Sunday, December 15, 2013

நனைந்துபோன தீக்குச்சிகளாக... முஸ்லிம் தலைமைகள்




காகித வடிவத்தில் காட்சியளிக்கின்ற ஆயுதங்கள் தாம் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கின்றன நமது முஸ்லிம் தலைமைகள்.

முஸ்லிம்களுக்கெதிரான இன ஒடுக்குதல்கள் மலிந்து...எல்லோரும் கதிகலங்கிப் போயிருந்த நிலையில்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ..நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை, அனேக சிறுபான்மையினரும் ஏதோ ஒரு ஆபத்பாந்தவராகத்தான் எதிர்பார்த்திருந்தனர்.

இங்கு காலடியெடுத்து வைத்தவுடனேயே அம்மையார்,நீதியமைச்சர் என்கிற முறையில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீமைத்தான் முதன் முதலாக சந்திக்கவும் செய்திருந்தார்.

நீதியமைச்சில் நடைபெற்ற மேற்படி இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தையில்,அமைச்சர் ஹக்கீம் தன்னால் இயன்றளவு பிரயத்தனப்பட்டு அரசாங்கத்தைக் காப்பாற்ற முனைந்திருந்ததை,

பேச்சுவார்த்தைக்குப் பிறகான ஊடகவியலாளர் மாநாட்டில் "அந்த சட்ட மூலத்தின் அவசியத்தை உணர்த்தினேன்...இதற்காக அரசாங்கம் இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வரவிருக்கிறது..." என்று பிதற்றியதிலேயே உணர்ந்துகொள்ள முடிந்தது.

அரசாங்கத்தின் விசுவாசம்மிக்க நீதியமைச்சர் என்கிற அடிப்படையில் அது, அவரைப் பொறுத்துச் சரியாக இருந்தாலும்...

நாட்டின் தமிழ்,முஸ்லிம்,சிங்களவர் என்கிற அனைவருக்கும் பொதுவான அல்லது முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்பில் இன்றுவரை தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் சார் மனித உரிமை மீறல்களின் உண்மைத் தன்மையையும்,

சிறுபான்மை மீதான அரசாங்கத்தின் ஓரவஞ்சனை மற்றும் மாற்றாந்தாய் மனப்போக்குகள் குறித்தெல்லாம்...மனச்சாட்சிமிக்க நீதியமைச்சராக அவரால் ஏன் ஆணையரிடம் எடுத்துச் சொல்ல முடியாமல் போனது என்கிற கேள்வியும் தொண்டைக்குழி மீன் முள்ளாக உறுத்தவே செய்கிறது.

இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு பிரதான கட்சியின் தலைவர் என்கிற அடிப்படையில் கடமைப்பட்டவராக, முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய பிரச்சினகளையாவது அவரோ அடுத்த முஸ்லிம் தலைமகளோ ஆணையரிடம் எடுத்து விளக்கியதாகவுமில்லை என்றே அறியக் கிடைக்கிறது.

யாரோ எவரோ...ஒரு குழுவோ முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து நவீப்பிள்ளையிடம் ஏதோவோர் அறிக்கை சமர்ப்பிக்கப் போவதாகவும் ஒரு செய்தியிருந்தது. என்னவாயிற்று எனத் தெரியவில்லை.

எப்படியோ,முஸ்லிம் தலைமைகள் அரசின் பாதுகாவலர்களாகத்தான் தம்மைக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

" முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் தொடர்பில் விளக்குவதற்கு எவருமே முன்வரவில்லை" என்று நவநீதம்பிள்ளையே கோடிட்டுக் காட்டும் அளவில் முஸ்லிம் தலைமகள் மவுனமாகத்தான் இருந்திருக்கின்றன என்பதை மட்டும் அறிய முடிகின்றது..

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்..சுமந்திரனுடனான இன்றைய சந்திப்பின்போதே அம்மையார் இதை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றார். 

தீக்குச்சி தீண்டாமல்...உரசாமல் தீப்பொறி பறப்பதில்லை.
நமக்கான தீக்குச்சிகளோ அச்சத்தில் நனைந்து உறைந்து கிடக்கின்றன.

கண்கெட்ட பிறகான சூரிய நமஸ்காரமாய்...

மஹிந்தவை ஆயுள்கால ஜனாதிபதியாக்கும் பாவத்துக்கு உடந்தையாகி விட்டதாக,18வது திருத்தம் குறித்து இப்போதெல்லாம் தேர்தல் மேடைகளில் அழ ஆரம்பித்துள்ள ஹக்கீம்,

இனியொரு காலத்திலும் நினைத்தழக்கூடும்...நவநீதம்பிள்ளையுடன் கிடைத்த சந்தர்ப்பத்தையும் கை நழுவ விட்ட குறுகுறுப்பில்.


