மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த அந்த உச்சக்கட்ட இரவில்…..எனக்குள் ஏற்பட்ட உந்துதலில், எனது முகநூலில் வெவ்வேறாக இரு மினிக்கவிதைகள் எழுதினேன்.
மைத்திரி தலைதேடி
வந்தமர்ந்திருப்பது….
சிறுபான்மையினச்
சிற்பிகள் செதுக்கிச்
சூட்டிய கிரீடம்!
வெற்றி வாய்ப்பை எட்டியிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்காக அந்த நடுநிசியிரவில் எழுதிய கவிதை இது.
அடுத்தது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரியவுக்காக….
நீ -
வளைந்து
கொடுக்காததில்
மார் புடைக்க...
நிமிர்ந்து நின்றது
தேசத்தின் வெற்றி!
2015 ஜனாதிபதித் தேர்தல் நமக்கு உணர்த்திய முக்கிய இரு விடயங்கள் வெவ்வேறாக இக்கவிதைகளில் சுட்டப்பட்டிருக்கின்றன. தவிர, இனவாதம் உயிர்த்தெழுந்ததோர் நிகழ்வும் மேற்படி தேர்தலில் நடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
நடுநிசியிரவுச் சதி மீண்டு. உயிர் தப்பிய ஜனநாயகம்…. ஜனநாயகத்தின் வெற்றியும், இனவாதத்தின் தோல்வியும்… ஞானசாரர்கள் வெட்டிய குழி… கோத்தாவினால் கெட்ட மஹிந்த… மந்திர தந்திரங்களை விஞ்சிய, மகேசன் தீர்ப்பு…. கழுத்தறுபட்டுச் செத்த குடும்ப ஆதிக்கம்…. பேராசை பெரும் நஷ்டம்…. சந்திரிகா இட்ட சாபமும் சாயம் வெளுத்த மஹிந்தவும்…..மைத்திரி யுகம் ஆரம்பம்…..சர்வாதிகாரத்துக்கான சாவுமணி….
இப்படி, 2015 ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த கையோடு எழுதப்படும் இக்கட்டுரைக்கு, அழகழகாய் அதேநேரம் அர்த்தம் பொதிந்ததாய் மேற்சொன்னபடி எப்படி வேண்டுமானாலும்…..எத்தனை தலைப்புக்களும் இடலாம்.
அத்தனை விசித்திரமாகவும், சரித்திர முக்கியத்துவம் மிகுந்ததாகவும் நடந்து முடிந்திருக்கிறது நடப்பாண்டின் ஜனாதிபதித் தேர்தல்.
“மஹிந்த தேசப்பிரியவின் (தேர்தல் ஆணையாளர்) நெஞ்சுரமும், சிறுபான்மை சூட்டிய கிரீடமும்” என்கிற தலைப்பும் இக்கட்டுரைக்கு சாலப் பொருந்துகிறது..
ஆயினும், “ சிறுபான்மை சூட்டிய கிரீடமும் உயிர்த்தெழுந்த இனவாதமும் “ எனும் தலைப்பிலேயே ஓர் உயிர்ப்பு இருப்பதாக நான் உணர்கின்றேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் வந்தே தீரும்; அது அழகாகவும் இருக்கலாம்…இல்லை, இரத்தக் களரியும் ஏற்படலாம் என்பதற்கு ஒப்ப, இத்தேர்தலில் இரத்தக் களரிக்கான வாய்ப்புக்கள் இருந்து….அவை தவிர்க்கப்பட்டிருக்கின்றன..
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த அன்றைய நடுநிசி இரவிலேயே, தான் தோற்றுப் போனதை மஹிந்த ராஜபக்ஷ உணர்ந்துகொண்டிருக்கிறார்.
அதை ஜீரணிக்க முடியாமலும், அதிகாரத்தை விட்டுப்போக மனமின்றியும் இருந்த அவர், ஒரு அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவதன் ஊடாகவும், பாராளுமன்றைக் கலைப்பதன் ஊடாகவும் தொடர்ந்தும் (பலவந்தமாக) ஆட்சியில் இருக்கவே திட்டமிட்டுமிருந்திருக்கிறார்.
