Wednesday, September 15, 2021

தேர்தல்கால நிலாக்களும் கோவேறு கழுதைகளும்.....




முஜீப், சாலிகள் அடக்கி வாசிக்க வேண்டும்

- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

சிறார்கள் கிறுக்கிப் போட்ட சித்திரம் போலத்தான் இருக்கிறது இன்றைய தேர்தல் களம்.

அரசியல் சூடு பிடித்திருக்கிறதுதான்... ஆனால் அனல் பறக்குமளவில் இன்னும் இல்லை.

ஹிஸ்புல்லாஹ், சேகு தாவூத்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்கப் போவதாக வரும் செய்திகள்.... கிச்சுகிச்சு மூட்டுக்கின்றன. படு சீரியஸ்ஸான விஜய் படத்தில் இடைக்கிடையே வந்து போகும் வடிவேல்களைப்போல.

சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்‌ஷ.... இருவருக்கும் இடையில் கடும் போட்டியொன்று நிலவும் அடையாளம் தெரிகிறது.

மக்கள் விடுதலை முன்னணியின் அநுர குமார திசாநாயக்கவும், முன்னாள் இராணுவத் தளபதியும்....தமிழ்ப்பட ஹீரோக்களைப்பொல,காற்றைக் கிழித்து மேலெழுந்து... எகிறிப் பாய்ந்து... டைவ் அடித்து வந்தாலும்... ஒரு கட்டத்திற்கு மேலே ஒன்றும் ஆகப் போவதில்லை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாகை சூடப்போவது யார் என்று எந்த அரசியல் விமர்சகராலும் இப்போதைக்கு எதிர்வு கூற முடியாத நிலைமையும் காணப்படுகிறது.

இனவாதம் கோலோச்சியிருக்கிறது.

மேற்படி, இனவாதம்தான் இத் தேர்தலின் துரும்பாகவும், முதலீடாகவும், பேசுபொருளாகவும் இருந்துவிடவும் கூடும்.

மஹிந்த அன்ட் கோ மற்றும் அவரது குடும்பம் பற்றி மட்டுமன்றி அவர்களது கடந்த ஆட்சிக் காலத்தின் நியாய, அநியாயங்கள் பற்றியெல்லாம் பொதுவாக சகலருக்கும் சகலமும் தெரிந்துதான் இருக்கிறது.

இத்தருணம்... வசீம் தாஜுதீன், பிரகீத் எக்னலிகொடக்களை ஏலம் போடுவதிலும் எதுவும் ஆகிவிடப் போவதில்லை.

அவர்கள், அளுத்கமையை அடித்துத் துவைத்தார்களே என்பவர்களிடம்... அப்போ, திகனைக்குத் தீ வைத்தவர்கள் யார் என்றும் ஒரு சாரார் திருப்பிக் கேட்கத்தான் செய்கிறார்கள்.

நியாயம்தான்.

மஹாத்மாக்களோ இல்லை நெல்சன் மண்டேலாக்களோ இத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊழல்கள் எனும்போது... அது தாமரைக் கோபுரமோ, மத்திய வங்கி பிணைமுறி விவகாரமோ...சஜித், கோத்தா சார்பான இரு தரப்பினரும் வாய் திறக்க முடியாத அளவில் நகை முரண்களாகத்தான் இருக்கின்றன.

எது எப்படியாயினும், சிறுபான்மையினரின் வாகுகளில் கணிசமான அளவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை ஐக்கிய தேசிய முன்னணிக்கு அளிக்கப்படும் சாத்தியமே அதிகம்.

அலசிக் கழுவி, மூளைச்சலவை செய்தாலும்... மொட்டு அணியினரால் சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளை அதிகம் ஈர்த்துக்கொள்ள முடியாது என்பதே உண்மை.

அப்படியான நிலைமையில், முஜிபுர் ரஹுமான்களோ இல்லை அசாத் சாலிகளோ எத்தனைதான் வாய் கிழியக் கத்தினாலும் அல்லது மஹிந்த ஆட்சிக் காலத்தின் கசப்பான கறுப்புப் பக்கங்களைத் திறந்து காட்டினாலும்.... அவை சிறுபான்மையின் ஐ.தே.க. சார்பான வாக்களிப்பு வீதத்தில் பெரிதாக எதுவும் மாற்றங்களை ஏற்படுத்தி விடப்போவதில்லை.

சிறுபான்மையினர் ஏலவே தீர்மானித்துத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக ஐ.தே.க.வின் தானைத் தலைவனாக சஜித் பிரேமதாச களமிறங்க வேண்டும் என்று ஐ.தே.கவின் அடிமட்டத்துத் தொண்டனிடமிருந்த எதிர்பார்ப்பையும் மிகைத்ததோர் விருப்பு இந்த சிறுபான்மை வர்க்கத்திடம்தான் அதிகமிருந்ந்தது.

