லை எனவும், மூன்றாவது நபர் ஒருவரையே தாம் ஆதரிக்கப் போவதாகவும் ஏலவே அறிவித்திருந்த ஹெல உறுமய, இம்முறை மஹிந்தவுடன் வெகு சிரத்தையோடு தொற்றிக் கொள்வதில் பிரயத்தனம் காட்டப் போவதில்லை என்றே தோன்றுகிறது.

மட்டுமன்றி, மஹிந்தவுக்கான மக்கள் செல்வாக்கு குறைந்து வரும் இத் தறுவாயில், அடுத்த பாராளுமன்றத் தேர்தலைக் கணக்கு வைத்து ஹெல உறுமய ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் பயணப்படவும் வாய்ப்பிருக்கிறது.

இம்முறை எவர், எக்கட்சி தம்மை விட்டு விலகிப் போனாலும் இன மற்றும் அடிப்படைவாதக் கொள்கைகளையுடைய கட்சிகள் தமக்கு தோள் கொடுக்கும் என்றே மஹிந்த அதிகம் எதிர்பார்த்திருந்திருக்கிறார்.

ஆயினும், ஹெல உறுமயவின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர் இம்முறை சிரத்தை காட்டியதாகவும் தெரியவில்லை.

வெகு லாவகமாக பெரும்பான்மை பெளத்தர்களின் வாக்குகளை தமக்காக சேகரிக்கும் ரத்ன தேரரின் பணியை, அவருக்கு ஒருபடி மேலே சென்று இம்முறை ஞானசார தேரர் செய்வார் என மஹிந்த நினைத்திருக்கவும் கூடும்.

இலங்கையில் அமையப் பெற்றிருக்கும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெளத்த விகாரைகளூடாக மஹிந்தவுக்கு 50 இலட்சம் பெளத்த வாக்குகளை தம்மால் பெற்றுக் கொடுக்க முடியும் என மேற்படி பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதற்கு ஏற்பவே, அண்மையில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மஹிந்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலிகள் சார்பு டயஸ்பராவும் தனி ஈழக் கோரிக்கையைக் கைவிட்டால், தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் தேசியக் கூட்டமைப்பும், அவதானிகளும் கூறியதுபோல, தனி நாட்டுக் கோரிக்கைக்கும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கும் தொடர்பில்லைதான். ஆயினும், முழந்தாலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடும் ஜனாதிபதியின் இந்த தந்திரம் தெற்கு பெரும்பான்மை பெளத்தர்களின் மனங்களை குளிர வைப்பதற்காகவும், அவர்களது வாக்குகளைப் பெறுவதற்காகவும் எடுத்த முயற்சி என்பதையும் மறுதலிக்க முடியாது.

மட்டுமன்றி, புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கத்தையும் ரணிலுக்கு எதிராகத் திருப்பிவிட்டு குளிர்காயும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறது ஆளுந்தரப்பு.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, எதிர்க்கட்சியை திணறடிக்க நினைத்த அரசாங்கம் தற்போது தான் வெட்டிய குழிக்குள் வீழ்ந்து, வெளியேற வழியறியாது தவிக்கின்றது

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆளுங்கட்சியை விட முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதிலும், ஐ.தே.க அவசரமாகவும் அதேநேரம் மிகக் கவர்ச்சியான முறையிலும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதில் முனைப்புக் காட்டியிருப்பதிலும்கூட ஆளும்கட்சி தடுமாறிப் போயிருக்கிறது.

அதேநேரம், பொது மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு மீளவும் ஒரு நற்பெயரை எடுப்பது மிகவும் கடினமான விடயம் என உளவுத்துறை அறிக்கைகள் அரசுக்கு சுட்டிக் காட்டியுள்ளன.

அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் அமைச்சு அதிகாரியொருவர் எடுத்த கணக்கீட்டின் பிரகாரம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமைச்சர் டியூ.குணசேக்கர குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமன்றி, மேற்படி தேர்தல் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அலரி மாளிகையில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்துக்கு, நாடளாவிய ரீதியில் நியமிக்கப்பட்டிருக்கும் 160 அமைப்பாளர்களில் 105 பேர் மட்டுமே வருகை தந்திருந்த நிலையில், 55 பேர் புறக்கணித்திருந்தமையும் வலுப்பெறும் அதிருப்தியின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது.

இந்நிலையில், இதிலிருந்து வெளியேறுவதற்கான வழியாக ஆளுங்கட்சி ஆதரவு ஊடகங்கள் மூலம் தினந்தோறும் போலியான செய்திகளை உருவாக்கி, எதிர்க்கட்சிக்கு சேறுபூசும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் எதிர்க்கட்சிக்கு அளிக்கப்படுவதைத் தடுக்க,விடுதலைப் புலிகளுடன் எதிர்க்கட்சியை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்று ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சேறு பூசும் விதத்தில் அச்சிடப்பட்ட போஷ்டர் தொகையொன்றுடன் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான (WPCA 5548) வாகனமொன்று நேற்று முன்தினம் அம்பாறை பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் பயணித்தவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் இலங்கையின் முக்கிய ஊடகமொன்று தெரிவித்திருந்தது.

இவ்வாகனத்தையும், வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட்ட நபர்களையும் உடனடியாக விடுவிக்கும்படி மேலிடத்தில் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி அச்செய்தி மேலும் தெரிவித்திருந்தது.

தவிர, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கொழும்பு மற்றும் அண்டிய பிரதேச அச்சக உரிமையாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து அவசர பேச்சு வார்த்தையொன்றை நடத்தியுள்ளார்.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலையொட்டி தமக்கான போஸ்டர்களை அச்சடித்துத் தரும்படி மேற்படி அச்சக உரிமையாளர்களிடம் உத்தரவு கலந்த கோரிக்கையை அவர் முன்வைத்ததாக லங்கா ட்ரூத் தெரிவித்துள்ளது.

இதற்கென இறக்குமதி செய்யப்படும் அச்சுத் தாள்களை துறைமுகத்தில் இருந்து நேரடியாக கொள்கல வாகனங்கள் ஊடாக குறித்த அச்சகங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இக்காலப் பகுதிக்குள் எதிர்க்கட்சி உட்பட்ட பிற கட்சிகளின் போஸ்டர்களை மேற்படி அச்சகங்கள் அச்சடிக்கக் கூடாது என ஜனாதிபதி அச்சக உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆக, அதிகாரக் கட்டமைப்புக்கள் மீது எவரும் கை வைக்காதவாறு பார்ப்பதற்கும், அவற்றை எவரும் தட்டிக் கேட்காதவாறு பார்ப்பதற்கும் முற்றிலும் தந்திரமும், நேர்த்தியும் மிக்க திரைமறைவு வலைகள் பின்னப்படத்தான் செய்கின்றன.

ஆயினும், அவற்றையும் தாண்டி இம்முறை எதிர்க்கட்சிகள் சமயோசிதமாகத் தப்பி முன்னேறும் வாய்ப்புள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளும், சிறு கட்சிகளும் ஆரம்பத்தில் வலியுறுத்திய “ பொது வேட்பாளரி”ன் தேவை தற்போது மறக்கடிக்கப்பட்டு, மஹிந்தவுக்குப் போட்டியாக பொது வேட்பாளராகவோ அல்லது தனி வேட்பாளராகவோ ரணில் விக்கிரமசிங்கதான் களமிறங்க வேண்டும் என்கிற சூழலும் தற்போது உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தலைவர் சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார்.

நலிந்தவர் மீதும், எளிதில் இலக்காவோர் மீதும் அரசியல் வஞ்சம் தீர்ப்பது குதூகலமானது என்பதற்கமைய சரத் பொன்சேகாவின் குடியுரிமை பறிக்கப்பட்டு, வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விடயத்தை அனுதாப அலைளாக மாற்றி, அனோமா பொன்சேகாவை களமிறக்க திட்டமிடப்பட்டிருந்த அக்கட்சி, ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை கலாசாரத்தின் மத்தியில் அனோமா பொன்சேக்கா தாக்குப்பிடிப்பது சாத்தியமில்லை என்று கருதியே இந்த முடிவை எடுத்திருக்கிறது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதற்கும், அவரது வெற்றிக்காக பாடுபடவும் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மட்டுமன்றி, சோபித தேரர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மனோ கணேஷன் ஆகியோரும் ரணிலை ஆதரிக்க முன் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது லண்டனில் இருக்கும் சந்திரிகா, அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாகவும், மங்கள சமரவீரவின் ஏற்பாட்டின் பிரகாரம் ரணிலின் மேடையில் அவர் உரையாற்றும் வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் தேசிய கூட்டணியும் ரணிலை ஆதரிக்கும் வாய்ப்பு அதிகம் தென்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜே.வி.பியின் நிலைப்பாடு தற்போதைக்குத் தெரியவில்லையாயினும், அது மஹிந்தவை ஆதரிக்காது என்பது மட்டும் நிச்சயம்.

இந்நிலையில், மலையக அபிவிருத்தியை மையமாக வைத்து தாம் மஹிந்தவை ஆதரிக்கப் போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பின் பிற்பாடே தமது நிலைப்பாட்டை வெளியிடப் போவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளபோதிலும், அது தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அதற்குப் பிரதியுபகாரமாக அக்கட்சிக்கு வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் சில செய்திகள் தெரிவித்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இதன் முதற்கட்டமாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக், அஸ்லம் ஆகியோருக்கு பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தற்போதைய அமைச்சினை விட அதிகாரம் கூடிய அமைச்சுப் பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

இவற்றோடு இணைந்ததாக கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் இருவருக்கு அதிகாரமற்ற , வசதிவாய்ப்புகள் கொண்ட பதவிகள் வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தின் பலம்வாய்ந்த அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தின் சார்பில் மேற்கண்ட உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் ஹக்கீம் மட்டக்களப்பில் போட்டியிடவுள்ளார். ஆளுங்கட்சியின் வேட்பாளர் அணித் தலைவர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எப்படியோ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தேர்தல்களைப் போன்று மஹிந்தவுக்கு பெரும்பான்மை வெற்றியை பெறக்கூடிய வாய்ப்பு இல்லையென்றும் ஆங்கில செய்தித்தாள் ஒன்று கணக்கீடு செய்துள்ளது.

இதன்படி மஹிந்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட வேண்டுமானால் அவருக்கு 50.1வீத வாக்குகள் அவசியம். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ள 110 இலட்சம் வாக்காளர்களில் இருந்து இந்த தொகை அவருக்கு கிடைக்க வேண்டும்.

அதாவது மஹிந்த வெற்றிப்பெற வேண்டுமானால் சிங்கள பௌத்த வாக்காளர்களான 74 வீத வாக்காளர்களில் (80 இலட்சம் வாக்காளர்கள்) இருந்து 55 இலட்சம் வாக்குகளை அவர் பெறவேண்டும்.

எனினும் பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படுவதால் இது சாத்தியமானதல்ல என்று கருதப்படுகிறது.

2005ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க 47 இலட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார்.

எனவே ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடிப்படையில் 40 இலட்சம் வாக்குகள் உள்ளன. அத்துடன் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் வாக்குகளை மஹிந்தவை காட்டிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் 26 வீத வாக்காளர்கள் (30 இலட்சம் வாக்காளர்கள்) சிறுபான்மையினராக உள்ளனர். இதில் 1.5 வீதமானோர் வாக்களித்தாலே ரணில் விக்கிரமசிங்கவுக்கு 55 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும். மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தவரையில் இம்முறை அது இலகுவான இலக்காக இருக்காது எனவும் குறித்த கணக்கீடு தெரிவித்துள்ளது.

எப்படியோ, உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு ஆளுந்தரப்பை விடவும் இம்முறை எதிரணிக்கான ஆதரவு பெருக்கெடுக்கும் என்றே படுகிறது. (நிறைவு) Nawamani Weekly 2009

மு.கா.வா? முஸ்லிம்களா? யாரை யார் வெல்லுவாரோ?

மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

ஜாதிக ஹெல உறுமயும் தொடர்ந்து அரசுக்கு தோள் கொடுக்குமாயின் இம்முறை இனவாத மற்றும் தேசியவாதப் பிரசாரம் களைகட்டவும் வாய்ப்புள்ளது. “ இலங்கையின் அரசியலையும், அதிகார பீடத்தையும் தீர்மானிக்கும் சக்தியை சிறுபான்மையினரிடத்தில் இருந்து பிடுங்கியெறிய வேண்டும்” என உதய கம்மன்பில தெரிவித்திருந்தமையின் ஆழ அர்த்தம் இதை மென்மேலும் வலுவூட்டுகிறது




லங்கையில், ஜனநாயகத்திற்கும் தேர்தலுக்கும் எதுவிதத் தொடர்புமில்லை என்பதை வலுவாக உணர்த்தும் இன்னுமோர் தேர்தலாகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது..

தேர்தலை நடத்தும் அறிவிப்பே மிகப்பெரிய சூதாட்டமாகத் தெரியும்போது, ஆளுந்தரப்பின் வெற்றியை நோக்கிய இலக்கில் ஜனநாயகப் பண்புகள் ரத்தம் கக்கிச் சாவும் அபாயம் இம்முறை நிறையவே தென்படுகிறது.

இந்நிலையில், அச்சமும் அரசியலும் தோய்ந்த தளத்தில் இருக்கும் பொதுமக்களை மூளைச்சலவை செய்து இருவேறு கோணங்களில், மாறுபட்ட இருவேறு கணக்குகளைப் போட்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வெல்வதில் முனைப்புக் காட்டுகிறது ஆளுந்தரப்பு.

நடைமுறைச் சாத்தியமற்ற அதேநேரம் தேர்தலை இலக்காகக் கொண்டமைந்த வரவுசெலவுத் திட்டம், தேர்தல் கள நிலவரத்தை மையமாகக் கருதி பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் துறையிலான அதிரடி மாற்றங்கள், வடக்கு செல்லும் வெளிநாட்டவர் மீதான தடை, எதிர்க்கட்சிகளை மழுங்கடிக்கும் சேறுபூச்சுக்கள், அபரிமிதமான சலுகைகளை வழங்கத் துணிந்து நடாத்தப்படும் பங்காளிக் கட்சிகளுடனான பேரம் பேசுதல்கள், அரச ஊழியர்களுக்கு நம்ப மறுக்கும் விலையில் கார்களும், மோட்டார் சைக்கிள்களும், வடக்கில் சிலருக்கு காணி உறுதிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கு அவசர கதியில் ஐம்பதினாயிரம் வீடுகள்….அடிக்கல் நடுதல்கள், ஆச்சரியம்மிக்க விலைக்குறைப்புக்களும் சலுகைகளும்..…..இப்படி,

தேர்தல் காலத்தில் மட்டுமே பிரகாசிக்கும் நிலாக்களாக….இப்போதைக்கு எதையும் கொடுக்கத் தயாராகி ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை இலக்கு வைத்திருக்கிறது ஆளுந்தரப்பு.

இப்போதைக்கு வெற்றி மட்டுமே குறிக்கோள். அளிக்கப்படும் வாக்குறுதிகள் பற்றிப் பிறகு சிந்திக்கலாம் என்கிற நிலைப்பாடுதான் ஆளுந்தரப்பின் முதற் கணக்கு.

இப்படியான வாழ்க்கைச் செலவினைக் குறைக்கும் தற்காலிக சலுகைகள் மற்றும் அபிவிருத்தி பற்றிய அறிவிப்புக்களும் அடிக்கல் நடுதல்களுமே ஆளுந்தரப்பு மீதான வலுவான பொதுமக்களின் அதிருப்தியையும், வெறுப்பையும் மறக்கடிக்கும் என்பதும், மக்கள் அவசரமாகத் தம் மனசுகளை மாற்றிக்கொண்டு தமக்கு வாக்களிக்க வருவார்கள் என்பதும்தான் ஆளுந்தரப்பு போட்டு வைத்திருக்கும் முதற் கணக்கின் மூலோபாயம்.

அதேநேரம்,தேர்தல் காலங்களில் மட்டுமே ஊருக்குள் செப்பனிடப்படும் வீதிகளுக்காகவும், வழங்கப்படும் கூரைத் தகடுகள் மற்றும் மட்டமான மூக்குக் கண்ணாடிகளுக்காகவும், விரல் நொடிக்கும் பொழுதில் மனசுகளை மாற்றிக் கொண்டு வந்து கடந்த காலங்களில் வாக்களிக்கப் பழகியிருந்த மக்கள், இப்போது நிஜம் எது நிழல் எதுவென்று பிரித்துப் பார்க்கும் தெளிவையும், அறிவையும் பெற்றிருப்பதில் ஆளுந்தரப்பின் இம்முதற் கணக்கு இம்முறை தப்புக் கணக்காகும் வாய்ப்பும் அதிகமாகவே தென்படுகிறது.

இலங்கை மின்சார சபை பொருளாதார நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருந்த நிலையிலும்,அண்மைய ஊவா தேர்தலின்போது ஜனாதிபதி மின்சாரக் கட்டணத்தை தன்னிச்சையாகக் குறைத்தபோதுகூட மக்கள் ஆளுந்தரப்பைப் புறக்கணித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டுமன்றி, துறைமுகம், விமான நிலையம், அதிவேக பாதைகள் என தெற்கில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அங்கு வாழ் வாக்காளர்களின் மனசுகளை மாற்றிவிட்டதாகவும் இல்லை. கடந்த தென் மாகாணசபைத் தேர்தலில் ஜணாதிபதியின் தொகுதியிலேயே எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குகளின் தொகை மிதமாக அதிகரித்திருந்தமையும் இதற்கு நல்லதோர் உதாரணம்.

தவிர, தேர்தல்கால குண்டுகளின் தற்காலிக ஆயுளின் போக்கை எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்கிற நிலைதாண்டி, ஒருபடி மேலேயே மக்கள் அடிப்படை யதார்த்தம் புரியப் பழகியிருக்கிறார்கள்.

ஜனநாயக ரீதியான போராட்டத்தில், தனிக் குடும்பமொன்றின் எதேச்சதிகார ஆதிக்கத்துக்கு எதிரான உச்சகட்ட வெறுப்பிற்கு முன்பு பொருளாதாரமும் அபிவிருத்தியும் இரண்டாம் பட்சமென்பதை பொதுமக்கள் அண்மைய தேர்தல்களில் உணர்த்தியும்தான் இருக்கிறார்கள்.

தம்மை இரைகொள்ளும் இயந்திரத்தின் உறுப்புக்களை அச்சமின்றி, அகிம்சை வழியில் முடக்க முற்பட்டிருக்கும் மக்கள், (வெறும் சில்லறைகளுக்கு விலை போகாமல் அதேநேரம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு கருவியாகப் பயன்படுத்துவார்கள் என்றே எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு தமிழர் உட்பட்ட முஸ்லிம்களின் வாக்குகளில் இம்முறை சந்தேகம் கொண்டிருக்கும் ஆளுந்தரப்பு, விரைவான, மலிவான பிரசாரங்கள் ஊடாக பெரும்பான்மை பெளத்தர்களின் வாக்குகளை அதிகமதிகம் சுவீகரிக்க முனைந்திருப்பதுதான் அதன் இரண்டாவது கணக்காகிறது.

சிறுபான்மைக்கு எதிரான மனோபாவத்தை பெளத்தர்களிடத்தில் வளர்த்துவிட்டால் இலகுவில் என்றில்லாவிட்டாலும் சிரத்தையுடனாவது தம் இலக்கை அடையலாம் என்பது மேற்படி இரண்டாம் கணக்கின் அடிமூலமாகும்.

இச்செயற்பாட்டை வெகு நேர்த்தியாகவும், லாவகமாகவும் மேற்கொண்டால், 80 இலட்சம் பெளத்த வாக்காளர்களிடமிருந்து தமக்கான வெற்றித் தொகையை எட்டலாம் என்கிற அளவில் ஆளுந்தரப்பு இம்முறை இனரீதியான இத்துருப்புச் சீட்டைப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமாகத் தென்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையிலான குழப்பத்தில் இம்மனோபாவம் தாக்கம் செலுத்த விளைந்தாலும், ‘குடும்ப ஆதிக்கத்துக்கு‘ எதிரான தற்போதைய நாட்டின் பொது மனோபாவத்தை இது எந்தளவுக்கு ஊடறுக்கும் என்பதும், அது எத்தனை தூரம் சாத்தியப்படும் என்பதும் சொல்வதற்கில்லை.

இந்நிலையில், தம்மீது அதிருப்தியுற்றிருக்கும் பங்காளிக் கட்சிகள் வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கும் ஆளுந்தரப்பு, எப்படியாவது அவர்களைத் தக்க வைத்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் பயணப்படும் காரியங்களையும் முன்னெடுத்திருக்கிறது.

அரசை விட்டு வெளியேறத் துணிந்த ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்ள ஆளுங்கட்சி சார்பில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களிடையே கடந்த தின்களன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்போது ஹெல உறுமயவின் யோசனைகள் தொடர்பில் ஆளுங்கட்சி சார்பில் சாதகமான பிரதிபலிப்பு வெளிப்படுத்தப்பட்டதாகவும், பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பலமான கூட்டணி ஒன்று அமைவதைத் தடுக்கும் நோக்கில், ஜனாதிபதியின் தேவைக்கு அமைவாகவே ஹெல உறுமய விலகுகிறாற்போல் பாசாங்கு காட்டி இந்த நாடகத்தை முன்னெடுத்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குத் தாவும் எண்ணத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் ஹெல உறுமயவின் நாடகம் ஆளுங்கட்சிக்குப் பயன்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் வாரங்களில் ஆளுங்கட்சி மற்றும் ஹெல உறுமயவிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் மூலம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஊடாக ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஹெல உறுமய கைவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்ற வாதத்தை முன்வைத்து ஜனாதிபதிக்கு ஆதரவாக ஹெல உறுமய பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

அப்படி, ஜாதிக ஹெல உறுமயும் தொடர்ந்து அரசுக்கு தோள் கொடுக்குமாயின் இம்முறை இனவாத மற்றும் தேசியவாதப் பிரசாரம் களைகட்டவும் வாய்ப்புள்ளது.

“ இலங்கையின் அரசியலையும், அதிகார பீடத்தையும் தீர்மானிக்கும் சக்தியை சிறுபான்மையினரிடத்தில் இருந்து பிடுங்கியெறிய வேண்டும்” என ஹெல உறுமயவின் உதய கம்மன்பில தெரிவித்திருந்தமையின் ஆழ அர்த்தம் இதை மென்மேலும் வலுவூட்டுகிறது.

மட்டுமன்றி, வழக்கம்போல் முரட்டு வற்புறுத்தல்கள், எதிரணியையும் மக்களையும் இனத்துவேசத்தை அடியொட்டி மோத விடும் சூழ்ச்சித் திட்டங்கள் இம்முறை அதிகம் அரங்கேறும் வாய்ப்பும் தெரிகிறது.

பெரும்பான்மையை இன ரீதியான கொள்கையுடன் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறு கட்சிகளுக்கு மஹிந்தவை விட்டால் வேறு போக்கிடம் இல்லையென்பதும், ஐ.தே.கவும் அக்கட்சிகளை ஒன்றும் வாரியணைக்கப் போவதில்லை என்பதும் நிதர்சனம்.

ஆளும் கட்சியின் பங்காளிகளான, கட்சிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வைத்திருக்கும் சிறு இடதுசாரிக் கட்சிகளோ இல்லை ரிசாத் பதியுத்தீன், அதாவுல்லாக்களின் மினி காங்கிரஸ்களோகூட ஐ.தே.கவின் இப்போதைய தேவையாக இருக்காது.

இவர்களது வாக்கு வங்கிகள் பலஹீனமாகவே இருக்கும் நிலையில், மஹிந்தவைப் போன்று ரணில் இவர்களுக்கு அத்தனை சுகபோகங்கள் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்க முடியாது.

