ஏழ்மையும் அறியாமையும் சிறு சிறு மாற்றங்களுடன் அப்படியேதான் இருந்தாலும்,
இப்போதெல்லாம்..எங்கேயும் எல்லோரும் பளிங்கு மணி மண்டபங்களாகத்தான் தமக்கான வீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகாயத் தொட்டில்களாக...அகங்காரம்மிக்க, அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள்...
காற்றை மறிக்கும் இராட்சத மதில்கள்...
மனித வாழ்க்கை இயந்திரத்தனமாகத்தான் சுழன்று கொண்டிருக்கிறது.
நிதானமும் கவனமும் சிதறும் சொற்ப விநாடிகளில்,வழுக்கிவிடச் செய்யும் மொசைக் தரைகள் என....நாகரிக மோகம் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்த நிலையில், இன்றைய வீடுகள் பளிச்சென்றுதான் இருக்கின்றன.
வரவேற்பறையில்... அழகான,தடித்த கண்ணாடி மீன் தொட்டிகள்...
வாசற்படியோரம்,செருப்புகளைக் கழற்றிப் பத்திரப்படுத்துவதற்கென்றே, வேலைப்பாடுகள் மிகுந்த சிறு தட்டுக்களைக் கொண்ட அலமாரிகள்...
சகலதையும் வெகு சிரத்தையோடு...தூசு தட்டித்தான் பராமரிக்கிறார்கள்.
அதேநேரம்,பரிதாபத்துக்குரிய தாத்தா,பாட்டிகள் வாழும் இவ்வாறான வீடுகளில் கூட,
எப்போதும்,ஏதோவோர் மூலையில் உதைபட்டுக் கொண்டிருப்பது... சாய்வு நாற்காலிகள் மட்டும்தான்.
"பெரிசு"களுக்கான இந்த அரியாசனங்கள்,இங்கே அதிகம் அறுந்து,தொய்ந்து தூசுபடிந்திருப்பதைக் காணத்தான் மனசு வலிக்கிறது.
நடு நெற்றிப் பொட்டாக...செருப்புக்கான தட்டுக்களையே தலை வாசலில் வைக்கத் துணியும் இன்றைய மனிதன்,மேற்படி சாய்வு நாற்காலிகளை நடு வீட்டில் வைப்பதையே கெளரவக் குறைச்சலாகத்தான் கருதுகிறான்.
மட்டுமன்றி,இதுபோன்ற வீடுகளை நிர்வாகம் செய்யும் பெண்கள் கூட, முதியோர் நலன் பேணும் விவகாரங்களில் அதிகம்,மனிதாபிமானமற்ற மலடிகளாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் திமிர் துறந்து துணிந்தால்...சாய்வு நாற்காலிகளை...பூஜையறைக்கு ஒப்பான ஓரிடத்தில் விரித்து வைக்கவும் முடியும்.
ஆனால்,சகலரும் ஏதோவொரு மயக்கத்தில் இருக்கிறார்கள்.
ஒன்று மட்டும் புரிகிறது,
கிராமத்துக் குடிசையின்... மண் மொழுகிய வெளித் திண்ணையில் உட்கார்ந்து, வெற்றிலை குதப்பும் பெருசுகளின் ஆத்ம திருப்தியையும்,சந்தோசத்தையும் அவதானிக்கும்போது,
இதுபோன்ற வசதியான வீட்டுப் "பெரிசு"கள்,
.
பாவப்பட்டவர்கள்தான்!

No comments:
Post a Comment