மொட்டு அணியின் சார்பாக கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு மேற்படி எதிர்பார்ப்பு சிறுபான்மையினரிடத்தில் ஒரு பிரார்த்தனையாகவே மாறியது எனலாம்.

அப்படியிருக்க,சிறுபான்மையினர் ஏலவே தீர்மானித்துத்தான் இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில்,ஒருகாலம் படு கவர்ச்சியாக இருந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அஸாத் சாலிகளின் நாவன்மை மீதான ஈர்ப்பும் சுவாரசியமும் வலுவிழந்திருப்பதை தற்போது அவதானிக்க முடிகிறது.

தவிரவும், இருபக்க அரசியலின் யதார்த்தம் அறிந்திருக்கும் பொதுமக்களுக்கு சதாவும் அறைத்த மாவையே அறைத்தறைத்துக் கேட்டுப் புளித்தாயிற்று.

இங்கே, ஈண்டு கவனிக்கத்தக்க இன்னுமோர் விடயம், ஒரு காலம் இவர்களது முன்னாள் ஆட்சிக்காலத்தின் அரக்கத்தனம் குறித்த வசைபாடல்களை சப்புக் கொட்டி ரசித்த பெரும்பான்மைச் சமூகத்தின் ஒரு சாராரும்...தற்போது,இவர்களை சராசரி சுயநல,அரசியல்வாதிகளாகவே கணிக்கப் பழகியிருக்கிறார்கள். மட்டுமன்றி,இவர்களும் இனவாதம் கக்குவதாகவே எண்ணவும் தலைப்பட்டிருக்கிறார்கள்.

ஞானசாரர்கள், ரத்ன தேரர்களைப் பற்றிய சிறுபான்மையினரின் அபிப்பிராயத்திற்கு ஒத்ததோர் மனப்போக்கே பெரும்பான்மையினரிடத்தில் இன்று மேற்படி முஜிபுர் ரகுமான், அஸாத் சாலிகள் தொடர்பிலும் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலைமை தொடர்ந்தால்...

நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கிணங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பாராத நேர் எதிர் விளைவுகளும் ஏற்படலாம்.

நவீன குடியரசில், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உலகம் தழுவிய ஒரு முறையாக தேர்தல் கடைப்பிடிக்கப்படுகிறது.

தேர்தல்கள் என்பவை 17வது நூற்றாண்டு தொடங்கி நவீன பிரதிநிதித்துவக் குடியாட்சியில் வழக்கமான ஒரு செயல்பாடாகத்தான் இருந்து வந்துள்ளன.

தேர்தல் என்பது, ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை எனும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையாகும்.

இந்த ஒழுங்கு முறைமையின் நற்பண்புகள் நாறிப்போயுள்ள நிலைமையையே இன்று நம் நாட்டில் அதிகம் அவதானிக்க முடிகிறது.

ஜனநாயகம் மறுதலிக்கப்பட்டு இன்று பணநாயகம் வீற்றிருக்கும் விரிப்பில்தான் அதிகம் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

இனவாதம், கூட்டணி,பேரம் என சுயநல அமிலத்தில் அமிழ்ந்து கிடக்கும் தேர்தல் களத்தில்.... கடவுள், அம்மா,அப்பாக்களையும் மிகைத்து அதிகம் இன்று அரசியல் மந்திகளைத்தான் சிலர் கும்பிடவும், வழிபடவும் செய்கிறார்கள் என்பது துயரத்தின் உச்சம்.

திஸ்ஸ அத்தநாயக்காக்கள் மீளவும் ஐ.தே.கவில் இணைந்து கொண்டிருப்பது அருவெறுக்கத்தக்க அரசியலின் இன்னுமோர் துளி விஷம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித், கோத்தா, அநுர....யாரை யார் வெல்லுவாரோ?

எவர் வென்றாலும் அழுத்திச் சொல்லுமளவில் எதுவும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்பதே நிஜம்.

முறையான தேர்தல் அமைப்புக்கள் இல்லாத இடத்தில் அவற்றை அறிமுகப்படுத்துவது அல்லது அவை இருக்கும் இடத்தில் அவற்றின் நியாய முறை அல்லது பயனை மேம்படுத்துவது சிரமமாகும்.

இந்நிலையில், வாக்காளப் பெருமக்கள் யாராயினும் நா காப்பதே சிறந்ததாகப் படுகிறது.

வாக்காளர்களை கோவேறு கழுதைகளாக நினைக்கும் அரசியல்வாதிகளின் மனப்போக்கில் மாற்றங்கள் நிகழாதவரைக்கும்.... நாம் முதுகில் சுமக்க நேரிடுவது இயலாமை, ஏமாற்றம், காழ்ப்புணர்ச்சிகளின் எச்சங்களாகத்தானிருக்கும். (முற்றும்)

NAVAMANI Weekly 07,October 2019  

No comments:

Post a Comment