தனக்கு, இந்நாட்டை ஆள்வதற்கு இன்னும் இரு வருடகால பாக்கியம் இருப்பதாகக் கூறி, இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக, சர்வாதிகாரி என்றில்லாமல் தன்னை ஒரு ஜனநாயகவாதியாகக் காட்டிக் கொள்வதற்கும் அவர் முயன்றிருக்கிறார்.
இந்நிலையில், அவரது சதி முயற்சியில் இம்முறை பங்குதாரர்களாக விரும்பாத சட்டமா அதிபர் உட்பட்ட பாதுகாப்புத் தலைமைகளும், கட்சி முக்கியஸ்தர்களும் உடன்பட மறுத்ததிலேயும், ரணில் விக்கிரமசிங்கவின் வலியுறுத்தலிலுமே அவர் அதிகாலையிலேயே அலரி மாளிகையை விட்டு வெளியேறியிருக்கிறார்.
அமெரிக்க உட்பட்ட சில வெளிநாடுகளும் மஹிந்தவை வெளியேற வற்புறுத்தியதாகக் கூறப்படுகின்றது.
முழுதுமான தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னமே, ஒரு கணவான் அரசியல்வாதி போன்று அவர் அலரி மாளிகையை விட்டுச் சென்றமை, உள்வீட்டு ரகசியம் தெரியாத அனேக அப்பாவி மக்களிடத்தில் அவர்பால் ஒருவித அனுதாபத்தை ஏற்படுத்தவும் செய்தது.
பொதுக் கூட்டங்களில், தனது உடை கசங்காத கவனத்தோடு, ஏழைக் குழந்தைகளை வாரியணைத்து முத்தமிடும் மஹிந்தவின் கைதேர்ந்த நாடகத் தனங்களில் அதிகம் ஏமாந்து போயிருக்கும் பாமர சமூகத்தினரை, மஹிந்தவின் இந்த அதிகாலை வெளியேற்றம் நிச்சயம் கண்கலங்கத்தான் செய்திருக்கும்.
மஹிந்த ராஜபக்ஷ அப்படி வெளியேறாது இருந்திருந்தால், நாட்டில் பெருத்த இரத்தக் களரியோடு ஒரு தொடர் போராட்டம் வெடித்திருக்கும் என ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியோ, மஹிந்த – மைத்திரிக்கு இடையிலான வாழ்வா சாவா என்றிருந்த போட்டி அழகாய் நிறைவடைந்திருக்கின்றமை ஆறுதல்தான்.
ஆனால், இந்த ஆறுதல் என்பது….பொதுமக்களிடத்தில் குறிப்பாக தமிழ் முஸ்லிம் சிறுபான்மையிடத்தில் கடந்த இரு மாதங்கள் இரவு பகலாக வியாபித்துப் பரவியிருந்த அச்சம் களைந்தே ஏற்பட்டதொன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றமொன்று தேவை எனக் கருதப்பட்டிருந்த நிலையில், மஹிந்த குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கும், அநியாயங்களுக்கும் முன் அது சாத்தியப்படுமா என்கிற அடிப்படையிலேயே இந்த நியாயமான அச்சம் வளர்ந்து வலுப்பெற்றிருந்தது.
இந்நிலையில், நியாயமான அதேநேரம் சுதந்திரமான தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் மாத்திரமே மைத்திரியின் வெற்றி ஊர்ஜிதமாகும் என்றும், வெறும் ஐந்து இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே மைத்திரி வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாகவும், இந்த சொற்ப எண்ணிக்கை மீது ஆளுந்தரப்பு மோசடி செய்வது இலகுவானதென்றும் ஏற்கனவே கூறப்பட்டுமிருந்தது.
மட்டுமன்றி, இனவாத அஸ்திரத்தையே மஹிந்த தரப்பு கடைசித் துரும்பாகத் தம் கையில் எடுக்கும் என்பதும் ஏலவே அறியப்பட்டதொன்றாகவே இருந்தது.
ஆக, முன்னமே கூறியது போலவே, இனவாதமும் வெல்லத் துடித்துத் தோற்று, முடுக்கிவிடப்பட்டிருந்த வாக்கு மோசடி முயற்சிகளும் இறுதிக் கட்டங்களில் தவிடுபொடியாக்கப்பட்டிருக்கின்றன.
தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய மனவுறுதியோடு, எந்தக் கட்டத்திலும் வளைந்து கொடுக்காததில் மட்டுமன்றி, மாறும் தன்மை கொண்டிருந்த களநிலவரங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்தி சாதூரியமாக அவர் காய்களை நகர்த்தியதில் விளைந்ததே மைத்திரியின் இந்த வெற்றி என்பதே உண்மை.
ஜனநாயகத்துக்கும் இலங்கையின் தேர்தல்களுக்கும் என்ன தொடர்பிருக்கப் போகிறது என்கிற கடந்த இரு தசாப்த கால ஐயம் களையப்பட்டு, ஜனநாயகம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது இந்த ஜனாதிபதித் தேர்தல்.
சந்திரிகா, சோபித தேரர், ரணில், மைத்திரி, ராஜித, மங்கள, சம்பிக, ரத்ன தேரர் எனப் பலர் ஜனாதிபதித் தேர்தல் என்கிற மேற்படி சதுரங்க விளையாட்டை வெகு லாவன்யமாக ஆரம்பித்து விளையாடியபோதும், வெற்றியைத் தொட்ட ஆட்ட முடிவில் ஏனோ தனித்து மிளிர்ந்து ஜொலித்தவர் தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரியதான்.
தேர்தலின் இறுதிக்கட்ட இரவுகளில் அவர் இலேசாகக் கண்ணயர்ந்திருந்தாலும் கூட, பொது எதிரணியின் தேர்தல் வெற்றியை ஆளுந்தரப்பு கபளீகரம் செய்திருக்கும். அதற்கான அடையாளங்கள் தென்பட்டதற்கான சாட்சியங்கள் நிறையவும் உண்டு..
2010 ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் ஆணையாளராக இருந்த தயானந்த திஸநாயக்க போலன்றி, அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், ஜனாதிபதித் தேர்தலை நீதியாக நடத்த வேண்டும் என்பதில் மஹிந்த தேசப்பிரிய இம்முறை உறுதியாகவே இருந்தார்.
வாக்கு மோசடியில் ஈடுபடுபவர்களை, தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணையாளர் இம்முறை விடுத்த உத்தரவு, ஆளுந்தரப்பு உட்பட்ட பலருக்கும் கொடுக்கப்பட்ட முதல் அதிர்ச்சி வைத்தியம். அது சாதாரணமானதொன்றுமல்ல..
வாக்கு மோசடிகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் அல்லது சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்ற வழமையான தேர்தல் ஆணையாளரின் எச்சரிக்கைகளை.த் தாண்டி, மஹிந்த தேசப்பிரியவின் குரல் இம்முறை கடுமையாகவே ஒலித்தது..
அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்தவின் தரப்பாயினும், வாக்கு மோசடி செய்தால் நெற்றியில் சுட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் தேசப்பிரிய விடுத்த உத்தரவில், மோசடிக்கு துணிந்திருந்த ஆளுந்தரப்பு தொண்டர்கள் இம்முறை அச்சம் மேலோங்க பின் வாங்கியதையும் அவதானிக்க முடிந்தது. .
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போலவே, இத்தேர்தலில் வெறும் 4.5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே மைத்திரி, மஹிந்தவை வென்றிருக்கிறார். (மைத்திரி : 62,17,162 வாக்குகள் (51.28%), மஹிந்த : 57,68,090 வாக்குகள் (47.58%))
இந்நிலையில், இச்சிறு தொகையை மோசடி செய்வதன் ஊடாக மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கும் மஹிந்த தரப்பு யோசித்திருக்கிறது..அதற்கான நடவடிக்கைகளும் அன்றைய நடுநிசியிரவில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் இம்முறை அளிக்கப்பட்ட 13,11,694 வாக்குகளில், மைத்திரி 7,25,073 வாக்குகளையும், மஹிந்த 5,62,614 வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில், மைத்திரி 1.5 இலட்சம் வாக்குகளால் முன்னிலையில் இருந்தார்.