உச்சத்தை அடைந்துவிட வேண்டும் என்கிற சுயநல வெறி...





ன்று... நம்மில் பலருக்கும் ,
அவசர அவசரமாக அடுத்தவரைத் தள்ளிவிட்டாவது...
உச்சத்தை அடைந்து விட வேண்டுமென்பதுதான் இலக்கு.

நானா நீயா என்கிற இந்தப் போட்டிமிகு உலகில்,
ஒரு சிலர் மட்டுமே ஏணிக்களை அழகாகவும்,முறையாகவும் வானத்தை நோக்கிப் போடுகிறார்கள்.

பலபேர் வீட்டில் ஏணிக்கள் படுத்த படுக்கையாகவே இருக்கின்றன.

இன்னும் சிலருக்கு...ஏணிக்களை தேடுவதற்குக் கூட நேரமில்லை மட்டுமன்றி புத்தியுமில்லை.

சக மனிதன் தோள் மீது ஏறியாவது உச்சத்தையும் தனக்கான இலக்கையும் அடைந்துவிட வேண்டும் என்கிற அவசரம்...வெறி.

ஏணிகளை விடவும் மலிவான விலையில் மனிதன் இலகுவாகக் கிடைக்கிறான் என்பதற்காக மட்டுமன்றி,

இவர்களது உடம்பு முழுக்க வழிந்தோடும் தெனாவெட்டும் கர்வமுமே...இவர்களை சக மனிதன் தோள் வழியேறச் செய்கிறது.

இப்படியானவர்கள் உச்சத்தில் போய் தள்ளாடுகிறார்கள்... உறுதியாகவோ நிலையாகவோ நிற்க முடியாமல்.

தவிர,இறங்க முயலும்போதும் சடாரென சடசடவெனச் சரிந்துவிடும் அபாயமும் இவர்களுக்கு உண்டு.

முறையாக ஏணி வழியேறியவர்கள், உச்சத்தில் நிதானமாக நின்று...தடுமாறாமல் காரியமாற்றி...அச்சமின்றி அமைதியாக,ஜெயித்த சந்தோசத்தில்... திருப்தியோடு இறங்குகிறார்கள்.

சக மனிதன் கழுத்து வழியே ஏறப் பழகியிருக்கும்.
இல்லை...ஏறிய பின் ஏணியை உதைத்து விடும் போக்கைத்தான், இன்று நம்நாட்டின் பல துறைகளிலும் காண முடிகின்றது.

உச்சத்தை அடைந்துவிட வேண்டும் என்கிற சுயநல வெறியில்... தொலைந்து கொண்டிருக்கிறது பாவப்பட்ட மனிதம்.

நடு நெற்றிப் பொட்டாக...செருப்புக்கான தட்டுக்கள்

னசு மணக்க மணக்க வாழ்ந்த மண் வீடுகளையெல்லாம்  இப்போது அதிகம் காணவே முடிவதில்லை.

ஏழ்மையும் அறியாமையும் சிறு சிறு மாற்றங்களுடன் அப்படியேதான் இருந்தாலும்,

இப்போதெல்லாம்..எங்கேயும் எல்லோரும் பளிங்கு மணி மண்டபங்களாகத்தான் தமக்கான வீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகாயத் தொட்டில்களாக...அகங்காரம்மிக்க, அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள்...
காற்றை மறிக்கும் இராட்சத மதில்கள்...

மனித வாழ்க்கை இயந்திரத்தனமாகத்தான் சுழன்று கொண்டிருக்கிறது.

நிதானமும் கவனமும் சிதறும் சொற்ப விநாடிகளில்,வழுக்கிவிடச் செய்யும் மொசைக் தரைகள் என....நாகரிக மோகம் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்த நிலையில், இன்றைய வீடுகள் பளிச்சென்றுதான் இருக்கின்றன.

வரவேற்பறையில்... அழகான,தடித்த கண்ணாடி மீன் தொட்டிகள்...

வாசற்படியோரம்,செருப்புகளைக் கழற்றிப் பத்திரப்படுத்துவதற்கென்றே, வேலைப்பாடுகள் மிகுந்த சிறு தட்டுக்களைக் கொண்ட அலமாரிகள்...

சகலதையும் வெகு சிரத்தையோடு...தூசு தட்டித்தான் பராமரிக்கிறார்கள்.

