Saturday, September 4, 2021

மனசுகளை சலவை செய்வோம்




உயிர் தின்னும்
கொரோனா...

பயிர் தின்னும்
வெட்டுக்கிளி...


உலகம் மீண்டெழும்
நம்பிக்கையை
சிதைத்து ருசித்துத்
தின்னும் 'சந்தேகம்'...


சுருக்கிச் சொன்னால்,

சாம்ராஜ்யங்கள்
சோபையிழந்து...

சுவாரசியங்கள்
கசந்து

உலகம் சிறுத்துச்
சுருங்கிக் கொண்டிருக்கிறது.

விஞ்ஞானத்தைத் தின்று
வென்று மிளிர்கிறது
விதி.

பாவங்களை
உதறத் துணியாத
மனோபாவம்தான்
நம்மை சறுக்கித்
தள்ளிவிட்டிருக்கிறதோ...

அகால மரணங்கள்... அஞ்சலிகள்...
அழுகை முழக்கங்கள்...

கண் கெட்டாயிற்று,
சூரிய நமஸ்காரங்கள் இன்னமும் எதற்கு?

எவருக்கும்
எக்கணமும்
எதுவும் நிகழலாம்...

மாரடைத்து வரும்
மரணமும் கூட.

கொரோனா
முத்திரையிடப்பட்ட அஞ்சல்கள்
வந்தடையும் வாசற்படி
எனதாகவும்,

வெட்டுக்கிளிகள்
படையெடுத்துத்
தரிக்கும் தோட்டம்
உனதாகவும்கூட இருக்கலாம்.

ஆக,

பணம் தின்னி,
பிணம் தின்னி,
கழுகுகளாக இருந்தது போதும்..

ஈகோ களைந்து..
இப்போதாவது

மனசுகளைச்
சலவை செய்து,

ஆத்மார்த்தமாய்
உறவுகளை நெருங்கி நேசிப்போம்.

மனிதனுக்கு
சக மனிதனின் அரவணைப்பை விடவும்
சிறந்த 'ஆறுதல்' ஏது?

அன்பின் சுகம்
அலாதியானது!

#ரிஸ்கிஷெரீப்

No comments:

Post a Comment