கொழும்பு மாவட்டத்துக்கான வாக்கெண்ணும் பணிகள் திரித்துவ மற்றும் டீ.எஸ். சேனநாயக்கா ஆகிய இரு கல்லூரிகளிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறிப்பிட்ட இரவு 1.00 மணியளவில் டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரியை சுற்றி வளைத்திருந்த மஹிந்த சார்பு உளவுப் பிரிவினர், இரவு 2.00 மணியை அண்மிக்கும்போது கல்லூரிக்குள் நுழைந்து வாக்கு மோசடியொன்றில் ஈடுபட முயற்சித்த தறுவாயில், தேர்தல் ஆணையரின் கடும் முயற்சியால் அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
13.57,143 வாக்குகள் அளிக்கப்பட்டு, மைத்திரி மஹிந்தவை விடவும் 5000 வாக்குகளால் முன்னிலையில் இருந்த கம்பஹா மாவட்டத்திலும் இதுபோன்றதோர் சதி முயற்சி அன்றைய இரவில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
இத்தேர்தலில் தேர்தல் ஆணையாளர் மட்டும் கொஞ்சம் வளைந்து கொடுத்திருந்தால் அல்லது பாராமுகமாக இருந்திருந்தால் மைத்திரியின் வெற்றி, அந்த ஓரிரவுக்குள்ளேயே மழுங்கடிக்கப்பட்டிருக்கும். ஆக, இத்தேர்தலின் நட்சத்திர நாயகனே (ஹீரோ) மஹிந்த தேசப்பிரியதான் என்று சுட்டுவதும் தப்பில்லை.
இனி, இக்கட்டுரையின் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்ட அடுத்த தலைப்புக்களிலும் கூட இத்தேர்தலை ஆராயலாம்.
ஆளுந்தரப்பு கட்சியின் சிரேஷ்ட முக்கியஸ்தர்கள், தேர்தலுக்கு அவசரப்பட வேண்டாம் என மஹிந்தவை ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தியிருந்தனர்.
ஆயினும், எவர் பேச்சையும் கேட்காமல் தமது ஆஸ்தான ஜோதிடர்களை மட்டுமே அதிகம் நம்பி இம்முறை களமிறங்கியிருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மந்திர தந்திரங்களை விஞ்சிய மஹேசன் தீர்ப்பு, ஜோதிடம் மற்றும் அதன் மீதான நம்பிக்கையைப் பொய்ப்பித்திருக்கிறது.
மட்டுமன்றி, தொடர்ந்து இன்னும் எட்டு வருடங்களுக்கு “ராஜாவாட்டம்” ஒரு வாழ்க்கை வாழலாம் என்றிருந்த அவரது பேராசை பெரும் நஷ்டமாகி, அது அவரது பதவிக்காலம் நிறைவெய்துவதற்கு இரு வருடங்களுக்கு முன்பே அவரைத் தூக்கிக் கடாசியிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுபோன முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதி என்கிற வரலாற்றின் அவப்பெயரையும், இழுக்கையும்கூட இந்த மூன்றாம் தவணைப் போட்டியூடாக மஹிந்த ராஜபக்ஷ சுமக்க நேரிட்டிருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
மஹிந்தவின் எதேச்சதிகார ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் நெஞ்சு பொறுக்காமல் இட்டு, அவரைத் துரத்தி வந்த சாபங்கள்கூட இம்முறை விதி வலியது என்பதை இத்தேர்தலினூடாக உணர்த்தியிருக்கின்றன.
வடக்கு தமிழர் மீதான ஓரவஞ்சனையும் அநியாயங்களும், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமும், பொதுபலசேனாக்களுக்கு உயிரூட்டியமையும்…. இத்தனை சீக்கிரம் தம்மைக் காவு கொல்லும் என மஹிந்தவோ, கோத்தாவோ நினைத்திராத நிலையிலேயே…..விரல் நொடிக்கும் பொழுதில் தேர்தல் களம் உட்பட்ட சகலமும் அவர்களுக்கு எதிராக மாறி…. ஞானசாரர்கள் வெட்டிய குழி இம்முறை அவர்களைப் பலியெடுத்திருக்கிறது என்றும் கூடச் சொல்லலாம்.
