Monday, September 20, 2021

ஜனநாயகப் போராட்டமும் தடுமாறும் எதிரணிகளும்


 மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
பொதுவாக, சகலரும் எதிர்பார்த்திருந்ததற்கு அமைவாகவே…. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இனி, மத்தியமயப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் ஊடாக தனக்கு வேண்டிய விதத்தில் நாட்டை ஆளப் பழகியிருக்கும் ஆளுந்தரப்பு, சரியோ பிழையோ சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வெல்வதற்கு முனைப்புக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையின் 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் ஊடாகவே மூன்றாவது தடவையாகவும் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 18வது அரசியல் அமைப்பின் கீழ் மூன்றாம் தவணை போட்டிக்கான சட்டவிளக்கத்தை உச்ச நீதிமன்றத்திடம் கடந்த வாரம் கோரியிருந்தார்.

அதற்கமைவாக, எதிரணிகளின் குற்றச்சாட்டுக்கு ஏற்பவே இந்த இரகசிய சட்டவிளக்கம் அலரி மாளிகைக்கு அனுப்பப்பட்டு, “ மஹிந்த போட்டியிடுவதற்கு தகுதியானவர்தான். சட்டச் சிக்கல்கள் இல்லை” என்று சபை முதல்வரால் பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

18வது அரசியல் அமைப்பின் கீழ், யதார்த்தமான விவாதங்களின்படி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாம் தவணைக்கு போட்டியிட முடியாது. என்கிற தர்க்கங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஏனெனில், இரண்டாவது தடவையாக பதவியேற்ற போதே அவர், முன்னைய சட்டத்தின்படி எதிர்கால ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிடும் தகுதியை இழந்து விட்டார் என்பதே சர்வதேச சட்ட வல்லுநர்கள் உட்பட்ட பலரினதும் வாதமாக இருந்தது.

மட்டுமன்றி, மஹிந்த ராஜபக்‌ஷ இரண்டாம் தவணை பதவிக்கு வந்ததன் பின்பே 18வது திருத்தத்தை கொண்டு வந்ததாகவும், எனவே, மஹிந்த மூன்றாம் தடவை போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என்றும் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த வாதத்தை முறியடித்து, மூன்றாம் தவணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஜனாதிபதி மிகப்பெரிய சூழ்ச்சியை மேற்கொண்டிருந்ததாக மக்கள் விடுதலை முன்னணி உட்பட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுமிருந்தன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இது தொடர்பில் பெரும் கவலை தெரிவித்திருந்ததோடு, உச்சநீதிமன்ற பதிவாளரின் வெறும் இருநாள் காலக்கெடுவுக்குள் ( கடந்த 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி வரைக்குமான கால எல்லை. அதிலும் இடைப்பட்ட 06ஆம் திகதி பொது விடுமுறை தினமும் கூட) தம்மால் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாதென்றும் அது விசனம் தெரிவித்திருந்தது.

சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 14000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆலோசனைகளை வெறும் இரு நாட்களுக்குள் பெறுவது என்பதும், எழுத்துமூல வாதங்களை முன்வைப்பது என்பதும் அதன் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்ததுபோலவே, அசாத்தியமானதும் அசெளகரியம் மிக்கதும்தான்.

இந்நிலையில், ஜனாதிபதியின் இக்கோரிக்கை உச்ச நீதிமன்றில் பகிரங்க விவாதத்திற்கு விடப்பட வேண்டும் என்கிற வலியுறுத்தல்கள் தாண்டி. உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற ஆலோசனைக்கு மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்புக்களும் இல்லாமல் செய்யப்பட்டு, “ மஹிந்தவினால் போட்டியிட முடியும் ” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சட்ட விளக்கம் பெருத்த நகைச்சுவை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் ஆதரவாகவும் எதிராகவும் 38 விரிவுரை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே. ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக்க, ஈவா வனசுந்தர, ரோஹினி மாரசிங்க, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கை ஆராயப்பட்டிருக்கிறது.

இந்த நீதியரசர் குழுவில் வெளிநாடு சென்றிருந்த சலீம் மர்சூக் மாத்திரமே இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் தி.மு. ஜயரத்ன, சட்டத்தரணிகள் கோமின் தயாசிறி, க்ஷனிகா ஹிரிபுரேகம, ஜே.சி. வெலியமுன, பேராசிரியர் சுதந்த லியனகே, பேராசிரியர் சம்பத் பண்டார, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, சுனில் வட்டகல, ஊடகவியலாளர் கே.டப்ளியூ. ஜனரஞ்சன, கலாநிதி என்.எல்.கே. கருணாரத்ன உள்ளிட்ட 38 பேர் எழுத்து மூலமான வாதங்களை இங்கு முன் வைத்திருந்தனர்.

இதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய வேண்டுமென்றால், அதனை விசாரணை செய்வதற்கு குறைந்தபட்சம் ஐந்து பேரடங்கிய நீதியரசர்கள் குழு வொன்றை உச்ச நீதிமன்றம் நியமிக்க வேண்டும்.

எனினும், இலங்கையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் 11 நீதியரசர்களே இருக்கின்ற நிலையில், அவர்களில் ஒருவர் அடுத்த மாதம் ஓய்வு பெறவிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

எஞ்சிய 10 நீதியரசர்களில் ஏழு பேர் ஏற்கனவே சட்டவிளக்க விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கின்றமையால், மிகுதியாகவுள்ள மூன்று நீதியரசர்களைக் கொண்டு மேன்முறையீட்டுக்கான நீதியரசர் குழுவை அமைக்க முடியாதென்றும், எனவே இந்த வழக்கில் இயல்பாகவே மேன்முறையீடு செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எது எப்படியோ, மஹிந்த மூன்றாவது முறையாகவும் களமிறங்கப் போவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதேநேரம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி இரண்டாம் திகதியன்று இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸின் இலங்கை விஜயத்துக்கு வழிசமைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்பரசர் ஜனவரி 13ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.

தேர்தல் ஒன்றின் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும்போது பாப்பரசரின் விஜயம் சாத்தியமாகாது என்ற அடிப்படையிலேயே இந்தத் திகதி முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ராசியான நாளாக கருதப்பட்ட ஜனவரி எட்டாம் திகதியே ஜனாதிபதி தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 23ஆம் திகதி வரை ஜனாதிபதிக்கு ராசியான நாட்கள்தான் என்று ஜோதிடர்கள் கூறியதன் பின்னரே இந்தத் திகதி ஆலோசிக்கப்பட்டதாம்.

இந்நிலையில், எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார்.

எப்போதுமில்லாதவாறு இம்முறை ஜனாதிபதித் தேர்தலை மையமாக வைத்து, அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விளம்பரங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிட சுமார் 26 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்படவுள்ளதோடு, இதற்காக நாளாந்த பத்திரிகைகளில் விசேட இணைப்பிதழ்களை வெளியிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அனைத்து திணைக்களங்கள் மற்றும் அதிகார சபைகள், கூட்டுத்தாபனங்கள் என்பவற்றின் சார்பில் குறித்த பிறந்த நாள் வாழ்த்து விளம்பரங்கள் வெளியிடப்படவுள்ளதோடு, எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை முன்வைத்து இந்த விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் அறியக் கிடைக்கிறது.

மட்டுமன்றி, தேர்தல் காலங்களில் எப்போதும்போல இப்போதும் அலரி மாளிகையில் அன்னதான வைபவங்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளன. தேர்தல் பிரசாரம் மற்றும் நடவடிக்கைகளுக்கென நாடளாவிய ரீதியில் காரியாலயங்களை அமைக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்காக உழைத்த அமெரிக்க நிறுவனமொன்றே இம்முறை மஹிந்தவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. ஆக, மஹிந்த தரப்பினர் ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகளை வெகு சாமார்த்தியமாகவும், திட்டமிட்டும் முன்னெடுத்திருப்பதாகவே படுகிறது.

மட்டுமன்றி, எதிரணி உறுப்பினர்களைத் தம் பக்கம் இழுத்துக்கொள்ளும் முயற்சிகளிலும் ஆளுந்தரப்பு வெகு தந்திரோபாயத்தோடு காய்களை நகர்த்துகிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளும் கட்சிக்கு மாகாண சபை உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்முதல் கட்டமாக தம்மை 50 மில்லியன் ரூபா விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்ததாக மேல் மாகாண சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் நடிகருமான நளின் பிரதீப் உடவல பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் தமது முழுக் குடும்பத்துக்கும் கனேடிய, அவுஸ்திரேலிய அல்லது நெதர்லாந்து பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் உறுதியளித்த்தாக உடவல, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் மூன்று மாகாணசபை உறுப்பினர்கள் ஆளுந்தரப்பின் பணத்துக்கு பலியாகியிருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயான் விதானகேயும் அரசை நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

ஆயினும், எதனையும் கண்டுகொள்ளாத போக்கில் ஆளுந்தரப்பு தனது ஆட்டத்தை மட்டும் தொடரத்தான் செய்கிறது.