அதேநேரம்,பரிதாபத்துக்குரிய தாத்தா,பாட்டிகள் வாழும் இவ்வாறான வீடுகளில் கூட,

எப்போதும்,ஏதோவோர் மூலையில் உதைபட்டுக் கொண்டிருப்பது...   சாய்வு நாற்காலிகள் மட்டும்தான்.

"பெரிசு"களுக்கான இந்த அரியாசனங்கள்,இங்கே அதிகம் அறுந்து,தொய்ந்து தூசுபடிந்திருப்பதைக் காணத்தான் மனசு வலிக்கிறது.

நடு நெற்றிப் பொட்டாக...செருப்புக்கான தட்டுக்களையே தலை வாசலில் வைக்கத் துணியும் இன்றைய மனிதன்,மேற்படி சாய்வு நாற்காலிகளை நடு வீட்டில் வைப்பதையே கெளரவக் குறைச்சலாகத்தான் கருதுகிறான்.

மட்டுமன்றி,இதுபோன்ற வீடுகளை நிர்வாகம் செய்யும் பெண்கள் கூட, முதியோர் நலன் பேணும் விவகாரங்களில் அதிகம்,மனிதாபிமானமற்ற மலடிகளாகத்தான் இருக்கிறார்கள்.

அவர்கள் திமிர் துறந்து துணிந்தால்...சாய்வு நாற்காலிகளை...பூஜையறைக்கு ஒப்பான ஓரிடத்தில் விரித்து வைக்கவும் முடியும்.

ஆனால்,சகலரும் ஏதோவொரு மயக்கத்தில் இருக்கிறார்கள்.

ஒன்று மட்டும் புரிகிறது,

கிராமத்துக் குடிசையின்... மண் மொழுகிய வெளித் திண்ணையில் உட்கார்ந்து, வெற்றிலை குதப்பும்  பெருசுகளின் ஆத்ம திருப்தியையும்,சந்தோசத்தையும் அவதானிக்கும்போது,

 இதுபோன்ற வசதியான வீட்டுப் "பெரிசு"கள்,
.
 பாவப்பட்டவர்கள்தான்!

ஜனநாயக விரோதியும் பலஹீனமான எதிர்க்கட்சியும்....



 

 


வெறுத்துப் போயிருக்கும் முஸ்லிம்கள்

ருகாலம்... அசைக்க முடியாக் கோட்டையாகத் தலைநிமிர்ந்து.... கம்பீரமாக இருந்த...நம் நாட்டின் வரப்பிரசாதமான - மும்மதத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகம் நேசித்த அரசியல் கட்சி ஐ.தே.க.

ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம் அடைந்த கையோடு இலங்கையில் முதல் அரசை நிறுவிய பெருமைக்குரிய அதேநேரம், பெருமைக்குரிய ஜாம்பவான்கள் உள்வாங்கப்பட்டிருந்த இலங்கை தேசிய காங்கிரஸ்,சிங்கள மஹாசபா,முஸ்லிம் லீக் ஆகியவற்றின் கூட்டாக உருவெடுத்த கட்சி.

1947-1956,1965-1970,1977-1994 என்று சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் 33 வருட காலம் தனித்து ஆட்சியமைத்ததோடு மட்டுமல்லாமல்,ஒருகாலம் (1977ல்) பாராளுமன்றில் 5/6 பெருன்பான்மையையும் தன்வசப்படுத்தித் தனித்து மிளிர்ந்த கட்சி.இன்று...

 யார் கண் பட்டதோ... சாபமோ...செய்வினையோ.... ரணில் தலைமையில் மீண்டும் எழுந்து நிற்க முடியாத அளவில் தொய்ந்துபோய், பக்கவாத நோயாளியாக முள்ளந்தண்டில் காயப்பட்டுச்  சுருண்டுபோய் ...

ஒரு ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளவும் முடியாத வக்கற்ற அவல நிலைக்கும் ஆட்பட்டு உட்கார்ந்திருக்கிறது.

 
கட்சிக்குள் எவர் சொல்பேச்சும் கேட்காமல்...எவரையும் மதிக்காமல்  ...அதேநேரம், தனது எதிர்க்கட்சிப் பதவிக்கான வரப்பிரசாதங்களையும் சுகபோகங்களையும் தங்கு தடையின்றி அனுபவிக்க...ஆளுந்தரப்பினருடன் திரைமறைவு உறவுகளைப் பேணிவரும் ரணிலுக்கு,

தனது சுய நலன்களுக்கு முன்னால்,நாளுக்கு நாள் நாடு குட்டிச் சுவராவது குறித்து கிஞ்சித்தும் கவலையில்லை என்பது ,இவருக்கு எதிராக இன்று பல தரப்பினரும் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள்.

உண்மைதான்.

