இன்னமும் சிறிது தேன் எஞ்சியுள்ளது
ஈக்களைத் துரத்து
தேனைப் பாதுகாத்திடு.
இன்னமும் கூட
உனது வீட்டுக்கோர் கதவுண்டு
இன்னமும் கூட
உனது வீட்டிலோர் பாய் உண்டு.
கதவை மூடு
குளிர் காற்றிலிருந்தும்
உன் குழந்தைகளைக் காப்பாற்று.
(பலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் /நன்றி;சமூக நோக்கு)

இன்றைய இலங்கையின் மிலேச்சத்தனமான,அடக்கு ஒடுக்கு முறைகள் மலிந்த ஒரு குடும்ப ஆதிக்க அரசியலில் அல்லலுற்று பல்வேறு துன்பங்களுக்கும் முகம் கொடுத்து வரும் பொதுமக்கள்...தமக்கான வாழ்வாதாரங்களாகக் கொஞ்சம் தேனும்...ஒரு கதவும்,பாயும் எஞ்சியிருப்பதென்பதை இன்னும் உணராமல்தான்...வெறுமனே கையாலாகாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..
நமது இந்த அசமந்தப் போக்கு தொடருமேயானால்...நமது கதவுகளைப் பெயர்த்து வந்து,நமக்கும் நமது குழந்தைகளுக்குமான தேனையும் பாயையும் கூட கயவர்கள் எடுத்துச் சென்றுவிடக் கூடும்.
போகிற போக்கைப் பார்த்தால் அதற்கான காலம் வெகு தூரத்தேயில்லை என்றே தோன்றுகிறது.
புலிகளைத் தோற்கடித்த மமதையில் அரசு ஆடும் வெறியாட்டம் இப்போதைக்கு அடங்குவதாகவும். இல்லை.
வேலியே பயிரை மேயும் நிலைப்பாட்டில்...பகிரங்க அரச மற்றும் இராணுவ அரசியல்வாதியின் ஆதரவில் இயங்கும் பொதுபலசேனா,சிங்கள ராவய போன்ற கடும்போக்கு,இனவாத இயக்கங்களின் வாள்முனைகளும் நாளுக்கு நாள் கூர் தீட்டப்பட்டே வருகின்றன.
இவர்களின் அட்டுழியங்கள் அதிகரித்து வரும் நிலையில்,
நாட்டில் பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்து,மக்கள் கிளர்ந்தெழும் தறுவாயில் குறிப்பிட்ட பிரச்சினையைத் தணிப்பதற்காக மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசாங்கமும் ஏதோ கடமைக்கென அவ்வப்போது தற்காலிகத் தீர்வுகளை முன் வைத்தாலும்...நிரந்தரத் தீர்வு காண்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டியே வருகிறது.
நிஜ யுத்ததை விடவும் சிறுபான்மையினருக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் மேற்படி நிழல் யுத்தங்கள் படு பயங்கரமானவை என்று ஆய்வாளர்கள் கூறுவதிலும் எக்கச்சக்க நியாயம் இருக்கிறது.
ஆயினும்,இந்த நியாய அநியாயங்களின் தீவிரத்தையோ...சிறுபான்மையை இலக்கு வைத்து அடிக்கடி மாற்றங்களுக்குள்ளாகும் அரசாங்கத்தின் குள்ளநரித் தந்திரோபாயங்களையோ உணறும் மனோநிலையில் நம்மில் பலபேர் இல்லையென்பதுதான் துர்பாக்கியம்.
தமது குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டிருக்கும் இலங்கையின் அதியுச்ச ஆட்சி பீடத்தை, தமது குடும்பத்தவர்கள் எவரிடமுமன்றி... வெளியாரிடம் விட்டுக் கொடுக்காமல்,எப்போதும் தாம் நினைத்த போக்கில்...நினைத்ததை அனுபவித்து அரசோச்ச வேண்டும் என்று நினைக்கின்ற தற்போதைய ஆட்சியாளர்கள்,
புலிகளைத் தோற்கடித்துப் பெரும்பான்மைச் சிங்களவர்களிடத்தில் பெற்ற செல்வாக்கை தற்போது பல்வேறு காரணங்களால் படிப்படியாக இழந்து வரும் நிலையிலேயே...அதை மீண்டும் ஈட்டிக் கொள்வதற்காக...அவர்கள் மிகவும் விரும்புவார்கள் என்கிற கணிப்பில் சிறுபான்மையினருக்கு எதிரான இந்த நிழல் யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்..
மட்டுமன்றி,பெரும்பான்மைச் சிங்களவர்களது மொத்த வாக்குகளையும்,அவர்களது ஆசிர்வாதத்தையும் பெறுவதன் மூலம் மட்டுமே... சம்பந்தன்,ஹக்கீம்,அதாவுல்லா, மற்றும் தொண்டமான்களினது தயவின்றி இலங்கையில் தம்மால் ஒரு பலமான பெளத்த ஆட்சியை...மாற்று மத சிறுபான்மையினரை அரசியல் ரீதியாக உள்வாங்க வேண்டிய கட்டாயமின்றி நிறுவ முடியுமென்பதும் இவர்களது நம்பிக்கை.