மஹிந்தவுடன் தங்கியிருக்கும் காலம் மட்டுமே மேற்படி தனி நபர் கட்சிகளின் அரசியல் ஆரோக்கியம் மிகுந்ததாக இருக்கும் என்பதை அவர்களே அறிந்தும் வைத்திருக்கும் நிலையில், மஹிந்தவை விட்டு அவர்கள் நழுவிச் செல்வார்கள் என்றும்கூட எதிர்பார்க்க முடியாது,

மட்டுமன்றி, அளுத்கமை இன வன்முறைக்குப் பிறகு முஸ்லிம்களின் முழுமொத்த ஆதரவும் தம் பக்கம் இருப்பதை ஐ.தே.க.அறிந்து வைத்திருப்பதும், வெறும் தரகர்கள் மூலமாக அதனைப் பெற வேண்டிய தேவை இல்லையென்பதும் ஐ.தே.கவுக்குத் தெரியும்.

சாட்சாத் ஐ.தே.க.,வுக்கு ஜனாதிபதித் தேர்தலில் 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்திரமான வாக்குகள் உண்டு என்கிறபோது, அடுத்த 15 இலட்சம் வாக்குகளுக்காகவே ஆளுந்தரப்பில் இருந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும், இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் அது தன்பக்கம் இழுக்கப் பிரயத்தனப்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சரத் பொன்சேக்காவின் ஜனநாயகக் கட்சி என்பன ஜென்மத்துக்கும் மஹிந்தவை ஆதரிக்கப் போவதில்லை என்பது ஐ.தே.கவுக்கு ஆறுதல்தான்.

இந்நிலையில்,அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கில் 80 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக ரீதியான ஆட்சியொன்று இருக்கின்ற நிலையில், அதனைத் தாண்டிய இராணுவ மற்றும் ஆளுநர் ஆட்சி என்பன தொடர்ந்து கொண்டிருப்பதாகவும்,.வடக்கிலும் கிழக்கிலும் இன்று இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியலும் அரசியல் மயப்படுத்தப்பட்ட இராணுவமும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,

தமது இன, மத, சமூக அடையாங்களை நிலைநிறுத்தி எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக தாம் போராடாது இருக்கவும் முடியாது. எனவும் தெரிவித்திருக்கிறார்.

எவை எப்படியோ, அளுத்கமையில் பொதுபலசேனா தாண்டவமாடி முடியும்வரைக்கும் வேடிக்கை பார்த்த அதிகாரத் தரப்பின் மீதான நம்பிக்கையை இழந்திருக்கும் முஸ்லிம்களின் மனோநிலை இன்று இவ்வாறுதான் இருக்கிறது.

ஊவா தேர்தலில் ஹக்கீமும், ரிசாத் பதியுத்தீனும் சேர்ந்து களமிறங்கியும் முழுமொத்த 35000 முஸ்லிம் வாக்குகளில் வெறும் 5000 வாக்குகளைக்கூட அவர்களால் பெற முடியவில்லை என்பதிலேயே ஆளுந்தரப்பு மீதான முஸ்லிம்களின் வெறுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.

ஆக, ஹக்கீமுக்காகவோ, ரிசாதுக்காகவோ, அதாவுல்லாவுக்காகவோ, ஹிஸ்புல்லாவுக்காகவோ ஆளுந்தரப்புக்கு வாக்களித்து பொதுபல சேனாக்களை மேலும் உயிரூட்டுவதற்கும் முஸ்லிம்கள் தயாராக இல்லை.

முஸ்லிம்களின் இந்த மனோபாவம் இம்முறை ஐ.தே.கவுக்கு சாதகமாகவே அமையவும்கூடும்.

இந்நிலையில், முஸ்லிம்களின் வாக்குகளை மட்டுமே நம்பி, அதில் தங்கி வாழும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளுந்தரப்பில் தொடர்ந்துமிருந்து, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை ஆதரிக்குமானால், காலம் காலமாக மர்ஹூம் அஷ்ரபுக்காக ஒரு நன்றியுணர்ச்சியின் அடிப்படையில் அக்கட்சிக்கு வாகளிக்கப் பழகியிருக்கும் கிழக்கு வாழ் முஸ்லிம்களின் வாக்குகளில் சரிபாதிக்கும் மேல் இம்முறை ஐ.தே.கவைச் சென்றடையும் நிலைமையும் ஏற்படலாம்..

ஆளுந்தரப்பில் இருந்துகொண்டு ஹக்கீம் இம்முறை தன்னை நிரூப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியமாகவும் தோன்றவில்லை. மட்டுமன்றி, இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கப் போவதான ஜனாதிபதியின் வாக்குறுதியை முன்னிறுத்தி மட்டும் ஹக்கீமால் இம்முறை வாக்குக் கேட்கவும் முடியாது.

ஆளுந்தரப்பில் ஹக்கீம்…எதிரணியில் முஸ்லிம்கள் என்கிற இன்றைய சூனியமான சூழ்நிலையில்,

முஸ்லிம்களுக்காக முஸ்லிம் காங்கிரஸா? இல்லை முஸ்லிம் காங்கிரஸுக்காக முஸ்லிம்களா என்கிற யதார்த்தமும், அதை நிரூபிக்கக்கூடிய வல்லமையும் இம்முறை ஹக்கீமிலும், கிழக்கு வாழ் முஸ்லிம்களிலும் ஒருசேரத் தங்கியிருப்பதும் வேடிக்கைதான்.

முஸ்லிம்களா? முஸ்லிம் காங்கிரஸா….இம்முறை யாரை யார் வெல்லுவார்கள்? யார் எவரை நிராகரிக்கப் போகிறார்கள் என்பதுதான் இந்த அரசியல் சதுரங்க விளையாட்டின் விறுவிறுப்பாகவும் அமையப்போகிறது. (நிறைவு)
Nawamani Weekly

யாரோ ஏவிய அம்பா ஞானசார தேரர்?


உயர்மட்ட ஆசீர்வாதம் இல்லாது இருந்திருக்குமேயானால் இல்லை ஒரு தற்செயலான இனமுறுகல் என்றிருந்தால் அளுத்கம இத்தனை பேரழிவைச் சந்தித்திருக்கவும் வாய்ப்பில்லை!

- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

யார் என்ன சொன்னாலும், தேரவாத பெளத்தத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட சதிதான் அளுத்கம இனவன்முறை என்றால் அது மிகையில்லை.

1983  கறுப்பு ஜூலைக்குப் பிறகு, இலங்கை வாழ் சிறுபான்மை சமூகத்தவரைக் குறிவைத்துக் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகமோசமான, மிலேச்சத்தனமான, அதேநேரம், திட்டமிட்டு ஈடேற்றப்பட்ட இனவன்முறைதான் அண்மைய “அளுத்கம கலவரம்”.

1994  சந்திரிகா பண்டாரநாயக்கா ஆட்சிக்காலத்தில், சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கங்கொடவில சோமதேரர் உசுப்பேற்றியதற்கு ஒத்ததுதான் அண்மைய இந்த தேரவாத இனவாதம்,

அன்றைய சந்திரிகா ஆட்சியிலேயோ இல்லை அதன் பிறகான குறுகியகால ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலேயோ முழுதுமாக வேரறுக்கப்படாததன் விளைவு, அது பல மடங்கில் தீவிரம்பெற்று….மஹிந்த ஆட்சிக்காலத்தில் அதன் வாள்முனைகள் கூர் தீட்டப்பட்டிருக்கின்றன என்பது பலர் அறியாத உண்மை.

அப்போதைய மு.கா.தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களையும், முஸ்லிம்களையும் ஒருசேரக் குறிவைத்திருந்த சோமதேரரின் தேரவாத பெளத்த இனவாதம், அப்போதைய கிறிஸ்தவ தேவாலயங்களையும் அதிகம் நொறுக்கித் துவம்சம் செய்திருந்தன.

இன்றும் அதே வீச்சை மிகைத்துத் தாண்டவமாடும், அதே தேரவாத பெளத்தத் தீவிரவாதம் தன் தலைமையை மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கிறது.

அன்று,சோமதேரர் இருந்தயிடத்தில் இன்று ஞானசாரதேரர் அரியாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார் என்பது மட்டுமே வித்தியாசம். மற்றப்படி நெறியாழ்கையும் செயன்முறையும் ஒன்றுதான்.

சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவத்தை பெரும்பான்மை சிங்களவரிடத்தில் விதைப்பதும், வளர்ப்பதும்தான் இருவரினதும் நோக்கம்.

முன்னையவர் சோம தேரரைவிடவும் பின்னையவர் ஞானசாரதேரர், அரச ஆதரவோடு நேரடியாகவே சட்டத்தைத் தன் கையில் எடுத்து, முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும்,  ஜீவனாம்சத்தையும் களையெடுக்க முனைந்திருப்பதும், முஸ்லிம்களின் வம்ச விருத்தியழிப்பை பகிரங்கமாகவே மேற்கொண்டு வருவதும்தான் ஆபத்தான அம்சம்.

முன்னைய சோமதேரருக்கு சில சிறுசிறு இனவாதக் கட்சிகளின் மறைமுக ஆதரவு இருந்து வந்த நிலையில், அக்கால ஆட்சியில் இருந்த சந்திரிகா அம்மையாரின் அல்லது அவரது அமைச்சர்களின் பகிரங்க ஆதரவு அவருக்கு இருந்ததென்று குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை.

ஆனால், தற்போது நிலைமை அவ்வாறில்லை. சகலமும் தலை கீழாகத்தான் அமைந்திருக்கின்றமை துர்ப்பக்கியம்.

மஹிந்த ஆட்சியின் முக்கிய பதவிகளில் இருக்கும் பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்‌ஷ, அமைச்சர்கள் விமல் வீரவன்ச,சம்பிக ரணவக்க மற்றும் சில இனவாதக் கட்சிகளின் ஆசீர்வாதம் பொதுபலசேனாவுக்கும், அதன் பொதுச் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரருக்கும் கிடைத்து வருவதென்பது யார் மறுத்தாலும், அவர்களாகவே மறுத்தாலும் அது பலரும் அறிந்த உண்மை.

இல்லாவிட்டால், ஒரு ஜனநாயக நாட்டில் இத்தனை தலைக்கனத்தோடும், திமிரோடும் சுதந்திரமாக, சட்டத்தைத் தம் கையிலெடுத்து…பொலிஸும் இராணுவமும் புடைசூழ அளுத்கமவில் ஒரு இனச்சுத்திகரிப்பு வெறியாட்டத்தை ஞானசாரர் என்கிற தனிமனிதனாலேயோ, இல்லை பலசேனா என்கிற ஒரு சிறு அமைப்பாலேயோ மேற்கொண்டிருக்கமுடியும் என்று கருதமுடியாது.

உயர்மட்ட ஆசீர்வாதம் இல்லாது இருந்திருக்குமேயானால் இல்லை ஒரு தற்செயலான இனமுறுகல் என்றிருந்தால் அளுத்கம இத்தனை பேரழிவைச் சந்தித்திருக்கவும் வாய்ப்பில்லை.

விதியை நொந்தாலும்கூட அளுத்கம வன்முறை, சதிவரைந்த சித்திரம் என்பதுதான் யதார்த்தம்.

ஏற்கனவே, யுத்தக்குற்றவாளியாக ஐ.நா.மனித உரிமை ஆணக்குழு விசாரணைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்த மஹிந்த அரசை, அளுத்கம விவகாரத்தின் உக்கிரம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட சர்வதேச சமூகத்தை மீண்டும் ஒருமுறை கடுஞ்சினத்தோடு திரும்பிப் பார்க்க வைத்திருந்தன.

அளுத்கம வன்முறைக்கு அடிப்படை..…அரசு எத்தனை சோடித்து உடுப்பாட்டி மறைத்தாலும், ஞானசாரரின் இனவாதத்தைத் தூண்டிய நாகரிகமற்ற பேச்சுத்தான் என்பதில் ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை உடன்பட்டிருந்தார். அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளும் இதை வழிமொழிந்திருந்தன.

கடந்த ஐந்து வருடங்களுக்குள் இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக 300 வன்முறைச் சம்பவங்களும் (அளுத்கம விவகாரத்துக்குப் புறம்பாக),கிறிஸ்தவர்களுக்கு எதிராக 200 வன்முறைச் சம்பவங்களும் ஐ.நாவில் பதியப்பட்டிருப்பதை நவீபிள்ளை உரத்ததொனியில் ஞாபகப்படுத்தவும் நேரிட்டது.