அடிமட்டத்துப் பாமரர்கள்கூட அருவெறுப்பான - அசிங்கமான வார்த்தைகளில் விமர்சிக்கும் அளவில்...அண்மைக்காலங்களில் தன்னலம்மிக்கவராகத்தான் அதிகம் தெரிகிறார்...தற்போதைய சூழ்நிலையில் நம்நாட்டு எதிர்க்கட்சித் தலைமைக்கு லாயக்கற்ற இந்த " சுயிங்கம் மாமா".

இந்த ஜென்மத்தில் மஹிந்த ஆட்சியைக் கலைக்கவோ, புதியதோர் ஆட்சியை அமைக்கவோ இவரல் முடியாது என்பது இவர் மட்டுமன்றி இன்றைய சிறுகுழந்தையும் அறிந்ததோர் விடயமாகத்தான் இருக்கும் பட்சத்தில்...கைக்கு எட்டிய பதவியைத் துறந்து,,,அதன் சுகபோகங்களை விட்டு...அரசியலில் தோற்றுப்போனதோர் ஜடமாக சும்மா வீட்டில் போய் உட்காருவதற்கும் மனிதர் தயாரில்லை.

அப்படி,கட்சி மீது காதலும்...தேசத்தின் மீது உண்மையான பற்றும் இருந்திருக்குமேயானால்,கடந்த இரு தசாப்த காலமாகத் தொடர் தோல்விகளைச் சந்தித்து,பொதுமக்களின் ஏளனங்களுக்குள்ளாகிப்போய் தற்போது அடிவாங்கவும் சக்தியற்று...நலிந்து போயிருக்கும் ஐ.தே.கவை, என்ன பாடுபட்டாவது...தகுதியும் மக்கள் செல்வாக்கும் மிகுந்த ஒருத்தரை அல்லது பலரை முன்தள்ளி... செப்பனிடும் பணியை அவர் முன்னெடுத்திருக்க வேண்டும்.அடுத்தவர்களின் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு செவிசாய்த்திருக்க வேண்டும்.

மாறாக,போட்டியாக வந்து விடுவார்கள் என்கிற பயத்திலும், பொறாமையிலும்...மக்கள் செல்வாக்கும் ஆதரவும் மிக்க சஜித் பிரேமதாசாக்களையும்,கரு ஜெயசூரியாக்களையும் ,இம்தியாஸ் பாக்கீர்மாக்கார்களையும்,புத்திக பத்திரணகளையும் வளரவிடாமல் பதவி பறித்துப் புறந்தள்ளிச் சீரழிப்பதும்...

தயாசிறி ஜெயசேக்கர உட்பட்ட அரசியல் ஆளுமைமிக்க ஐ.தே.க.வின் 50க்கும் மேற்பட்ட செயல்திறனாளர்கள் மனம் வெறுத்துக் கட்சி தாவத் தூண்டியதும்....

அண்மைக்காலங்களில், கபீர் ஹாஷிம் போன்ற படித்த,பதவிகளுக்கு விலை போகாத கட்சி விசுவாசிகளோடு மோசமான அளவில் முரண்பட்டிருப்பதும்....


- இப்படி கட்சிக்குள் நிகழ்ந்தேறிய - நிகழ்ந்தேறும் இன்னும் பல உருட்டல் பிரட்டல் சித்து விளையாட்டுக்களுக்கும் பிரதான காரணகர்த்தாவென்று சகல தரப்பினரும் விரல் நீட்டக்கூடிய...நம் நாட்டின் இன்றைய முதல் ஜனநாயக விரோதியாக இருப்பது சாட்சாத் ரணில்தானென்றால் அது மிகையில்லை.

கொடுமையான ஆட்சியாளர்களால் மக்கள் சீரழிவுகளைச் சந்திக்க நேரும்போது... நாட்டைப் பாதுகாத்து...இறைமையை மதிக்கக்கூடிய சிறந்த ஆட்சியொன்றை அவர்கள் எதிர்பார்த்து நிற்பது பிரதான எதிர்க்கட்சியிடமிருந்துதான்.

இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் ஒரு ஆட்சி மாற்றத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.ஆனால்...நம்பவும்...களமிறங்கவும்...கரங்களைப் பலப்படுத்தவும் உயிர்ப்பானதோர் எதிர்க்கட்சிதான் இல்லை. பாவப்பட்ட நம்நாட்டில்.

ஆளும் கட்சியும் வேண்டாம்.
எதிர்க் கட்சியும் வேண்டாம்.
கொள்கைகளற்ற அதேநேரம் வெறும் சந்தணக்குச்சிக்கே விலைபோகக்கூடிய...ஆளுங்கட்சிக்கு குடைபிடிக்கும் சிறுசிறு கட்சிகளும் வேண்டாம்.