அரசாங்கத்தின் இந்தத் தந்திரோபாயத்திற்கமைவான காய் நகர்த்தலின் ஒரு அம்சம்தான்...தமக்கு எவரும் எப்போதும் போட்டியாகவே இருக்கக் கூடாது என்பதற்கமைய பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ்,மக்கள் விடுதலை முன்னணி போன்ற அரசியல் கட்சிகளை உடைத்து வலுவற்றதாக்கிய செயல்.
எக்கட்சி எப்படி வேண்டுமானாலும் உடைந்து விட்டுப் போகட்டும்... பரவாயில்லை.ஆனால்,நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.உடைந்து சிதிலமாகிச் சிதறுவதைத்தான் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை.
அரசாங்கத்தின் கபடத்தனம் மட்டுமன்றி...கட்சிகள் பிளவுபடுவதற்கும்,குறித்த கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு அல்லது விலைபோவதற்கும் உட்கட்சிப் பூசல்கள்,பணம்...பதவியாசை சார் சுயநலம், முறைகேடாகச் சேர்த்த சொத்துக்களை இழக்க வேண்டிவரும் என்கிற பயமும் அச்சுறுத்தலும் என சுட்டக்கூடிய அளவில் பல காரணங்கள் இருந்தாலும்...
ஐ.தே.கவின் இன்றைய வலுவற்ற தன்மைக்கும்,தொடர் தோல்விகளுக்கும் மேற்படி உதிரிக் காரணங்களோடு முதன்மைப்படுவது,தலைவர் ரணிலின் இருப்புக்கான ஆசையும் பலவீனங்களும்தான்.
எப்படியோ,நிகழ்கால அரசில் நம்பிக்கையிழந்து,அதிருப்தியுற்றிருக்கும் பொதுமக்கள்,ஆட்சி மாற்றமொன்றை எதிர்பார்த்திருக்கும் இன்றைய நிலையில்...அந்த இலக்கை நாட்டின் பிரதான எதிர்க்கட்சியிடமிருந்து அடைந்து கொள்ள முடியாமல் பரிதவித்துப் போயிருப்பதுதான் மிக்க கவலைக்குரிய விடயம்.
இன்று சகலரும் மாற்றமொன்றுக்கான அவசர அவசியத்தை உணர்ந்திருக்கின்ற போதும்..அதற்கான பயணத்தை எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்பதில்தான் தெளிவின்றிக் குழம்பியிருக்கிறார்கள்.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியையே நம்பிக் களமிறங்க முடியாத இந்த சூனியச் சூழ்நிலையில்,
இனங்களைத் தனித்தனியாகப் பிரதிநிதித்துவப்படுத்திக் குளிர் காய்ந்து கொண்டிருக்கும்,கொள்கையளவிலும் அடிக்கடி நிறம் மாறும் போக்கைக் கொண்ட சிறு சிறு கட்சிகளையும் எதற்குமே நம்பியிருக்க முடியாத துர்ப்பாக்கியம் வேறு.
ஐ.தே.கவும் அடுத்த சிறு சிறு கட்சிகளும் கூட்டமைப்பதன் மூலம்,வலுவான மாற்றணியொன்றை உருவாக்கி ஆட்சி மாற்றமொன்றை உருவாக்க முடியும் என்கிற இன்றைய பாமரச் சிந்தனையும் இப்போதைக்கு சாத்தியப் படுவதாகவும் இல்லை.
1.தன்னலம்மிக்க ரணிலின் தலைமையில் தொய்ந்துபோன ஐ.தே.கவில் கூட்டுச் சேர்வதற்கு சிறு கட்சிகள் தயாரில்லை.
2,அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மேற்படி சிறு கட்சிகளுக்கு, தமக்கான வரப்பிரசாதங்களையும் சுகபோகங்களையும் உதறி வெளியேறுவதற்கும் பயம்.,
இது இப்படியிருக்க,முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை ஆராயும்போது,
முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு பிரச்சினை வெடித்து...இனியும் பொறுக்க முடியாது என்கிறதோர் நிலையில் முஸ்லிம் மக்கள் போராட முனையும் தறுவாயில்,அதுவரைக்கும் மவுனமாக இருந்து வாயைத் திறக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்,முஸ்லிம் மக்களோடு நிற்பது போலக் காட்டிக்கொண்டு...
அரசுடன் சமரசம் செய்து...பின் தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
முஸ்லிம்களைக் காலம் காலமாக ஏமாற்றும் இவர்களின் தந்திரோபாயம் இது.
முஸ்லிம் காங்கிரஸோ சூல்நிலைகளுக்கு ஏற்ப தமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ளப் பழகியிருக்கிறது.