இனி, வெற்றிக்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராகியிருக்கும் ஆளுந்தரப்பு தேசிய இறைமையை பிரதான பிரச்சினையாகத் தூக்கிப்பிடித்து வாக்கு வேட்டையில் இறங்க வேண்டியதுதான் பாக்கி.

மட்டுமன்றி, வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்கம் விரும்பி வேண்டுவது போன்று சிந்திப்பதை உறுதிசெய்ய, புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளதாக கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்திருக்கிறார்.

எனவே, ஜெனீவாவில் யுத்தக் குற்ற வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் ஊடாக பொதுமக்களிடத்தில் தேசியத்தினை உசுப்பிவிட்டு வாக்குகளைச் சேகரிப்பதும் ஆளுந்தரப்புக்கு அனுகூலமாகும் என்றே படுகிறது.

2010 தேர்தலில் போன்று சிங்கள பெளத்த வாக்குகளை இம்முறை அமோகமாகப் பெற முடியாது என்று உணந்திருக்கும் மஹிந்த தரப்பினர், அதனை சரிக்கட்டும் நோக்கில் இறைமையும் தேசியமும் கலந்த இனவாதத்தை அஸ்திரமாகக் கையிலெடுப்பார்கள் என்றே அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்க முடியாது என்றிருந்த பரவலான கருத்து தற்போது வலுவற்றதாகியிருப்பது உண்மைதான். அண்மைய ஊவா தேர்தலின்போது மொனராகலையில் 23.4 வீதமும், பதுளையில் 21 வீதமுமான சிங்கள பெளத்த வாக்குகள் அரசாங்கத்தை விட்டு நழுவிப் போயிருக்கின்றன.

மட்டுமின்றி, இதே ஊவாவில் ஐ.தே.கவின் சிங்கள பெளத்த வாக்குகள் 19 வீதத்தினால் வளர்ச்சி கண்டிருப்பதெல்லாம் அரசாங்கத்தின் மீதான சிங்கள பெளத்தர்களின் அதிருப்தியின் வெளிப்பாடுதான்.

மட்டுமன்றி, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் ஜனநாயகத்துக்கான போராட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. இது மிகவும் ஆரோக்கியமான விடயமென்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரைகாலமும் அமைதியாக இருந்த மக்கள் தற்போது விழித்துக் கொண்டிருப்பதை ஊவா தேர்தல் உணர்த்தியதாகவும், அங்கு அரசாங்கத்தினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டபோதும் மக்கள் அவற்றை புறந்தள்ளிவிட்டு அரசாங்கத்துக்கு எதிராக வாக்குகளை பயன்படுத்தியமை ஜனநாயகம் மீதான விழிப்புணர்வென்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அதுபோன்றே 2015 வரவுசெலவுத் திட்டத்திலும் அரசாங்கம் அரச ஊழியர்களைக் கவரும் வண்ணம் பல வெகுமதிகளை வழங்கியுள்ளது. எனினும் தற்போது நாட்டில் ஜனநாயகத்துக்கான தேவை ஒன்று இருப்பதையே மக்கள் முன்னிலைப்படுத்துகின்றனர்.

அதேநேரம், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும், அதுரலியே ரத்ன மற்றும் சோபித தேரர்களின் ஜனாநாயகப் போராட்டத்துக்கு சிங்கள பெளத்த மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவது ஆளுந்தரப்புக்கான வாக்குகளை மேலும் சிதைக்கவே செய்யும்.

ஜாதிக ஹெல உறுமய அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்ட வெறும் 48 நாட்களிலேயே, அக்கட்சி 2004 ஏப்ரல் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 552,724 வாக்குகளைப் பெற்று, 09 பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு அனுப்பிய விடயம் ஒன்றும் அசாதாரணமானதல்ல.

இத்தேர்தலில் இக்கட்சி பெற்ற 06 வீத வாக்குகளும் சிங்கள பெளத்த மக்களாலேயே அளிக்கப்பட்டுமிருந்தன.