பின்னே...எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?
இலங்கை வாழ் முஸ்லிம்களின் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி இதுதான்.

சிறுபான்மை முஸ்லிம்கள் வாக்களிக்காமல் விட்டுவிடுவதும்...இன்று இனவாதம் கக்கி...பெருன்பான்மை சமூகத்தை மூளைச் சலவை செய்துவரும் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பாகும்.

அதேநேரம்,
பலஹீனமான எதிர்க்கட்சிக்கு வாக்களித்தும்...ஆகப்போவது ஒன்றுமில்லை.ரணில் தலைமையில்...

முஸ்லிம்கள் வெறுத்துப் போய்த்தான் இருக்கிறார்கள்.

"என்ன செய்யலாம்?"


முஸ்லிம்கள் வெகுவாக குழம்பியும்தான் போயிருக்கிறார்கள்.

- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்.

யாரிடம் சொல்லியழ...விதியை நோகும் மக்கள்.



உனது பாத்திரத்தில்
இன்னமும் சிறிது தேன் எஞ்சியுள்ளது
ஈக்களைத் துரத்து
தேனைப் பாதுகாத்திடு.

இன்னமும் கூட
உனது வீட்டுக்கோர் கதவுண்டு
இன்னமும் கூட
உனது வீட்டிலோர் பாய் உண்டு.

கதவை மூடு
குளிர் காற்றிலிருந்தும்
உன் குழந்தைகளைக் காப்பாற்று.
(பலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் /நன்றி;சமூக நோக்கு)

 

இன்றைய இலங்கையின் மிலேச்சத்தனமான,அடக்கு ஒடுக்கு முறைகள் மலிந்த ஒரு குடும்ப ஆதிக்க அரசியலில் அல்லலுற்று பல்வேறு துன்பங்களுக்கும் முகம் கொடுத்து வரும் பொதுமக்கள்...தமக்கான வாழ்வாதாரங்களாகக் கொஞ்சம் தேனும்...ஒரு கதவும்,பாயும் எஞ்சியிருப்பதென்பதை இன்னும் உணராமல்தான்...வெறுமனே கையாலாகாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..

நமது இந்த அசமந்தப் போக்கு தொடருமேயானால்...நமது கதவுகளைப் பெயர்த்து வந்து,நமக்கும் நமது குழந்தைகளுக்குமான தேனையும் பாயையும் கூட கயவர்கள் எடுத்துச் சென்றுவிடக் கூடும்.

போகிற போக்கைப் பார்த்தால் அதற்கான காலம் வெகு தூரத்தேயில்லை என்றே தோன்றுகிறது.

புலிகளைத் தோற்கடித்த மமதையில் அரசு ஆடும் வெறியாட்டம் இப்போதைக்கு அடங்குவதாகவும். இல்லை.

வேலியே பயிரை மேயும் நிலைப்பாட்டில்...பகிரங்க அரச மற்றும் இராணுவ அரசியல்வாதியின் ஆதரவில் இயங்கும் பொதுபலசேனா,சிங்கள ராவய போன்ற கடும்போக்கு,இனவாத இயக்கங்களின் வாள்முனைகளும் நாளுக்கு நாள் கூர் தீட்டப்பட்டே வருகின்றன.

இவர்களின் அட்டுழியங்கள் அதிகரித்து வரும் நிலையில்,

நாட்டில் பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்து,மக்கள் கிளர்ந்தெழும் தறுவாயில் குறிப்பிட்ட பிரச்சினையைத் தணிப்பதற்காக மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசாங்கமும் ஏதோ கடமைக்கென அவ்வப்போது தற்காலிகத் தீர்வுகளை முன் வைத்தாலும்...நிரந்தரத் தீர்வு காண்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டியே வருகிறது.

நிஜ யுத்ததை விடவும் சிறுபான்மையினருக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் மேற்படி நிழல் யுத்தங்கள் படு பயங்கரமானவை என்று ஆய்வாளர்கள் கூறுவதிலும் எக்கச்சக்க நியாயம் இருக்கிறது.

ஆயினும்,இந்த நியாய அநியாயங்களின் தீவிரத்தையோ...சிறுபான்மையை இலக்கு வைத்து அடிக்கடி மாற்றங்களுக்குள்ளாகும் அரசாங்கத்தின் குள்ளநரித் தந்திரோபாயங்களையோ உணறும் மனோநிலையில் நம்மில் பலபேர் இல்லையென்பதுதான் துர்பாக்கியம்.