ஒற்றுமை சிதறி...ஒருவருக்கொருவர் நம்பிக்கையின்றி.... எல்லோரிடத்திலும் சுயநலம் முதன்மைப்பட்டு...எப்போதுமே உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் முஸ்லிம் காங்கிரஸ்,
தேர்தல் காலங்களில் மட்டும் அரசிலிருந்து விலகுவதாகவும்...தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுவதாகவும் காட்டிக்கொண்டு,மேடைகளில் அரசுக்கு எதிரான பிரசாரங்களையும் விமர்சனங்களையும் முன்னெடுத்து...வெற்றியீட்டிய கையோடு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் போக்கையே அண்மைக் காலங்களில் முன்னெடுத்து வருகின்றது.
மாமனிதர் மர்ஹூம் அஷ்ரபுக்காக...ஒரு நன்றியுணர்ச்சியில் காலம் காலமாக மு.காவுக்கு வாக்களிக்கப் பழகியிருக்கும் மக்கள் விழித்துக் கொள்ளாத வரையில்... அவர்கள் மீதான மு.காவின் அரசியல் வங்குரோத்துச் சவாரி தொடரவே செய்கிறது.
இதே அஷ்ரப்பின் பெயரால்...அவர் மீதான அனுதாபத்தை முதன்மைப்படுத்தி ஆளாளுக்கு ஒரு கட்சியமைத்திருக்கும் அதாவுல்லாவும் சரி,ரிசாத் பதியுதீனும் சரி...அவர்களுக்காக அல்லாமல் மக்களுக்கு ஏதும் பெரிதாக செய்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது.
மட்டுமன்றி,மலையக தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இ.தொ.காவின் ஆறுமுகன் தொண்டமான் உட்பட்ட அரசாங்கத்தோடு கூட்டு வைத்திருக்கும் அடுத்த சிறு கட்சிகளின் தலைமைகள் கூட, எச்சந்தர்ப்பத்திலும் வாய்மூடி மவுனமாகவே இருக்கப் பழகியிருப்பதிலும் மக்களுக்கு எதுவித நன்மைகளும் நிகழப் போவதில்லை என்பது உறுதியாகிறது.
தவிர,விக்கிரமபாகு,மனோ கணேசன்,ஆசாத் சாலிகளாலும் ஒரு கட்டத்துக்கு மேல் எகிறவோ,குதிக்கவோ முடியாத நிலையில்,த.வி.கூட்டணியும் தற்போதைக்கு வடக்கையும் கிழக்கையும் தன் இனத்தையும் மையப்படுத்தியே தம் அரசியலைச் செய்ய முனைகிறது.தேசிய அரசியல் பற்றி அக்கட்சி யோசிக்கக் கொஞ்சம் காலம் செல்லலாம்.
ஆக,ஐ.தே.கவோ இல்லை அரசோடு இணைந்திருக்கும் அடுத்த சிறு சிறு கட்சிகளோ இன்று மக்களுக்கு ஏற்ற கட்சிகளாக இல்லாமல், தமக்கான தகுதிகளையும் தொலைத்துக் கொண்டிருப்பதுதான் மிகப் பெரிய துர்ப்பாக்கியம்.
யாரிடம் சொல்லியழ என்கிற இயலாமையில்,
பொதுமக்களும் தம் விதியை நோவதைத் தவிர வேறு வழியின்றித்தான் தவித்துக் கொண்டிருக்கும் உச்ச கட்ட வெறுப்பில்,
அடுத்த தேர்தல்களில் அனேகரின் தெரிவு...
எச்சூழ்நிலையிலும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து...அநியாயங்களச் சளைக்காது தட்டிக் கேட்டுக் கொண்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னனியாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
"ஆள் கொல்லி ஜே.வி.பியா?" என்று ஆரம்பத்தில் அக்கட்சி மீதிருந்த பாமர மக்களின் பயமும் பீதியும் அகன்று, இப்போதெல்லாம் ஒரே ஆபத்பாந்தக் கட்சியாக முஸ்லிம்களும் மக்கள் விடுதலை முன்னணியையே எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அக்கட்சியின் இடதுசாரி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் சாதக பாதகங்கள் பற்றியெல்லாம் யோசிப்பதற்கு யாரும் தயாரில்லை. தேவையும் இல்லை.
எப்படியோ...இலங்கையில் அரசியல் மாற்றமொன்றின் அவசிய தேவையை உணரும் பலரும்,அரசோடு மல்லுக்கட்டக் கூடிய...எதற்கும் அஞ்சாததோர் பலசாலியையே இன்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் தனிப்பெரும் பலத்தில் அக்கட்சிக்கு ஆட்சியமைக்க முடியாது போனாலும்,போகிற போக்கில் மக்கள் விடுதலை முன்னணிக்கான மக்கள் செல்வாக்கும் வாக்குகளும் அதிகரிக்கவே செய்யும்.
- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்.

No comments:
Post a Comment