மட்டுமன்றி, அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருக்கும் கோதபாய ராஜபக்‌ஷவுக்கும், மஹிந்தவுக்கும் அமெரிக்கா விடுத்த மறைமுக அச்சுறுத்தல்கள், அரபு நாடுகளின் / அதன் தூதுவர்களின் மிரட்டல்கள்,வெளிநாடுகளின் வன்மையான கண்டனங்கள், ஞானசார தேரரின்அமிரிக்க விசா ரத்துச் செய்யப்பட்டமை, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பரவலான குற்றச்சாட்டுக்கள்…….

இப்படி..அதிரடியான பல நடவடிக்கைகள், மஹிந்த அரசின் நெற்றிப் பொட்டைத் தாக்க ஆரம்பித்ததில், நேற்றைவரைக்கும் பொதுபலசேனாவோடு கூடிக்குழாவி,அதை மேவிக்கொண்டிருந்தவர்களை இன்று கழுவுறமீனில் நழுவுற மீன்களாக ஆக்கியிருக்கிறது.

இத்தனை நாள் பொதுபலசேனாவோடு தோளோடு தோள் சேர்த்திருந்தவர்களில் பலர் தற்போது அதை விட்டுக் கொஞ்சம் நகர்ந்திருக்கவே முனைகிறார்கள்.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய, இப்போதெல்லாம் தனக்கும் பொதுபலசேனாவுக்கும் எதுவிதத் தொடர்புமில்லை என்று உரத்தகுரலில் சொல்ல ஆரம்பித்திருப்பதற்கு, மேற்கூறிய காரணங்களோடு, பொது அரசியலுக்கு வரும் அவரது நோக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

(பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.எச்.எம்அஸ்வரை ஒரு மாகாணத்தின் ஆளுநராக நியமிப்பதன் ஊடாக பாராளுமன்றில் வெற்றிடமாகும் அவரிடத்துக்கு, கோதபாய ராஜபக்‌ஷவை நியமித்து, அவருக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பதவிகளை வழங்குவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.)

அத்துடன், தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், ஹம்பாந்தோட்டையில் அன்றி கொழும்பில் இருந்தே தான் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய விரும்புவதாகவும் அண்மையில் அவரே குறிப்பிட்டுமிருக்கிறார்.

இந்நிலையில், ரஞ்சன் விஜேரத்ன, லலித் அதுலத்முதலி படுகொலைகளின்போது “என்னை வேண்டுமென்றால் கொலை செய்யுங்கள். ஆனால்,எனது நற்பெயரைக் கொலை செய்யாதீர்கள்” என்று முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச கூறியதற்கு ஏற்பவே,

அளுத்கம விவகாரம் மற்றும் பொதுபலசேனாவின் அண்மைக்கால அடாவடித்தனங்களின் குற்றவாளியாக சகலவிரல்களும் தன்னை நோக்கி நீண்டிருப்பதை உணர்ந்திருக்கும் பாதுகாப்புச் செயலர்,பொது அரசியலை மையப்படுத்தி தனது ‘சரிதம்’ களங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதே நிலைப்பாட்டில்…முஸ்லிம்கள் மீதான தக்குதல்களை சரியென்று வாதிட்டு வந்த அமைச்சர்கள் விமல்வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும்கூட பொது பலசேனாவிடமிருந்து தற்போது கொஞ்சம் ஒதுங்கியிருப்பதாகக் காட்டிக்கொள்வதை அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம் அடிபடைவாதிகளை வெறுப்பதாக பகிரங்கமாகவே கூறியிருக்கும் சம்பிக்க ரணவக்க, பொது பலசேனாவின் உறவை மறுத்திருக்கிறார்.

அதே போன்றுதான் . பொது பலசேனாவோடு எதுவிதத் தொடர்பும் தனக்கில்லை என்று தெரிவித்திருக்கும் விமல் வீரவன்ச, அளுத்கம வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், ஐ.தேகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொரகொடவும் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். மட்டுமின்றி, மிலிந்த மொரகொட ஒரு அமெரிக்க ஒற்றர் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

எப்படியோ, ஞானசாரதேரர் ஒரு தனிமனிதரல்லர்….அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகள்,அரச அங்கீகாரம்,பணம் (அவரது வங்கிக்கணக்கில் 340 மில்லியன் ரூபா வைப்பில் இருப்பதாகவும் தகவல்கள் உண்டு), பாதுகாப்பு என்பவற்றை அவதானிக்கும்போது, அவர் எங்கிருந்தோ, யாரோ ஏவிய அம்பு என்பது மட்டும் தெளிவாகிறது.

விமல் கூறுவதுபோல அமெரிக்கா தான் ஞானசாரரை ஏவிவிட்டிருந்தால், அமெரிக்கா அவரது விசாவை ரத்துச் செய்யவேண்டிய தேவை இருந்திருக்காது. அப்படியாயின், அவரது பின்னணியில் இருப்பது யார்?

அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுவது போல நோர்வேயும், வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுமா?


இலங்கையில் புலிகளின் போராட்டம் இருக்கின்ற காலத்தில் தனது இனவாத செயற்பாடுகளை அடக்கி வாசித்து வந்த ஞானசாரதேரா், புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே வீதிகளில் இறங்கி தனது போராட்டத்தை ஆரம்பித்தார்.பௌத்த பேரினவாதத்தின் அடையாளமாகவும் மாறினார்.

அவரின் செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக முஸ்லிம்களை குறிவைத்திருந்ததே தவிர தமிழ் மக்களை அவா் ஒருபோதும் தாக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கு சான்றாக, ஞானசாரதேரர் அண்மையில் கொழும்பில் தமிழ் மக்களோடு வீதிக்கு இறங்கி மேற்கொண்ட ஆா்ப்பட்டத்தைக் கூறலாம்..இந்த ஆர்ப்பாட்டம் கிறிஸ்வத, முஸ்லிம் மக்களை குறிவைத்து நடாத்தப்பட்டது.

இங்கே, மதமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்த  அவா்,.கிறிஸ்தவா்களும், முஸ்லிம்களும் இந்துக்களையும் பௌத்தா்களையும் மதம் மாற்றுவதாகவும், அவா்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டங்களைத் தொடங்க வேண்டும் என்றும் மிக ஆக்ரோசமாக உரையாற்றியிருந்தமையும் குறிப்பிட்ட புலிகளால் ஏவப்பட்ட அம்பா என்கிற சந்தேகத்தை வலுப்பெறச்செய்கிறது..

இதேநேரம், தேரவாத பெளத்த இனவாதம் வேர்விட்டிருக்கும் பர்மா,தாய்லாந்துகளின் ராணுவ ஆட்சியாளர்களா? இல்லை… பெயரளவு ஜனநாயகத்தை ஊடுருவி எழுந்திருக்கும் ராணுவ ஆட்சிக் கம்போடியாவா?இவர் பின்னணி என்றும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

இல்லை…படிப்படியாக மக்கள் செல்வாக்கை இழந்துவரும் ‘மஹிந்தஅன்ட்கோ’,மேற்படி நாடுகளை அடியொட்டி, அவற்றின் ஆதரவோடு இலங்கையில் ராணுவ ஆட்சியொன்றை ஸ்தாபிப்பதற்கான துரும்பாகத்தான் ஞானசாரரைப் பயன்படுத்திக் கொள்கின்றனரா?

எவை எப்படியோ, மஹிந்த அரசுக்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது உண்மையான கரிசனை கிடையாது என்பதும், முஸ்லிம்களை அவர்கள் அரவணைத்திருப்பதாகக் காட்டிக்கொண்டிருப்பது மத்தியகிழக்கு அரபு நாடுகளின் தொழில்வாய்ப்பு மற்றும் உதவிகளுக்காகவும் என்றேபடுகிறது.(நிறைவு)
நவமணி வாரயிதழ் 2014 ஜூன்.   


நடுநிசியிரவுச் சதி மீண்டு, உயிர் தப்பிய ஜனநாயகம்


 “ பொது எதிரணியில் 49 கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் கூட்டுச் சேர்ந்திருந்த நிலையில், சில இனவாத அமைப்புக்களோடு மட்டும் தனியாளாய் களத்தில் நின்ற மஹிந்த மயிரிழையில்தான் தோற்றிருக்கிறார். ஆக, இனவாத அஸ்திரம் அவருக்கு கைகொடுக்கத்தான் செய்திருக்கிறது. “

மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

riskyshareef@gmail.com

னநாயகத்தின் வெற்றியும், இனவாதத்தின் தோல்வியும்… ஞானசாரர்கள் வெட்டிய குழி… கோத்தாவினால் கெட்ட மஹிந்த… மந்திர தந்திரங்களை விஞ்சிய, மகேசன் தீர்ப்பு…. கழுத்தறுபட்டுச் செத்த குடும்ப ஆதிக்கம்…. பேராசை பெரும் நஷ்டம்…. சந்திரிகா இட்ட சாபமும் சாயம் வெளுத்த மஹிந்தவும்…..மைத்திரி யுகம் ஆரம்பம்…..சர்வாதிகாரத்துக்கான சாவுமணி….

இப்படி, 2015 ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த கையோடு எழுதப்படும் இக்கட்டுரைக்கு, அழகழகாய் அதேநேரம் அர்த்தம் பொதிந்ததாய் மேற்சொன்னபடி எப்படி வேண்டுமானாலும்…..எத்தனை தலைப்புக்களும் இடலாம்.

அத்தனை விசித்திரமாகவும், சரித்திர முக்கியத்துவம் மிகுந்ததாகவும் நடந்து முடிந்திருக்கிறது நடப்பாண்டின் ஜனாதிபதித் தேர்தல்.

“மஹிந்த தேசப்பிரியவின் (தேர்தல் ஆணையாளர்) நெஞ்சுரமும், சிறுபான்மை சூட்டிய கிரீடமும்” என்கிற தலைப்பும் இக்கட்டுரைக்கு சாலப் பொருந்துகிறது..

ஆயினும், “நடுநிசியிரவுச் சதி மீண்டு. உயிர் தப்பிய ஜனநாயகம்” எனும் தலைப்பிலேயே ஓர் உயிர்ப்பு இருப்பதாக நான் உணர்கின்றேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் வந்தே தீரும்; அது அழகாகவும் இருக்கலாம்…இல்லை, இரத்தக் களரியும் ஏற்படலாம் என்பதற்கு ஒப்ப, இத்தேர்தலில் இரத்தக் களரிக்கான வாய்ப்புக்கள் இருந்து….அவை தவிர்க்கப்பட்டிருக்கின்றன..

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த அன்றைய நடுநிசி இரவிலேயே, தான் தோற்றுப் போனதை மஹிந்த ராஜபக்‌ஷ உணர்ந்துகொண்டிருக்கிறார்.

அதை ஜீரணிக்க முடியாமலும், அதிகாரத்தை விட்டுப்போக மனமின்றியும் இருந்த அவர், ஒரு அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவதன் ஊடாகவும், பாராளுமன்றைக் கலைப்பதன் ஊடாகவும் தொடர்ந்தும் (பலவந்தமாக) ஆட்சியில் இருக்கவே திட்டமிட்டுமிருந்திருக்கிறார்.

தனக்கு, இந்நாட்டை ஆள்வதற்கு இன்னும் இரு வருடகால பாக்கியம் இருப்பதாகக் கூறி, இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக, சர்வாதிகாரி என்றில்லாமல் தன்னை ஒரு ஜனநாயகவாதியாகக் காட்டிக் கொள்வதற்கும் அவர் முயன்றிருக்கிறார்.

இந்நிலையில், அவரது சதி முயற்சியில் இம்முறை பங்குதாரர்களாக விரும்பாத சட்டமா அதிபர் உட்பட்ட பாதுகாப்புத் தலைமைகளும், கட்சி முக்கியஸ்தர்களும் உடன்பட மறுத்ததிலேயும், ரணில் விக்கிரமசிங்கவின் வலியுறுத்தலிலுமே அவர் அதிகாலையிலேயே அலரி மாளிகையை விட்டு வெளியேறியிருக்கிறார்.

அமெரிக்க உட்பட்ட சில வெளிநாடுகளும் மஹிந்தவை வெளியேற வற்புறுத்தியதாகக் கூறப்படுகின்றது.