தமது குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டிருக்கும் இலங்கையின் அதியுச்ச ஆட்சி பீடத்தை, தமது குடும்பத்தவர்கள் எவரிடமுமன்றி... வெளியாரிடம் விட்டுக் கொடுக்காமல்,எப்போதும் தாம் நினைத்த போக்கில்...நினைத்ததை அனுபவித்து அரசோச்ச வேண்டும் என்று நினைக்கின்ற தற்போதைய ஆட்சியாளர்கள்,

புலிகளைத் தோற்கடித்துப் பெரும்பான்மைச் சிங்களவர்களிடத்தில் பெற்ற செல்வாக்கை தற்போது பல்வேறு காரணங்களால் படிப்படியாக இழந்து வரும் நிலையிலேயே...அதை மீண்டும் ஈட்டிக் கொள்வதற்காக...அவர்கள் மிகவும் விரும்புவார்கள் என்கிற கணிப்பில் சிறுபான்மையினருக்கு எதிரான இந்த நிழல் யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்..

மட்டுமன்றி,பெரும்பான்மைச் சிங்களவர்களது மொத்த வாக்குகளையும்,அவர்களது ஆசிர்வாதத்தையும் பெறுவதன்  மூலம் மட்டுமே... சம்பந்தன்,ஹக்கீம்,அதாவுல்லா, மற்றும் தொண்டமான்களினது தயவின்றி இலங்கையில் தம்மால் ஒரு பலமான பெளத்த ஆட்சியை...மாற்று மத சிறுபான்மையினரை அரசியல் ரீதியாக உள்வாங்க வேண்டிய கட்டாயமின்றி நிறுவ முடியுமென்பதும் இவர்களது நம்பிக்கை.

அரசாங்கத்தின் இந்தத் தந்திரோபாயத்திற்கமைவான காய் நகர்த்தலின் ஒரு அம்சம்தான்...தமக்கு எவரும் எப்போதும் போட்டியாகவே இருக்கக் கூடாது என்பதற்கமைய பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ்,மக்கள் விடுதலை முன்னணி போன்ற அரசியல் கட்சிகளை உடைத்து வலுவற்றதாக்கிய செயல்.

எக்கட்சி எப்படி வேண்டுமானாலும் உடைந்து விட்டுப் போகட்டும்... பரவாயில்லை.ஆனால்,நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.உடைந்து சிதிலமாகிச் சிதறுவதைத்தான் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை.

அரசாங்கத்தின் கபடத்தனம் மட்டுமன்றி...கட்சிகள் பிளவுபடுவதற்கும்,குறித்த கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு அல்லது விலைபோவதற்கும் உட்கட்சிப் பூசல்கள்,பணம்...பதவியாசை சார் சுயநலம், முறைகேடாகச் சேர்த்த சொத்துக்களை இழக்க வேண்டிவரும் என்கிற பயமும் அச்சுறுத்தலும் என சுட்டக்கூடிய அளவில் பல காரணங்கள் இருந்தாலும்... 

ஐ.தே.கவின் இன்றைய வலுவற்ற தன்மைக்கும்,தொடர் தோல்விகளுக்கும் மேற்படி உதிரிக் காரணங்களோடு முதன்மைப்படுவது,தலைவர் ரணிலின் இருப்புக்கான ஆசையும் பலவீனங்களும்தான்.

எப்படியோ,நிகழ்கால அரசில் நம்பிக்கையிழந்து,அதிருப்தியுற்றிருக்கும் பொதுமக்கள்,ஆட்சி மாற்றமொன்றை எதிர்பார்த்திருக்கும் இன்றைய நிலையில்...அந்த இலக்கை நாட்டின் பிரதான எதிர்க்கட்சியிடமிருந்து அடைந்து கொள்ள முடியாமல் பரிதவித்துப் போயிருப்பதுதான் மிக்க கவலைக்குரிய விடயம்.

இன்று சகலரும் மாற்றமொன்றுக்கான அவசர அவசியத்தை உணர்ந்திருக்கின்ற போதும்..அதற்கான பயணத்தை எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்பதில்தான் தெளிவின்றிக் குழம்பியிருக்கிறார்கள்.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியையே நம்பிக் களமிறங்க முடியாத இந்த சூனியச் சூழ்நிலையில்,

இனங்களைத் தனித்தனியாகப் பிரதிநிதித்துவப்படுத்திக் குளிர் காய்ந்து கொண்டிருக்கும்,கொள்கையளவிலும் அடிக்கடி நிறம் மாறும் போக்கைக் கொண்ட சிறு சிறு கட்சிகளையும் எதற்குமே நம்பியிருக்க முடியாத துர்ப்பாக்கியம் வேறு.