இத்தேர்தலின் ஊடாக மைத்திரியின் தலைதேடி வந்தமர்ந்திருக்கும் கிரீடம் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் சூட்டியது என்பது நிதர்சனம். அதேநேரம், இலங்கையில் இனவாதம் கலந்த காழ்ப்புணர்ர்ச்சி பெரும்பான்மை பெளத்த - சிங்கள சமூகத்தவரிடையே வேகமாகப் பரவி வருகின்றது என்பதையும் இத்தேர்தல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
மைத்திரி பெற்ற 51.28 வீத வாக்குகளில், 12 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுக்குச் சொந்தக்காரர்கள் தமிழ். முஸ்லிம் சிறுபான்மையினர் என்கிற அதேநேரம், மஹிந்த பெற்ற 47.58 வீத வாக்குகளில் 45 வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மை பெளத்த சிங்களவர்களாலேயே அளிக்கப்பட்டிருக்கின்றன.
செல்லுபடியான வாக்குகளில் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெளத்த சிங்களவர்களது வாக்குகள் மஹிந்தவுக்கே அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், மைத்திரியை விட மஹிந்தவையே பெளத்த சிங்களவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதையும் இத்தேர்தல் உணர்த்தியிருக்கிறது.
யுத்தத்தை முடித்த கெளரவத்துக்காக சரிபாதி பெளத்தர்கள் இம்முறையும் மஹிந்தவுக்கு வாக்களித்திருந்தாலும், ஆளுந்தரப்பு உசுப்பேற்றிய இனவாதமே இம்முறை மஹிந்தவுக்கு ஆதரவாக பெளத்த சிங்கள வாக்குகளை அதிகரிக்கச் செய்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சர்வாதிகார குடும்ப ஆட்சி, ஊழல் மோசடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நிறைவேற்று ஜனாதிபதி ஒழிப்பின் தேவை என ஜாதிக ஹெல உறுமய உட்பட்ட பொது எதிரணியும், மக்கள் விடுதலை முன்னணியும் நாட்டின் நலன் கருதிய யதார்த்தம் தொடர்பில் எத்தனை கூப்பாடு போட்டும், பெரும்பான்மை சிங்கள பெளத்தர்களை அதிகம் ஈர்த்து, அவர்களது மனசுகளை வென்றிருப்பது இம்முறையும் இனவாதம்தான்.
வெற்றி வாய்ப்பை நழுவ விட்டிருந்தாலும், நாட்டின் முழுமொத்த 160 தேர்தல் தொகுதிகளில் 90 தொகுதிகளை இம்முறை மஹிந்த ராஜபக்ஷவே கைப்பற்றியிருக்கின்றார். இவை பெரும்பான்மை பெளத்த சிங்களவர்கள் செறிந்து வாழும் தொகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கதே.
இனவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர்தான் இத்தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தாலும், பெரும்பான்மையினரிடத்தில் இனவாதம் மேலும் ஒரு படி மேலே வளர்வதற்கும் இத்தேர்தல் காரணமாகியிருக்கிறது. .
இம்முறை, சிறுபான்மையினரின் வாக்குகள் தொடர்பில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருந்த மஹிந்த ராஜபக்ஷ, இனவாதத்தை விதைப்பதன் ஊடாக தனி பெளத்த சிங்கள வாக்குகளில் இருந்தே 51 வீதத்தைப் பெற்று வெல்லலாம் என்றும் ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தார். ஆனால், அக்கணக்கு இம்முறை தப்புக் கணக்காகியிருக்கிறது.
ஆனாலும், பொது எதிரணியில் 49 கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் கூட்டுச் சேர்ந்திருந்த நிலையில், சில இனவாத அமைப்புக்களோடு மட்டும் தனியாளாய் களத்தில் நின்ற மஹிந்த மயிரிழையில்தான் தோற்றிருக்கிறார். ஆக, இனவாத அஸ்திரம் அவருக்கு கைகொடுக்கத்தான் செய்திருக்கிறது.
இந்த இனவாதப் போக்கு தொடர்ந்து வலுப்பெற்று வளருமாயின், இனி வரும் காலங்களில் சிறுபான்மைதான் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி என்ற நிலைமையும் மாற்றம் பெறலாம். (நிறைவு)
Nawamani Weekly January 2015

No comments:
Post a Comment