முழுதுமான தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னமே, ஒரு கணவான் அரசியல்வாதி போன்று அவர் அலரி மாளிகையை விட்டுச் சென்றமை, உள்வீட்டு ரகசியம் தெரியாத அனேக அப்பாவி மக்களிடத்தில் அவர்பால் ஒருவித அனுதாபத்தை ஏற்படுத்தவும் செய்தது.

பொதுக் கூட்டங்களில், தனது உடை கசங்காத கவனத்தோடு, ஏழைக் குழந்தைகளை வாரியணைத்து முத்தமிடும் மஹிந்தவின் கைதேர்ந்த நாடகத் தனங்களில் அதிகம் ஏமாந்து போயிருக்கும் பாமர சமூகத்தினரை, மஹிந்தவின் இந்த அதிகாலை வெளியேற்றம் நிச்சயம் கண்கலங்கத்தான் செய்திருக்கும்.

மஹிந்த ராஜபக்‌ஷ அப்படி வெளியேறாது இருந்திருந்தால், நாட்டில் பெருத்த இரத்தக் களரியோடு ஒரு தொடர் போராட்டம் வெடித்திருக்கும் என ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியோ, மஹிந்த – மைத்திரிக்கு இடையிலான வாழ்வா சாவா என்றிருந்த போட்டி அழகாய் நிறைவடைந்திருக்கின்றமை ஆறுதல்தான்.

ஆனால், இந்த ஆறுதல் என்பது….பொதுமக்களிடத்தில் குறிப்பாக தமிழ் முஸ்லிம் சிறுபான்மையிடத்தில் கடந்த இரு மாதங்கள் இரவு பகலாக வியாபித்துப் பரவியிருந்த அச்சம் களைந்தே ஏற்பட்டதொன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றமொன்று தேவை எனக் கருதப்பட்டிருந்த நிலையில், மஹிந்த குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கும், அநியாயங்களுக்கும் முன் அது சாத்தியப்படுமா என்கிற அடிப்படையிலேயே இந்த நியாயமான அச்சம் வளர்ந்து வலுப்பெற்றிருந்தது.

இந்நிலையில், நியாயமான அதேநேரம் சுதந்திரமான தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் மாத்திரமே மைத்திரியின் வெற்றி ஊர்ஜிதமாகும் என்றும், வெறும் ஐந்து இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே மைத்திரி வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாகவும், இந்த சொற்ப எண்ணிக்கை மீது ஆளுந்தரப்பு மோசடி செய்வது இலகுவானதென்றும், கடந்த வாரம் – தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பு “ மனசுகளில் ஜொலிக்கும் மைத்திரியும், மதில்களில் ஜொலிக்கும் மஹிந்தவும்” எனும் கட்டுரையில் எழுதியிருந்தேன்.

மட்டுமன்றி, இனவாத அஸ்திரத்தையே மஹிந்த தரப்பு கடைசித் துரும்பாகத் தம் கையில் எடுக்கும் என்பதையும், இற்றைக்கு இரு வாரங்களுக்கு முன்பு (இனவாத அஸ்திரமும் வியாபிக்கும் பீதியும் எனும் கட்டுரையில்) தெளிவாக விளக்கியிருந்தேன்.

ஆக, முன்னமே கூறியதுபோலவே, இனவாதமும் வெல்லத் துடித்துத் தோற்று, முடுக்கிவிடப்பட்டிருந்த வாக்கு மோசடி முயற்சிகளும் இறுதிக் கட்டங்களில் தவிடுபொடியாக்கப்பட்டு, தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய மனவுறுதியோடு, எந்தக் கட்டத்திலும் வளைந்து கொடுக்காததில் மட்டுமன்றி, மாறும் தன்மை கொண்டிருந்த களநிலவரங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்தி சாதூரியமாக அவர் காய்களை நகர்த்தியதில் விளைந்ததே மைத்திரியின் இந்த வெற்றி என்பதே உண்மை.

ஜனநாயகத்துக்கும் இலங்கையின் தேர்தல்களுக்கும் என்ன தொடர்பிருக்கப் போகிறது என்கிற கடந்த இரு தசாப்த கால ஐயம் களையப்பட்டு, ஜனநாயகம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது இந்த ஜனாதிபதித் தேர்தல்.

சந்திரிகா, சோபித தேரர், ரணில், மைத்திரி, ராஜித, மங்கள, சம்பிக, ரத்ன தேரர் எனப் பலர் ஜனாதிபதித் தேர்தல் என்கிற மேற்படி சதுரங்க விளையாட்டை வெகு லாவன்யமாக ஆரம்பித்து விளையாடியபோதும், வெற்றியைத் தொட்ட ஆட்ட முடிவில் ஏனோ தனித்து மிளிர்ந்து ஜொலித்தவர் தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரியதான்.

தேர்தலின் இறுதிக்கட்ட இரவுகளில் அவர் இலேசாகக் கண்ணயர்ந்திருந்தாலும் கூட, பொது எதிரணியின் தேர்தல் வெற்றியை ஆளுந்தரப்பு கபளீகரம் செய்திருக்கும். அதற்கான அடையாளங்கள் தென்பட்டதற்கான சாட்சியங்கள் நிறையவும் உண்டு..

2010 ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் ஆணையாளராக இருந்த தயானந்த திஸநாயக்க போலன்றி, அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், ஜனாதிபதித் தேர்தலை நீதியாக நடத்த வேண்டும் என்பதில் மஹிந்த தேசப்பிரிய இம்முறை உறுதியாகவே இருந்தார்.

வாக்கு மோசடியில் ஈடுபடுபவர்களை, தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணையாளர் இம்முறை விடுத்த உத்தரவு, ஆளுந்தரப்பு உட்பட்ட பலருக்கும் கொடுக்கப்பட்ட முதல் அதிர்ச்சி வைத்தியம். அது சாதாரணமானதொன்றுமல்ல..

வாக்கு மோசடிகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் அல்லது சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்ற வழமையான தேர்தல் ஆணையாளரின் எச்சரிக்கைகளை.த் தாண்டி, மஹிந்த தேசப்பிரியவின் குரல் இம்முறை கடுமையாகவே ஒலித்தது..

அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்தவின் தரப்பாயினும், வாக்கு மோசடி செய்தால் நெற்றியில் சுட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் தேசப்பிரிய விடுத்த உத்தரவில், மோசடிக்கு துணிந்திருந்த ஆளுந்தரப்பு தொண்டர்கள் இம்முறை அச்சம் மேலோங்க பின் வாங்கியதையும் அவதானிக்க முடிந்தது. .

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போலவே, இத்தேர்தலில் வெறும் 4.5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே மைத்திரி, மஹிந்தவை வென்றிருக்கிறார். (மைத்திரி : 62,17,162 வாக்குகள் (51.28%), மஹிந்த : 57,68,090 வாக்குகள் (47.58%))

இந்நிலையில், இச்சிறு தொகையை மோசடி செய்வதன் ஊடாக மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கும் மஹிந்த தரப்பு யோசித்திருக்கிறது..அதற்கான நடவடிக்கைகளும் அன்றைய நடுநிசியிரவில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தில் இம்முறை அளிக்கப்பட்ட 13,11,694 வாக்குகளில், மைத்திரி 7,25,073 வாக்குகளையும், மஹிந்த 5,62,614 வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில், மைத்திரி 1.5 இலட்சம் வாக்குகளால் முன்னிலையில் இருந்தார்.

கொழும்பு மாவட்டத்துக்கான வாக்கெண்ணும் பணிகள் திரித்துவ மற்றும் டீ.எஸ். சேனநாயக்கா ஆகிய இரு கல்லூரிகளிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறிப்பிட்ட இரவு 1.00 மணியளவில் டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரியை சுற்றி வளைத்திருந்த மஹிந்த சார்பு உளவுப் பிரிவினர், இரவு 2.00 மணியை அண்மிக்கும்போது கல்லூரிக்குள் நுழைந்து வாக்கு மோசடியொன்றில் ஈடுபட முயற்சித்த தறுவாயில், தேர்தல் ஆணையரின் கடும் முயற்சியால் அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

13.57,143 வாக்குகள் அளிக்கப்பட்டு, மைத்திரி மஹிந்தவை விடவும் 5000 வாக்குகளால் முன்னிலையில் இருந்த கம்பஹா மாவட்டத்திலும் இதுபோன்றதோர் சதி முயற்சி அன்றைய இரவில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

இத்தேர்தலில் தேர்தல் ஆணையாளர் மட்டும் கொஞ்சம் வளைந்து கொடுத்திருந்தால் அல்லது பாராமுகமாக இருந்திருந்தால் மைத்திரியின் வெற்றி, அந்த ஓரிரவுக்குள்ளேயே மழுங்கடிக்கப்பட்டிருக்கும். ஆக, இத்தேர்தலின் நட்சத்திர நாயகனே (ஹீரோ) மஹிந்த தேசப்பிரியதான் என்று சுட்டுவதும் தப்பில்லை.

இனி, இக்கட்டுரையின் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்ட அடுத்த தலைப்புக்களிலும் கூட இத்தேர்தலை ஆராயலாம்.

ஆளுந்தரப்பு கட்சியின் சிரேஷ்ட முக்கியஸ்தர்கள், தேர்தலுக்கு அவசரப்பட வேண்டாம் என மஹிந்தவை ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தியிருந்தனர்.

ஆயினும், எவர் பேச்சையும் கேட்காமல் தமது ஆஸ்தான ஜோதிடர்களை மட்டுமே அதிகம் நம்பி இம்முறை களமிறங்கியிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான மந்திர தந்திரங்களை விஞ்சிய மஹேசன் தீர்ப்பு, ஜோதிடம் மற்றும் அதன் மீதான நம்பிக்கையைப் பொய்ப்பித்திருக்கிறது.

மட்டுமன்றி, தொடர்ந்து இன்னும் எட்டு வருடங்களுக்கு “ராஜாவாட்டம்” ஒரு வாழ்க்கை வாழலாம் என்றிருந்த அவரது பேராசை பெரும் நஷ்டமாகி, அது அவரது பதவிக்காலம் நிறைவெய்துவதற்கு இரு வருடங்களுக்கு முன்பே அவரைத் தூக்கிக் கடாசியிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுபோன முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதி என்கிற வரலாற்றின் அவப்பெயரையும், இழுக்கையும்கூட இந்த மூன்றாம் தவணைப் போட்டியூடாக மஹிந்த ராஜபக்‌ஷ சுமக்க நேரிட்டிருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

மஹிந்தவின் எதேச்சதிகார ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் நெஞ்சு பொறுக்காமல் இட்டு, அவரைத் துரத்தி வந்த சாபங்கள்கூட இம்முறை விதி வலியது என்பதை இத்தேர்தலினூடாக உணர்த்தியிருக்கின்றன.

வடக்கு தமிழர் மீதான ஓரவஞ்சனையும் அநியாயங்களும், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமும், பொதுபலசேனாக்களுக்கு உயிரூட்டியமையும்…. இத்தனை சீக்கிரம் தம்மைக் காவு கொல்லும் என மஹிந்தவோ, கோத்தாவோ நினைத்திராத நிலையிலேயே…..விரல் நொடிக்கும் பொழுதில் தேர்தல் களம் உட்பட்ட சகலமும் அவர்களுக்கு எதிராக மாறி…. ஞானசாரர்கள் வெட்டிய குழி இம்முறை அவர்களைப் பலியெடுத்திருக்கிறது என்றும் கூடச் சொல்லலாம்.

இத்தேர்தலின் ஊடாக மைத்திரியின் தலைதேடி வந்தமர்ந்திருக்கும் கிரீடம் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் சூட்டியது என்பது நிதர்சனம். அதேநேரம், இலங்கையில் இனவாதம் கலந்த காழ்ப்புணர்ர்ச்சி பெரும்பான்மை பெளத்த - சிங்கள சமூகத்தவரிடையே வேகமாகப் பரவி வருகின்றது என்பதையும் இத்தேர்தல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

மைத்திரி பெற்ற 51.28 வீத வாக்குகளில், 12 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுக்குச் சொந்தக்காரர்கள் தமிழ். முஸ்லிம் சிறுபான்மையினர் என்கிற அதேநேரம், மஹிந்த பெற்ற 47.58 வீத வாக்குகளில் 45 வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மை பெளத்த சிங்களவர்களாலேயே அளிக்கப்பட்டிருக்கின்றன.