ஐ.தே.கவும் அடுத்த சிறு சிறு கட்சிகளும் கூட்டமைப்பதன் மூலம்,வலுவான மாற்றணியொன்றை உருவாக்கி ஆட்சி மாற்றமொன்றை உருவாக்க முடியும் என்கிற இன்றைய பாமரச் சிந்தனையும் இப்போதைக்கு சாத்தியப் படுவதாகவும் இல்லை.

1.தன்னலம்மிக்க ரணிலின் தலைமையில் தொய்ந்துபோன ஐ.தே.கவில் கூட்டுச் சேர்வதற்கு சிறு கட்சிகள் தயாரில்லை.

2,அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மேற்படி சிறு கட்சிகளுக்கு, தமக்கான வரப்பிரசாதங்களையும் சுகபோகங்களையும் உதறி வெளியேறுவதற்கும் பயம்.,

இது இப்படியிருக்க,முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை ஆராயும்போது,

முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு பிரச்சினை வெடித்து...இனியும் பொறுக்க முடியாது என்கிறதோர் நிலையில் முஸ்லிம் மக்கள் போராட முனையும் தறுவாயில்,அதுவரைக்கும் மவுனமாக இருந்து வாயைத் திறக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்,முஸ்லிம் மக்களோடு நிற்பது போலக் காட்டிக்கொண்டு...
அரசுடன் சமரசம் செய்து...பின் தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

முஸ்லிம்களைக் காலம் காலமாக ஏமாற்றும் இவர்களின் தந்திரோபாயம் இது.

முஸ்லிம் காங்கிரஸோ சூல்நிலைகளுக்கு ஏற்ப தமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ளப் பழகியிருக்கிறது.

ஒற்றுமை சிதறி...ஒருவருக்கொருவர் நம்பிக்கையின்றி.... எல்லோரிடத்திலும் சுயநலம் முதன்மைப்பட்டு...எப்போதுமே உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் முஸ்லிம் காங்கிரஸ்,

தேர்தல் காலங்களில் மட்டும் அரசிலிருந்து விலகுவதாகவும்...தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுவதாகவும் காட்டிக்கொண்டு,மேடைகளில் அரசுக்கு எதிரான பிரசாரங்களையும் விமர்சனங்களையும் முன்னெடுத்து...வெற்றியீட்டிய கையோடு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் போக்கையே அண்மைக் காலங்களில் முன்னெடுத்து வருகின்றது.

மாமனிதர் மர்ஹூம் அஷ்ரபுக்காக...ஒரு நன்றியுணர்ச்சியில் காலம் காலமாக மு.காவுக்கு வாக்களிக்கப் பழகியிருக்கும் மக்கள் விழித்துக் கொள்ளாத வரையில்... அவர்கள்  மீதான மு.காவின் அரசியல் வங்குரோத்துச் சவாரி தொடரவே செய்கிறது.

இதே அஷ்ரப்பின் பெயரால்...அவர் மீதான அனுதாபத்தை முதன்மைப்படுத்தி ஆளாளுக்கு ஒரு கட்சியமைத்திருக்கும் அதாவுல்லாவும் சரி,ரிசாத் பதியுதீனும் சரி...அவர்களுக்காக அல்லாமல் மக்களுக்கு ஏதும் பெரிதாக செய்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது.

மட்டுமன்றி,மலையக தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இ.தொ.காவின் ஆறுமுகன் தொண்டமான் உட்பட்ட அரசாங்கத்தோடு  கூட்டு வைத்திருக்கும் அடுத்த சிறு கட்சிகளின் தலைமைகள் கூட, எச்சந்தர்ப்பத்திலும் வாய்மூடி மவுனமாகவே இருக்கப் பழகியிருப்பதிலும் மக்களுக்கு எதுவித நன்மைகளும் நிகழப் போவதில்லை என்பது உறுதியாகிறது.

தவிர,விக்கிரமபாகு,மனோ கணேசன்,ஆசாத் சாலிகளாலும் ஒரு கட்டத்துக்கு மேல் எகிறவோ,குதிக்கவோ முடியாத நிலையில்,த.வி.கூட்டணியும் தற்போதைக்கு வடக்கையும் கிழக்கையும் தன் இனத்தையும் மையப்படுத்தியே தம் அரசியலைச் செய்ய முனைகிறது.தேசிய அரசியல் பற்றி அக்கட்சி யோசிக்கக் கொஞ்சம் காலம் செல்லலாம்.

ஆக,ஐ.தே.கவோ இல்லை அரசோடு இணைந்திருக்கும் அடுத்த சிறு சிறு கட்சிகளோ இன்று மக்களுக்கு ஏற்ற கட்சிகளாக இல்லாமல், தமக்கான தகுதிகளையும் தொலைத்துக் கொண்டிருப்பதுதான் மிகப் பெரிய துர்ப்பாக்கியம்.

