கோத்தாவுக்கான வெற்றி வாய்ப்புக்கள் அதிகமா?
மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
பொதுமக்களின், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தின் உள்ளத்தை உறுத்தும்
அம்சமாக மாறிக்கொண்டிருக்கிறது தேர்தல் களம்.
சிறுபான்மையினரை துணுக்குற வைக்கும் விதத்தில்தான் அநேக
காட்சிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இல்லை
அரங்கேற்றப்படுகின்றன.
மேற்படி சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியின் மந்திரங்களும்
தந்திரங்களால் மேவி விடப்பட்டிருக்கின்றன.
அதற்கு அண்மைய முக்கிய உதாரணமொன்றுதான் மதுமாதவின் கட்சி
உறுப்புரிமை நீக்கம்.
பிரபல பாடகர் மதுமாதவ அரவிந்த தீவிர பெளத்த தேசியவாதியாக
அறியப்பட்டவர். மஹிந்த ராஜபக்ச குடும்பத்தோடு மிகவும் நெருங்கிப்
பழகும் இவர், பொது பல சேனாவின் தீவிர ஆதரவாளரும் கூட.
2014 அளுத்கம கலவரத்தை உசுப்பேற்றிய முக்கிய சூத்திரதாரியாக
அறியப்பட்டவர்.
அண்மைய மினுவங்கொடை கலவரத்தில் ஈடுபட்ட காடையர்களுக்கு
பின்புலமாக இருந்து உற்சாகமூட்டிய குற்றச்சாட்டும் மதுமாதவ மீது உண்டு.
இது தொடர்பான காணொளிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களிலும்
வெளியாகியிருந்தன.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் துரோகியாகவும், எதிரியாகவும் முத்திரை
குத்தப்பட்டுள்ள மதுமாதவ, ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய
ராஜபக்ஷ களமிறங்கியிருக்கும் தாமரை மொட்டு கட்சியின்
உறுப்புரிமையை விலக்கிக் கொண்டுள்ளார்.
சிறுபான்மைச் சமூகத்துக்கு எப்போதும் ஆபத்தானவர் எனக் கருதப்படும்
மதுமாதவவின் இராஜினாமா , முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக்
கொள்வதறகான அக்கட்சியின் திரைமறைவுத் தந்திரம் என அவதானிகள்
தெரிவிக்கின்றனர்.
இதற்கு நேரடிச் சான்று கிடையாது. ஆனால்,, சந்தர்ப்பச் சான்றுகள் உண்டு.
இப்படி, ஐ.தே.க மீதான சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்குகளைக் கூறு
போடும் அல்லது தன் வசப்படுத்திக்கொள்ளும் திட்டங்கள் பல மொட்டு
கட்சியின் முக்கியஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியக்
கிடைக்கின்றது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள், ஆர்வலர்கள் இதன் பொருட்டு
களமிறக்கி விடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முன்னாள்
அமைச்சர்களான பசீர் சேகுதாவூத், அதாவுல்லா, மேல் மாகாண ஆளுநர்
முஸம்மில், கோத்தபாய ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவும், சட்ட
ஆலோசகருமான ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி ஆகியோர்
ஐ.தே.க..மற்றும் ஐ.தே.க. சார்பான ரவூப் ஹக்கீம்,ரிசாத் பதியுதீன்களின்
வாக்கு வங்கிகளை சிதறடித்து, அவற்றை கோத்தாவுக்கு சார்பாகப்
பயன்படுத்திக் கொள்வதற்கான பிரயத்தனங்களில் நேரடியாகவே
ஈடுபட்டுள்ளனர்.
தனி மனிதர் செல்வாக்கு மூலமாகவும் ஆளுமை அரசியல் வழியாகவும் தீவிர
மாற்றங்களை ஏற்படுத்த முடியாதுதான். ஆனாலும்,, கோத்தாவுக்கிருக்கும்
பெரும்பான்மை பெளத்தர்களின் இன்றைய மிகைத்த ஆதரவு மீதான
நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலுமே மேற்படி நபர்களும் காய்களை
நகர்த்துகிறார்கள்.
மறுபுறம், ஹக்கீம், மற்றும் ரிசாதின் கோட்டைகளை இலக்கு வைத்த
தாக்குதல்களாகவும் இவற்றை அனுமானிக்கலாம்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற கோத்தாவுக்கான பிரசாரக் கூட்டத்தில்,,
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, இதன் பிறகும் முஸ்லிம்களை ஏமாற்றி
அரசியல் செய்ய முடியாது என்கிற தொனியில் ஹக்கீம்,ரிசாதை
மறைமுகமாக சாடியுள்ளமை விரோதம் போக்கும் அரசியல் எனவும்
சுட்டலாம்.
மட்டுமன்றி, கோத்தாவின் அரசியலில் சட்டத்தரணி அலிசப்ரி முஸ்லிம்களின்
தலைமையை ஏற்க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி, இன்று முஸ்லிம்களின் மாற்றுத்தெரிவு கோத்தாவின் வெற்றியைக்
குறிவைத்து எய்யப்படுகிறது.
எவை எப்படியானபோதும், இப்போதைக்கு சஜித்தை விடவும் செல்வாக்கு
மிகுந்தவரான தோற்றம் கோத்தாவுக்கு இருப்பதையும் மறுதலிக்க முடியாது.
கோத்தாபயவின் குடியுரிமையைக் கேள்விக்குட்படுத்தி நீதிமன்றினை
நாடியவர்கள் முகத்தில் கரி பூசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேநேரம்,, மேற்படி நிகழ்வு கோத்தா அணியினரை புதுத் தெம்போடு
முன்னோக்கி நகரவும் செய்திருக்கிறது.
தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகள்தான் ஆட்சியை
நிர்ணயிக்கும் என்கிற கடந்த கால சந்தர்ப்பச் சான்றுகள் இம்முறை
வலுவிழக்கும் ஆபத்தும் கோலோச்சியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில்
இலவசமாக உரமானியம் வழங்குவதாகவும், விவசாயிகள் பெற்றுக்கொண்ட
அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வதாகவும்,, ஸ்ரீ லங்கா
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ
தெரிவித்திருப்பதும்,
குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறையிலுள்ள சகல இராணுவத்தினரையும்
தான் ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் விடுதலை செய்வதாக மட்டுமன்றி.
இராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகத்
தெரிவித்திருப்பதும் நிச்சயம் எதிரணியின் விக்கெட்டுக்களை வீழ்த்தவே
செய்யும்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோழமையும் கூட்டணியும் கோத்தாவுக்கான
அதீத பலம்.
கோத்தாவின் பலவீனம், சஜித்தின் பலம் தொடர்பில் அடுத்த கட்டுரையில்
ஆராய்வோம். (தொடரும்)
Nawamany Weekly 13,October 2019

No comments:
Post a Comment