செல்லுபடியான வாக்குகளில் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெளத்த சிங்களவர்களது வாக்குகள் மஹிந்தவுக்கே அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், மைத்திரியை விட மஹிந்தவையே பெளத்த சிங்களவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதையும் இத்தேர்தல் உணர்த்தியிருக்கிறது.

யுத்தத்தை முடித்த கெளரவத்துக்காக சரிபாதி பெளத்தர்கள் இம்முறையும் மஹிந்தவுக்கு வாக்களித்திருந்தாலும், ஆளுந்தரப்பு உசுப்பேற்றிய இனவாதமே இம்முறை மஹிந்தவுக்கு ஆதரவாக பெளத்த சிங்கள வாக்குகளை அதிகரிக்கச் செய்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சர்வாதிகார குடும்ப ஆட்சி, ஊழல் மோசடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நிறைவேற்று ஜனாதிபதி ஒழிப்பின் தேவை என ஜாதிக ஹெல உறுமய உட்பட்ட பொது எதிரணியும், மக்கள் விடுதலை முன்னணியும் நாட்டின் நலன் கருதிய யதார்த்தம் தொடர்பில் எத்தனை கூப்பாடு போட்டும், பெரும்பான்மை சிங்கள பெளத்தர்களை அதிகம் ஈர்த்து, அவர்களது மனசுகளை வென்றிருப்பது இம்முறையும் இனவாதம்தான்.

வெற்றி வாய்ப்பை நழுவ விட்டிருந்தாலும், நாட்டின் முழுமொத்த 160 தேர்தல் தொகுதிகளில் 90 தொகுதிகளை இம்முறை மஹிந்த ராஜபக்‌ஷவே கைப்பற்றியிருக்கின்றார். இவை பெரும்பான்மை பெளத்த சிங்களவர்கள் செறிந்து வாழும் தொகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கதே.

இனவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர்தான் இத்தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தாலும், பெரும்பான்மையினரிடத்தில் இனவாதம் மேலும் ஒரு படி மேலே வளர்வதற்கும் இத்தேர்தல் காரணமாகியிருக்கிறது. .

இம்முறை, சிறுபான்மையினரின் வாக்குகள் தொடர்பில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, இனவாதத்தை விதைப்பதன் ஊடாக தனி பெளத்த சிங்கள வாக்குகளில் இருந்தே 51 வீதத்தைப் பெற்று வெல்லலாம் என்றும் ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தார். ஆனால், அக்கணக்கு இம்முறை தப்புக் கணக்காகியிருக்கிறது.

ஆனாலும், பொது எதிரணியில் 49 கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் கூட்டுச் சேர்ந்திருந்த நிலையில், சில இனவாத அமைப்புக்களோடு மட்டும் தனியாளாய் களத்தில் நின்ற மஹிந்த மயிரிழையில்தான் தோற்றிருக்கிறார். ஆக, இனவாத அஸ்திரம் அவருக்கு கைகொடுக்கத்தான் செய்திருக்கிறது.

இந்த இனவாதப் போக்கு தொடர்ந்து வலுப்பெற்று வளருமாயின், இனி வரும் காலங்களில் சிறுபான்மைதான் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி என்ற நிலைமையும் மாற்றம் பெறலாம். (நிறைவு)
நவமணி வாரயிதழ் 2015

மனசுகளில் ஜொலிக்கும் மைத்திரியும்... மதில்களில் ஜொலிக்கும் மஹிந்தவும்


 மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

riskyshareef@gmail.com



“ மணக்க மணக்க -
ஜொலிக்கத்தான் செய்கிறார்கள்….
மனசுகளில் மைத்திரியும்:
மதில் சுவர்களில் மஹிந்தவும். “

- இற்றைக்கு இரு வாரங்களுக்கு முன்பு, எனது முகநூலில் நான் எழுதிய சிறு கவிதை இது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட இரு வார காலத்துக்குப் பிறகும் களநிலவரத்தின் யதார்த்தத் தன்மை, இப்படியொரு மினிக் கவிதையில் அடங்கக்கூடிய அளவில்தான் இருந்தது

இன்றும், இக்கட்டுரையை எழுதும் தறுவாயிலும் அதிக மனசுகளில் மைத்திரியே ஜொலித்துக் கொண்டிருக்க, மஹிந்தவோ மனசுகளை விட்டு மட்டுமன்றி, மதில் சுவர்களில் இருந்தும்கூட காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்.

( தேர்தல் ஆணையாளரின் வற்புறுத்தலுக்கு அமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்அவுட்கள், போஷ்டர்கள் பெருமளவில் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன.)

மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டுவதுபோல, மக்கள் பணத்தை பெருமளவில் வீண் விரயம் செய்து, இம்முறை ஆளுந்தரப்பு மஹிந்தவுக்காக அதிக கட்அவுட்கள் மற்றும் போஷ்டர் விளம்பரங்களை மேற்கொண்டதும் அவர் மக்கள் மனசுகளில் இருந்து நழுவியதற்கானதோர் உதிரிக் காரணம் என்றும் சொல்லலாம்.

200 கோடி ரூபாவையும் மிகைத்ததோர் தொகை இதற்கென செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. (ஜனாதிபதியின் ஒரு கட்அவுட்டுக்கு 05 இலட்சம் ரூபாவில் இருந்து 20 இலட்சம் ரூபாவரை செலவிடப்பட்டுள்ளதாக, பிரபல ஊடகவியலாளர் ரீ.பீ.எஸ். ஜெயராஜ் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.)

மட்டுமன்றி, ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் 69வது பிறந்தநாளான கடந்த நவம்பர் 18ஆம் திகதியன்று, ஊடகங்களில் மஹிந்தவுக்காக அரச திணைக்களங்கள் வெளியிட்ட விளம்பரங்களுக்கான செலவுகள் மட்டும் 26 கோடி ரூபாவை மிகைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பிறந்த நாளையொட்டி கொழும்பில் அவருக்கு 4000 கட் அவுட்கள் வைப்பதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 200 கட்அவுட்களுக்கு மாத்திரமே தாம் அனுமதி வழங்கியதாகவும் கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இவற்றுக்காக, ஶ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் தேசிய லொத்தர் சபை என்பன கணிசமான அளவில் மக்கள் பணத்தைச் செலவளித்திருப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், எவரும் தனக்காக கட்அவுட்கள் வைக்கவோ.போஷ்டர் விளம்பரங்களைச் செய்யவோ வேண்டாம். அதற்கான பணத்தை சிறுநீரக நோயாளர்களுக்கான நிதியத்தில் சேர்த்துவிடுங்கள் என பொது வேட்பாளர் மைத்திரி ஆரம்பத்திலேயே வலியுறுத்தியமை, மஹிந்தவின் விளம்பர மோகத்தில் மயங்கியிருந்த பொதுமக்கள் பலரை மைத்திரியின் பக்கம் கொஞ்சம் பெருமிதத்தோடு திரும்பிப் பார்க்கவும் செய்திருக்கிறது.

மக்களின் பணம் வீண்விரயம் செய்யப்படுகிறது என்கிற உண்மை நெற்றிப் பொட்டில் உறைக்க, இத்தேர்தலில் கணவான் அரசியல் குறித்தும், அதன் தேவைப்பாடு கருதியும் பொதுமக்கள் கொஞ்சம் தெளிவை உணர்ந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சர்வாதிகாரப் போக்கிலான குடும்ப ஆட்சி, ஊழல் மோசடி, அபிவிருத்தித் திட்டங்கள் என்கிற போர்வையில் அதிகாரத் தரப்பினர் கையகப்படுத்திய பல்லாயிரம் கோடிகளை மிகைக்கும் தரகுப் பணமும், விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற, (அரசின் கணக்கில் வராத) பெருந்தொகைப் பணம் உட்பட்ட தங்க ஆபரணங்கள், அதிகாரத் தரப்புக் குடும்பங்களின் டாம்பீகமும், சுகபோகமும் கலந்த உல்லாச வாழ்க்கை, ஜனாதிபதியின் புதல்வர்களின் லம்போகினி கார்கள் மற்றும் கேளிக்கை விநோதங்கள், பொது மக்கள் மீதான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் நெருக்குவாரங்களும், வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவராலயங்கள் உட்பட்ட நிர்வாக சேவை அரசியல் மயமாக்கப்பட்டமை மட்டுமன்றி….

அரசியலமைப்பின் 17-வது சட்டத்திருத்தத்தை மாற்றியதன் மூலம், உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், நீதிச்சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு, கணக்காய்வாளர், நாயகம் போன்ற உயர் பதவிகளுக்கு தாம் விரும்பியவர்களை நியமிக்கும் சர்வாதிகாரத்தை பெற்றிருந்த ஜனாதிபதி அவற்றைத் துஷ்பிரயோகம் செய்தமை,…

நாட்டுக்கு மிகப்பெரிய கேட்டையும் ஆபத்தையும் விளைவிக்கும். இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஊடகங்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், தகவல் பரிமாறும் சுதந்திரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியமை, இனவாதத்துக்கு மேலும் உயிரூட்டியமை..…

இப்படிப் பல பிரதான காரணங்கள் இம்முறை ஜனாதிபதியின் ஆதரவை மழுங்கடித்திருந்தாலும், ஜனாதிபதியின் மேற்படி விளம்பர மோகத்தை பொதுமக்களால் இம்முறை ஜீரணிக்க முடியாமல்தான் போயிருக்கிறது.

இந்நிலையில், சிங்கள சமூகத்திடம் இழந்து வரும் தனது செல்வாக்கைச் சரிசெய்து, தனது பிரசாரக் கூட்டங்களுக்கு மக்களைத் திரட்டுவதற்கென ஜனாதிபதியால் வரவழைக்கப்பட்ட சல்மான்கான் மற்றும் ஜெக்குலின்களின் கவர்ச்சிக்கு முன் மண்டியிடுவதற்கும் பொதுமக்கள் இம்முறை தயாராக இல்லாது இருந்ததிலும் ஆளுந்தரப்பு தோல்வியைக் கண்டிருக்கிறது.

அண்மையில்,பெருத்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் 11 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினருக்கான நிவாரண நிதியாக வெறும் 35 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கிய அரசாங்கம், சல்மான்கானுக்கும் ஜாக்குலினுக்கும் 70 மில்லியன்களுக்கும் மேலாக செலவிட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும்கூட பொதுமக்கள் இம்முறை ஆளுந்தரப்பு மீது அதிருப்தியை உணர வழிசெய்திருக்கிறது.

ஜனநாயகத்துக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பிருக்கப் போகிறது என்பதை நியாயப்படுத்தும், மஹிந்தவுக்கு மட்டுமே பக்கச் சார்பான அரச மற்றும் தேசிய ஊடகங்கள், மீண்டும் மீண்டும் யுத்த வெற்றியைத்தான் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாலும் அவை ( கிராமப்புற பெரும்பான்மை சிங்களவர்களைத் தவிர) நகர்ப்புற மற்றும் படித்த சமூகத்தினரிடையே இம்முறை அதிகம் செல்வாக்குச் செலுத்தவும் தவறியிருக்கிறது.

இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கவின், 'ஐக்கிய தேசிய கட்சி’உட்பட்ட 49 கட்சிகள் மற்றும் சிவில்சேவை அமைப்புக்களின் ஆதரவோடு களத்தில் இறங்கியிருக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இம்முறை நீதியும், சுதந்திரமுமான தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் வெற்றியீட்டும் வாய்ப்புள்ளதாகவே கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே, ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருக்கும் நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியிலிருந்து 27 உறுப்பினர்கள் விலகி எதிர்க் கட்சிக்கு தாவியதும் இதுதான் முதல் சந்தர்ப்பமாகும்..( இக்கட்டுரையை எழுதும் தறுவாயில் இன்னும் ஐவர் எதிரணி தாவும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிய வருகிறது.).

தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஆளும் மற்றும் எதிரணிகளில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை உடைத்து, அக்கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதில் கைதேர்ந்திருந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.