யாரிடம் சொல்லியழ என்கிற இயலாமையில்,
பொதுமக்களும் தம் விதியை நோவதைத் தவிர வேறு வழியின்றித்தான் தவித்துக் கொண்டிருக்கும் உச்ச கட்ட வெறுப்பில்,

அடுத்த தேர்தல்களில் அனேகரின் தெரிவு...

எச்சூழ்நிலையிலும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து...அநியாயங்களச் சளைக்காது தட்டிக் கேட்டுக் கொண்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னனியாக இருந்தாலும்  ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

"ஆள் கொல்லி ஜே.வி.பியா?" என்று ஆரம்பத்தில் அக்கட்சி மீதிருந்த பாமர மக்களின் பயமும் பீதியும் அகன்று, இப்போதெல்லாம் ஒரே ஆபத்பாந்தக் கட்சியாக முஸ்லிம்களும் மக்கள் விடுதலை முன்னணியையே எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அக்கட்சியின் இடதுசாரி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் சாதக பாதகங்கள் பற்றியெல்லாம் யோசிப்பதற்கு யாரும் தயாரில்லை. தேவையும் இல்லை.

எப்படியோ...இலங்கையில் அரசியல் மாற்றமொன்றின் அவசிய தேவையை உணரும் பலரும்,அரசோடு மல்லுக்கட்டக் கூடிய...எதற்கும் அஞ்சாததோர் பலசாலியையே இன்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் தனிப்பெரும் பலத்தில் அக்கட்சிக்கு ஆட்சியமைக்க முடியாது போனாலும்,போகிற போக்கில் மக்கள் விடுதலை முன்னணிக்கான மக்கள் செல்வாக்கும் வாக்குகளும் அதிகரிக்கவே செய்யும்.

- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்.


அடிக்கொருதரமான அதிர்ச்சிகள்...





"எனக்குப் பொண்ணுதான் வேணும்"

"இல்ல...எனக்குப் பையன்தான் வேணும்"

"இல்ல...இல்ல... எனக்கு உன்னைப்போல அழகான பொண்ணுதான் வேணும்..."

" ச்சீப் போங்க...எனக்குப் பையன்தான் வேணும்...அதுவும் ரெட்டைக் குழந்தைங்களா..."

- இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது.

பக்கத்து அறையின் தொலைக்காட்சி சீரியலில்...

நிறைமாதக் கர்ப்பிணி மனைவியும் கணவனும் மிகுந்த காதலோடு ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

அந்த வால்யூம் எகிறாத சின்னச் சத்தத்திலும்,

எனது அறையில் -

தனித்துப் படுத்திருந்த என் தூக்கம் தொலைந்திருந்த நிலையில், மனசு மட்டும் கனத்துப் போவதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

"எனக்குப் பொண்ணுதான் வேணும்"

"இல்ல...எனக்குப் பையன்தான் வேணும்"

- இன்றைய அங்கத்தின் இறுதிக் கட்டமோ...?

ரொம்ப நேரமாகத் தொடர்கிறது அந்த புதுமணத் தம்பதிகளின் செல்லச் சண்டை.

அடுத்த அங்கத்தின் எதிர்பார்ப்பை மிகைப்படுத்தி,

அடுத்த சில விநாடிகளில் "தொடரும்" போட்டு.இன்றைய அங்கத்தை நிறைவு செய்யப் போகிறார்கள் போலும்.

அனேகமாக...அடுத்த அங்கத்தில்,

அந்த நிறைமாதக் கர்ப்பிணியை ஏதோவொரு விபத்துக்குள் தள்ளிவிட்டு...அவள் கருவைச் சிதைத்து...அவளையொரு துர்ப்பாக்கியவாதியாகக் காண்பிக்கவும் கூடும்.

நீண்ட நெடுகாலம் ஓட்டுவதற்குரிய உத்தியில் அனேக சீரியல்கள் இப்படித்தான் அடிக்கொருதரம் அதிர்ச்சிகளைத் தந்து கொண்டிருக்கின்றன.

சீரியல்தான் என்றாலும்...

ஒரு கர்ப்பிணியின் கருவும்,அவள் எதிர்பார்ப்பும் ஒருசேரச் சிதைவதை
(வெறும் கற்பனைதான் என்றாலும்) மனசு ஏற்றுக்கொள்ள மறுக்கத்தான் செய்கிறது.

எப்படியோ...இப்போதைக்குத் தூங்கப் போவதில்லை நான்.