இந்நிலையில், இக்கட்டுரையை எழுதும் தறுவாயில், ரத்ன ஹிமி இம்முறை ஆளுந்தரப்போடு முரண்படும் அடையாளம் தென்படுகிறது. அவரது முகநூல் மற்றும் மின்னஞ்சல்கள் முடக்கப்பட்டுள்ளன. நிதி மோசடி வழக்கொன்றை அவர்மீது திணிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.,

இப்படி…. இவர்மீதான நெருக்குவாரங்கள், இவர் ஆதரிக்கும் எதிரணிக்கான பெளத்த சிங்கள வாக்குகளை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

மாறிவரும் இந்த சிங்கள பெளத்த மக்களின் மனப்போக்கும், மஹிந்தவுக்கு எதிரான இன்றைய சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களின் வாக்குகளும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. சார்பு எதிரணியை ஆட்சிபீடம் ஏற்றும் நிலையொன்று தற்போது உருவாகியிருந்தாலும், அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது எதிரணி தடுமாறிக் கொண்டிருக்கும் போக்கையே தற்போது அவதானிக்க முடிகிறது.

தற்போதைய சாதகமான சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பொருத்தமட்டில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சி எவருடனும் கூட்டுச் சேர வேண்டியதில்லைதான். கட்சிக்குள் ஒற்றுமையும், சிறந்த வேலைத் திட்டங்களும் ஒருங்கே அமையும் பட்சத்தில் பொதுமக்கள் விரும்பக்கூடியதோர் தனி வேட்பாளரை முன்னிறுத்தியே அவர்களால் வெற்றிபெறவும் முடியும்.

ஆயினும், கட்சிக்குள் மீளவும் வலுத்திருக்கும் உட்பூசல்கள், அக்கட்சியை ஒரு பொது வேட்பாளரை நோக்கி நகர்த்தியிருக்கிறது.

ஐ.தே.க சார்பில் தனி வேட்பாளராகவோ இல்லை பொது வேட்பாளராகவோ ரணில் விக்கிரமசிங்க களமிறங்காத பட்சத்தில், சஜித் பிரேமதாச தனி வேட்பாளராகப் போட்டியிடக்கூடும் என்கிற, அனேக பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலைமையும் தற்போது மாற்றம் பெற்றிருக்கிறது.,

ரணிலை விரும்பாத சில எதிரணி சிறு கட்சிகளின் விருப்பத்தின் பேரில், மாதுளுவாவே சோபித தேரர், அதுரலியே ரத்ன தேரர் மற்றும் சந்திரிகா குமாரணதுங்கவின் ஆசிர்வாதத்தோடு கரு ஜெயசூரியவே பொது வேட்பாளராகக் களமிறக்கப்படக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.

எதிர்காலத்தில் தனது புதல்வரை அரசியலுக்கு இழுக்கும் எண்ணத்தில் இருக்கும் சந்திரிகா, எத்தனை தூரம் இதய சுத்தியோடு கருவை அல்லது ஐ.தே.க. சார்பானதோர் வேட்பாளரை ஆதரிப்பார் என்பதும் சந்தேகத்துக்குரியதே.

சஜித்தை எதிர்பார்த்திருந்த மக்கள் கருவின் பிரசன்னத்தை எளிதில் ஜீரணிக்க மாட்டார்கள்தான். ஆயினும், புலி சாயங்கள் ஏதும் பூசப்படாத அதேவேளை பாரம்பரிய தேசிய உடையில் உலாவரும் கருவை ஆதரிக்கும் ஒரு கட்டத்துக்கு சிங்கள பெளத்தம் உட்பட்ட சிறுபான்மையினரும் நகர்ந்து வரக்கூடும்.

எவை எப்படியோ, தனி வேட்பாளரோ பொது வேட்பாளரோ இவர்தான் என்று நிச்சயிக்கப்பட்டவராக இன்னும் அறிவிக்கப்படாத எதிரணியின் அல்லது பொது அணியின் தடுமாற்றம், ஐ.தே.கவின் உட்பூசல்கள் மற்றும் சஜித் மீதான ஓரவஞ்சனை, எதிரணிகள் ஒரு தளத்தில் நின்று திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த முடியாத அளவில் பயமுறுத்தும் தேர்தலுக்கான ஒரு குறுகிய கால எல்லை, நிதி நெருக்கடி….போன்ற துரதிர்ஷ்டங்கள் மீண்டும் ஆட்சியமைக்கும் விதத்தில் ஆளுந்தரப்புக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திவிடவும் கூடும்.

அப்படியாயின், சுயநலம்மிக்க அரசியல்வாதிகளின் தகிடு தத்தங்களில், ஜனநாயகப் போராட்டத்தில் மீண்டும் பலியாகும் பெரும் பரிதாபத்துக்குரியவர்கள் இம்முறையும் நலிந்துபோன பொதுமக்களாகத்தான் இருப்பார்கள். (நிறைவு) 
நவமணி வாரயிதழ்

No comments:

Post a Comment