இன்று, கை சேதத்துக்குள்ளாகி, நிர்க்கதி நிலைக்கு அவரை இட்டு வந்திருப்பதும் மேற்படி கட்சிகளின் பிளவும், பிரிவும்தான் என்பதும் இத்தேர்தல் நமக்குக் கற்றுத் தந்திருக்குமோர் சிறந்த பாடமாகும்.

இந்நிலையில், நாளுக்கு நாள் மைத்திரிபால சிறீசேனவின் ஆதரவு வட்டம் விரிந்துகொண்டே சென்று, மஹிந்தவின் கோட்டையும் சரிய ஆரம்பித்து….. தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே இருக்கும் தறுவாயில், வன்முறைகள், அடாவடித்தனங்களுக்கு மத்தியிலும் பிரசாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டி ஓய்ந்திருக்கின்றன.

அப்பாடா….இனி, யார் எவரை வெல்லப் போகிறார் என்பதுதான் இத்தேர்தலில் எஞ்சியிருக்கும் சுவாரசியமான சங்கதி..

முன்னமே சொன்னதுபோல, நீதியான தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் மைத்திரிதான் வெல்வார் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்க, இத்தேர்தலில் மஹிந்த தோற்கும் வாய்ப்பு அதிகம் தென்படுகின்றபோதும், மஹிந்த எப்படியும் (?) வெல்வார் என்று இன்னொரு சாரார் சொல்வதையும் சும்மா கிடப்பில் போட்டுவிட முடியாது.

அந்த “எப்படியும்” என்கிற ஒரே தனிச்சொல்லில் பல ஆழ அர்த்தங்கள் உண்டு என்பதை நமக்கு முன்னைய தேர்தல்கள் வெகுவாகக் கற்றுத் தந்திருக்கின்றன. நிழலான கைங்கரியங்களும், தந்திரங்களும் அச்சொல்லில் மறைந்திருக்கும் வாய்ப்பு இம்முறையும் நிறையவே உண்டு என்பதை வெறுமனே மறுதலித்துவிடவும் முடியாது.

2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை எதிர்த்துக் களமிறங்கிய சரத் பொன்சேக்காவுக்கு, தற்போது மைத்திரிக்கு இருக்கும் வரவேற்பை ஒத்ததோர் மக்கள் ஆதரவு அப்போது இருந்த நிலையிலும், அவரால் வெறுமனே 40.15% வாக்குகளையே (4173,185 வாக்குகள்) பெற முடிந்திருக்கிறது. அத்தேர்தலில் 57.88% வாக்குகளைப் பெற்று (6015, 934 வாக்குகள்) மஹிந்த வெற்றி பெற்றமை என்பதும் அப்போது பலரையும் உறையச் செய்த அதிர்ச்சியான செய்திதான்..

இம்முறையும் அப்படியேதும் நடக்குமா? என்றால்….வாய்ப்புக்கள் குறைவென்றுதான் எதிரணி சொல்கிறது. ஆயினும், அது வாய்ப்புக்கள் இல்லை என்கிற அர்த்தத்தைத் தந்துவிடாத கட்டத்தில் மஹிந்த உட்பட்ட அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுந்தரப்பின் மவுனம் ஒரு பீதியை ஏற்படுத்தவும் செய்திருக்கிறது.

இந்நிலையில், கிராமப்புற சிங்களவர்களின் வாக்குகளைக் கொண்டு கடந்த தேர்தல்களில் வெற்றியீட்டி வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை பாரிய சவால் காத்திருப்பதாக த ஹிந்து தெரிவித்துள்ளது. உண்மைதான்.

ஆயினும், யுத்த வெற்றிக்குப் பிறகு மஹிந்தவை “தெய்வமாக”ப் பார்த்து வரும் கிராமத்தவர்களின் மனநிலை இன்றைக்கும் மாறாமல் பார்த்துக்கொள்ளும் பணிகளை, அரச ஊடகங்கள் பொய்களைப் புனைவதன் மூலம் இத்தேர்தலிலும் செய்துதான் வந்திருக்கின்றன..வருகின்றன.

மட்டுமன்றி, விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திரிகா அம்மையார், “ மிஸ்டர் பிரபாகரன்….” என்று விளித்தமை, ரவூப் ஹக்கீமின் தனி நிர்வாக மாவட்டக் கோரிக்கை, தமிழர் கூட்டமைப்பு நாட்டைத் துண்டாடி விடும், மீளவும் புலிகள் உயிர்த்தெழுவார்கள் என்கிற (தேவையற்ற) அச்சங்கள் கிராமத்தவர்களிடத்தில் அதிகம் விதைக்கப்பட்டு வருவதில், மஹிந்தவின் மதிப்பு அங்கு வெகுவாகக் குறையும் என்றும் எதிர்பார்க்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியே ஆரம்பத்தில் கிராமப்புற மக்கள் மத்தியில் மதிப்பை கொண்டிருந்தது. எனினும் 1977ஆம் ஆண்டு,அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய திறந்தபொருளாதாரக் கொள்கைக்கு பின்னர் கிராமப்புற செல்வாக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைக்கு மாறியது.

இந்நிலையில், 2005ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கிகளாக கிராமப் புறங்களே விளங்கி வருகின்றன.

எனினும், இம்முறை பொது வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்.கட்சியின் ஒருவரான மைத்திரிபால சிறிசேனவே களமிறங்கியுள்ளமையால் குறித்த கிராமப்புற வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

குறிப்பாக பொலநறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களில் உள்ள விவசாய மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இந்த ஜனாதிபதி தேர்தல் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இடம் பெறுவதாக த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

பலஹீனமான வாக்கு வங்கிகளைக் கொண்ட விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் வயது மூப்பில் தொய்ந்துபோன தலைமைகளைக் கொண்ட சில இடதுசாரிக் கட்சிகள் (அவைகளும் இரண்டாகப் பிளவுபட்ட நிலையில்) மற்றும் ஆறுமுகம் தொண்டமானின் இ.தொ.கா. மட்டுமே ஆதரிக்கும் மஹிந்தவை விடவும், ஐ.தே.க, ஶ்ரீல.சு.கவின் சந்திரிகா அணி, ஜாதிக ஹெல உறுமய, ஶ்ரீல.முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் தேசியக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பல சிறு கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கப் பெற்றிருக்கும் மைத்திரியின் வெற்றி இத்தேர்தலில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதுதான்.

மஹிந்தவோ இல்லை மைத்திரியோ மேடைகளில் சொல்லிக் கொள்ளும் அளவில், இத்தேர்தலில் அவர்களில் எவருமே 20 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று வெல்லக்கூடிய சாத்தியங்களும் இல்லை.

ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புக்களின் பிரகாரம், இம்முறை மஹிந்தவை விடவும் மைத்திரி 05 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றியீட்டும் வாய்ப்புள்ளது. அதாவது, மைத்திரி 52% வாக்குகளையும் ( 59 அல்லது 60 இலட்சம் வாக்குகள் ), மஹிந்த 47% வாக்குகளையும் ( 54 அல்லது 55 இலட்சம் வாக்குகள்) அடுத்த டம்மி வேட்பாளர்கள் 01 வீத வாக்குகளையும் பெறுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எதிர்பார்ப்பு, இன்னமும் நம் நாட்டில் ஜனநாயகம் முற்றாக செத்துவிடவில்லை என்கிற அதீத நம்பிக்கையில், நீதியும் சுதந்திரமுமான தேர்தலை அடியொட்டியே விளைந்தது என்பதையும் ஒரு தடவைக்கு இரு தடவைகள் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

மற்றப்படி,வெற்றியைத் தீர்மானிக்கும் இந்த 05 இலட்சம் வாக்குகள் என்பது இலகுவான மோசடிக்கு இலக்காகக் கூடிய எண்ணிக்கை என்பதையும் மிக்க மன வருத்தத்தோடு குறிப்பிடுகிறேன்.

இன்றைய இலங்கை வாழ் சரிபாதி எண்ணிக்கையிலான பெரும்பான்மையினர் மற்றும் ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் விருப்பத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப, இம்முறை ஆட்சி மாறுமா?

ஜனநாயகம் மீது வலுப்பெற்று வரும் சந்தேகத்தில், சகலருமே பெறுபேற்றுக்காகக் காத்திருக்கத்தான் வேண்டியிருக்கிறது. ( நிறைவு )
நவமணி வாரயிதழ்

நலிந்தவர் மீதான சவாரியும்.... மாறும் கள நிலவரங்களும்

2005 ஜனாதிபதித் தேர்தலை வடக்கு தமிழர்கள் புறக்கணித்திருந்த போதும், .தே.. சார்பில் தனி வேட்பாளராகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 4,706,366 (48.33%) வாக்குகளைப் பெற்றிருந்தார். இதே வடக்கு தமிழர்கள் ஆதரித்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா பொது வேட்பாளராகக் களமிறங்கி பெற்றுக்கொண்டது வெறும் 4,173,185 (40.15%) வாக்குகளைத்தான்.

 மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

லிந்தவர் மீது மேற்கொள்ளப்படும் சவாரியாகவே அமையப்போகும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் கள நிலவரங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.

அதிகாரக் கட்டமைப்புக்கள்மீது எவரும் கை வைக்காதவாறும், அவற்றை எவரும் தட்டிக் கேட்காதவாறும் முற்றிலும் நேர்த்தியான திரை மறைவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வியூகங்கள் தந்திரோபாயம் கலந்து பின்னப்படுகின்றன.

கட்டுப்படுத்த முடியாத பொது மக்களின் விரக்தியை மேவி, பாமரர்கள் மீதும் ஏழைகள் மீதுமே இம்முறை விரோதமும் வன்முறையும் கோலோச்சும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நலிந்தவர் மீதும் எளிதில் இலக்காவோர் மீதும் வஞ்சம் தீர்ப்பது இலகுவானது என்பதற்கமைவாக, கிராமப்புற பொதுமக்கள் மற்றும் சிறு கட்சிகளைக் குறுக்கறுத்துத் திசை திருப்பிஇம்முறை தேசியவாதக் குரைப்பும், ஊளையும் கலந்த பல்லவியைப் பாடவும் முனைகிறது ஆளுந்தரப்பும் அதுசார் சிறு கட்சிகளும்.

இதேநேரம்,ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்  ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10வது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக பல கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தேனும், பாலும் தடவி,  நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஒரு வரவு செலவுத் திட்டமாகவும் ஜனாதிபதி இதனைக் காட்ட முனைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் தெரிவித்துள்ளன..

அரச துறைசார் ஊழியர்கள், மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என சகல தரப்பினருக்கும் நிவாரணம் அளிப்பது போன்ற மாயத்தோற்றம் ஒன்றை காட்டவும் இதன் மூலம் மஹிந்த முனைந்துள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்ளும் கபடத்தனத்தைத் தவிர வேறு எதனையும் இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்க முடியாதென்றும் கூட்டமைப்பு பாராளுமன்றில் தெரிவித்துள்ளது.

மேற்படி முன்மொழிவுகளுக்கான பணத்தை மஹிந்த எங்கிருந்து எடுக்கப் போகின்றார் என்பது பற்றி அவரது உரையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், அவரது வரவு செலவு திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்பாகவே தேர்தல் வந்து விடும், எனவே இலகுவாக மக்களை ஏமாற்றிவிட முடியும் என்பதும்தான் மஹிந்தவின்  எண்ணமென்றும் கூட்டமைப்பு பாராளுமன்றில் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுமுள்ளது.

இதேநேரம், இலங்கையரின் வருடாந்த வருமானம் 3000 அமெரிக்க டொலர்கள் என்று வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்த தகவல்களில் உண்மைத்தன்மை இல்லையென்றும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

வரவு செலவுத்திட்ட வாசிப்பின் ஆரம்ப உரையின்போது ஜனாதிபதி இலங்கையரின் தனிநபர் வருமானம் 3000 அமெரிக்க டொலர்கள் என்றும், இன்னும் இரண்டு வருடங்களுக்குள் அதனை 7ஆயிரம் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசின் நோக்கம் என்றும் தெரிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட அறிக்கையில் இலங்கையில் நான்கில் ஒரு பகுதி மக்களின் வருட வருமானம் 730 அமெரிக்க டொலர்களை விடக் குறைவாக இருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இவர்களின் நாளாந்த வருமானம் 260 ரூபா என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் தான் முன்வைத்த அறிக்கை மற்றும் அதன் அறிமுக உரை இரண்டுக்கும் இடையில் ஜனாதிபதி தனக்குத் தானே முரண்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

யதார்த்தம் தவறும் முரண்பாடுகளாயினும், இதுபோன்ற பொருளாதார மாயைகளூடாக, பொதுமக்களிடத்தில் ஏற்படும் ஆளுந்தரப்புக்கு சார்பான மனக்குழப்பம் ஆளுந்தரப்பை மீளவும் அதிகார பீடத்தில் அமர்த்தும் வல்லமை பெறும் என்றே அது நினைத்திருக்கிறது.

நலிந்த மற்றும் எளிதில் இலக்காகும் பாமர ஏழைகள் மற்றும் கிராமப்புற பொதுமக்களை குறிவைக்கும் லாவகமான தந்திரோபாயம் இது.

மட்டுமன்றி, , தனக்குப் போட்டியாக பலமான எதிரணியொன்று உருவாகாமல் பார்த்துக் கொள்வதிலும் கவனமாக இருக்கிறது ஆளுந்தரப்பு. ஆளுமை அரசியல் வழியாக பலமான எதிரணி உருவாகும் வாய்ப்புக்களை சிதைத்து வருவதாகவும் ஆளுந்தரப்பு மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன..

நலிந்த மற்றும் எளிதில் இலக்காகும் சிறு அரசியல் கட்சிகளைக் குறிவைத்து அல்லது அதனூடாக பிரதான எதிரணியை பலஹீனமாக்குவதே லாவகமான இத் தந்திரோபாயமாகும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஜெயிக்க வேண்டுமாயின், எதிரணியில் இருந்து சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுச்சின்னத்தில், பொது வேட்பாளர் ஒருவர்தான் களமிறங்க வேண்டும் என்கிறதோர் நிலைப்பாடே இருந்து வந்தது.

அடுத்த கட்டத்தில் அந்நிலைமை மாறி, பொது வேட்பாளருக்கு பொருத்தமான ஆளுமைமிகு அரசியல்வாதியைத் தெரிவதில் ஏற்பட்ட சிக்கல்களும் பஞ்சமும், பொது வேட்பாளராகவோ அல்லது தனி வேட்பாளராகவோ ரணில் விக்கிரமசிங்கதான் களமிறங்க வேண்டும் என்கிற சூழ்நிலையை தோற்றுவித்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, மாதுளுவாவே சோபித தேரர், முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா, சரத் பொன்சேக்கா எனப் பலரும் ரணிலுக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் ஏதோ பிகு பண்ணினாலும், இறுதிக் கட்டத்திலாவது தமிழர் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும், ஏன் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட .தே.கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு தம்மைத் தயார்படுத்தக்கூடும் எனவும் நம்பப்பட்டது.

பொதுச் சின்னத்தில் களமிறங்கும் பொது வேட்பாளரை விடவும், .தே.கவின் ஊடாக பொது வேட்பாளராகவோ அல்லது தனி வேட்பாளராகவோ ஒருவர் களமிறங்கும் பட்சத்தில் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் செளகரியமும் வாய்ப்பும் இருப்பதென்பதே இதற்கான அடிமூலமாகும்.

சாட்சாத் .தே.கவுக்கென்று ஸ்திரமும், பலமுமானதோர் வாக்கு வங்கி உண்டென்பதை எவரும் மறுக்க முடியாது. .தே.. தொய்ந்துபோன தருணங்களில் கூட வரலாறு இதனை நிரூபித்திருக்கிறது.

2005 ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு தமிழர்கள் புறக்கணித்திருந்த போதும் .தே.. சார்பில் தனி வேட்பாளராகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 4,706,366 (48.33%) வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இதே வடக்கு தமிழர்கள் ஆதரித்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா பொது வேட்பாளராகக் களமிறங்கி பெற்றுக்கொண்டது வெறும் 4,173,185 (40.15%) வாக்குகளைத்தான்.

ஆக, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஈடாக, பொது வேட்பாளர் என்கிற பதம் விவாதத்துக்கு உரிய ஒரு பேசு பொருளாகத் தோன்றவில்லை.

யுத்த வெற்றியைத் தொடர்ந்து கிடைத்த மக்கள் செல்வாக்கை ஆளுந்தரப்பு எப்போதோ இழந்தாயிற்று. தவிர, மஹிந்தவின் குடும்ப ஆதிக்க அரசின்மீது பொதுமக்கள் தற்போது அதிருப்தியுற்றிருக்கும் அதேநேரம், .தே..வின் தற்போதைய புத்துணர்ச்சியும், ஆட்சி மாற்றமொன்றுதான் தேவை என்கிற பொதுமக்களின் ஏகோபித்த விருப்பும் இம்முறை .தே.கவுக்கான வாக்குகளை அதிகரிக்கவே செய்யும்.

கடந்த, மத்திய, மேல், தென், ஊவா மாகாண சபைத் தேர்தல்கள் நலிந்திருந்த .தே.கவின் வளர்ச்சியை ஏறுவரிசைப்படுத்தி, ஆளுந்தரப்பை இறங்குவரிசையில் பின்னடையச் செய்திருப்பதும் .தே.கவை மேலும் பலப்படுத்தி, ஆளுந்தரப்பை பயமுறுத்தியிருக்கிறது.

புலனாய்வுப் பிரிவின் ஆய்வுக்கு அமைய  இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு 44 இலட்சம் முதல் 46 இலட்சம் வாக்குகளே கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் புலனாய்வுப் பிரிவினர் மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதுடன், அந்த அறிக்கைக்கு அமையவே ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரியில் நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரணிலுக்கு எதிராக மீண்டும் மும்முனைப் போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆளும் தரப்பின் தேவைக்கு ஏற்ப பலமான எதிரணியொன்று சிதைந்துபோகும் அபாயக் கட்டத்தையும் எட்டும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரவளிக்க முடியாது என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொது வேட்பாளராக ரணில் நிறுத்தப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை எதிர்பார்க்க முடியாது என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என மாதுளுவாவே சோபித தேரரும் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இரண்டு தரப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேரடியாகவே இந்த விடயத்தை அறிவித்துள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சி வேறு ஓர் வேட்பாளரை நிறுத்தினால் ஆதரவளிக்கத் தயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே, இன்னுமோர் விடயத்தையும் சுட்ட வேண்டும். அதாவது….எதிர்வரும் சில நாட்களுக்குள் ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதாக செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியின்  பிரகாசத்தை மழுங்கடித்து, அதன் வெற்றிவாய்ப்பைத் தடுக்கும் நோக்கிலும், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்கும் சதித்திட்டத்தின் அடிப்படையிலுமே ஜாதிக ஹெல உறுமயவை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாக உள்ள குற்றச்சாட்டையும் இங்கு மறுதலித்துவிட முடியாது.

இத்திட்டத்தின் பிரகாரமே, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான பிரேரணைகளை சாட்டாக வைத்து எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தை விட்டு ஹெல உறுமய வெளியேறவுள்ளது.

அதன் பின்னர் நாட்டின் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான கூட்டணி என்ற பெயரில் மாதுளுவாவே சோபித தேரர், சரத் பொன்சேகா, சரத் என் சில்வா, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் உதிரிக் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கவும் ஹெல உறுமய  வியூகம் வகுத்துள்ளது.

இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு சார்பான வாக்குகளை சிதறடித்து, ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றியை இலகுபடுத்துவது இதன் இறுதி நோக்கமென்று சொல்லப்படுவதையும் புறந்தள்ளிவிட முடியாது.

தேர்தலின் பின்னர் மீ்ண்டும் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளும்போது, ஹெல உறுமய முக்கியஸ்தர்களுக்கு அதிகாரமிக்க அமைச்சுப் பொறுப்புகளும், வேறு வரப்பிரசாதங்களும்கூட வழங்கப்படலாம்.

எத்தனைதான் முரண்டு பிடித்தாலும் ஆளும் தரப்பின் செல்லப் பிள்ளைகளான ஜாதிக ஹெல உறுமயவும், பொதுபல சேனாக்களும் ஏன் விமல் வீரவங்சவும் கூட ஒருபோதும் மஹிந்தவை உதறிச் செல்லத் துணியமாட்டார்கள்.

மஹிந்தவின் காலம்தான் இவர்களுக்கான பொற்காலம் என்பதை இருதரப்பும் அறிந்து வைத்திருக்கும் அளவில் ஒருவரில் ஒருவர் தங்கியேயிருக்கிறார்கள்.

மட்டுமன்றி, இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பொதுபல சேனா, சிங்கள ராவய, ஹெல உறுமய, ராவணா பலய, பிக்சு பெரமுண , தர்ம விஜய பதனம, ஹெல ராவய உள்ளிட்ட சுமார் 53 கடும்போக்கு சிங்கள அமைப்புகள்  மஹிந்தவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் கொழும்பு, பௌத்த மகா சம்மேளன மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மஹிந்தவின் ஆட்சியில் மட்டுமே  சிங்கள பௌத்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்  என்கிற அடிப்படையில்,அவருக்கே எதிர்வரும் தேர்தலிலும் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக நாட்டின் அனைத்து விகாரைகள் வழியாகவும் அவ்வப்பிரதேச பொதுமக்களை அறிவுறுத்தி, மஹிந்தவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் இதில் கலந்து கொண்டிருந்த பிக்குமார்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் ஆட்சி வகித்த தலைவர்கள் பிரபாகரனை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும், அதனை முறியடித்ததற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரை வரலாற்று வீரா்களின் வரிசையில் இணைக்க வேண்டுமெனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை வெற்றி பெறச்செய்து தேசத்தின் எதிர்காலத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே தனது நிலைப்பாடென்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

இம்முறை, பொதுவேட்பாளர் தொடர்பில் அதிக கவனத்தை ஈர்த்திருந்த சோபித தேரர், ஈற்றில் ரணிலுக்கு ஆதரவளிக்க முன் வந்திருந்த கட்டத்திலேயே, ஜாதிக ஹெல உறுமயவும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் ஒருசேர அவரைச் சந்தித்து மீளவும் பொது வேட்பாளர் ஆசையில் எண்ணெய் ஊற்றி அவரது மனப்போக்கை மாற்றியிருக்கிறார்கள்.

ஆக, தனக்கான தளமொன்றைத் தேடி, . தே. கவைப் புறந்தள்ளி புறப்பட்டிருக்கிறார் சோபித தேரர். அவர் ஒரு பகடைக்காய்தான் என்றாலும், இந்தக் காய் நகர்த்தலில் தற்போதைக்கு ஹெல உறுமய வென்றிருக்கிறது.

இன்னொருபுறம், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் மஹிந்தவை ஆதரிக்க முனைப்புக் காட்டுவதில் அதிருப்தியுற்றிருக்கும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சந்திரிகாவோடு கூட்டமைக்கவும், அதனூடாக முன்னாள் பிரதம நீதியரசர் சிறாணி பண்டாரநாயக்கவை மூன்றாவது வேட்பாளராகக் களமிறக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது வேட்பாளரின் வெற்றி சாத்தியமற்றதாயினும், இச்செயற்பாடு ஒரு பலமான எதிரணியின் உருவாக்கத்தைச் சிதைக்கும் அபாயம் உண்டு.

எப்படியோ, .தே.கவில் ரணில் களமிறங்காத பட்சத்தில், வெளியேயிருந்து அவரைப் புறக்கணிக்கும் பலர் அதே கட்சியின் புதிய ஜனாதிபதி வேட்பாளரோடு கைகோர்க்கக் கூடும். இது ஜனாதிபதி தேர்தல் களத்தில் மேலும் மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

அப்படி, .தே.கவின் புதிய வேட்பாளர் சஜித் பிரேமதாசவாகத்தான் இருக்குமென்றிருந்தால் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இம்முறை சூடு பறக்கும் அடையாளமும் தெரிகிறது.

ரணிலா? சஜித்தா? களமிறங்கப் போவது யாரென்று அடுத்த வாரம் பார்ப்போம்.(நிறைவு)

நவமணி வாரயிதழ்

 

 

 

 

 

.